குரூப் - 4 தேர்வு முடிவை டி.என்.பி.எஸ்.சி. உடனடியாக வெளியிட வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு அரசுத் துறைகளில் காலியாக உள்ள கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர் உள்ளிட்ட 11 வகையான பணிகளுக்கு 7301 பேரை தேர்வு செய்வதற்கான நான்காம் தொகுதி தேர்வு, கடந்த ஆண்டு மார்ச் மாதம் 30-ந்தேதி அறிவிக்கப்பட்டு, கடந்த ஜூலை 24-ந்தேதி நடத்தப்பட்டது.
டி.என்.பி.எஸ்.சி வெளியிட்டிருந்த அறிவிக்கையின்படி, ஜூலை மாதம் நடத்தப்பட்ட நான்காம் தொகுதி தேர்வுக்கான முடிவுகள் கடந்த அக்டோபர் மாதம் வெளியிடப்பட்டிருக்க வேண்டும். அதே மாதத்தில் சான்றிதழ் பதிவேற்றம் செய்யப்பட்டு, நவம்பர் மாதத்தில் அவை சரி பார்க்கப்பட்டு, கலந்தாய்வு நடத்தி பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டிருக்க வேண்டும்.
ஆனால், அவை எதுவுமே நடக்கவில்லை. ஜனவரி மாத இறுதியில் தான், நியமனம் செய்யப்பட வேண்டிய நான்காம் தொகுதி பணியிடங்களின் எண்ணிக்கை 9801 ஆக உயர்த்தப்படுவதாகவும், பிப்ரவரியில் முடிவுகள் அறிவிக்கப் படும் என்றும் டி.என்.பி.எஸ்.சி அறிவித்தது. குரூப்-4 தேர்வை 18.50 லட்சத்திற்கும் மேலானவர்கள் எழுதினார்கள். இவ்வளவு இளைஞர்களின் எதிர்காலம் அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் கைகளில் இருக்கும் நிலையில், அதற்கேற்ற பொறுப்புணர்வு மற்றும் வெளிப்படைத் தன்மையுடன் நடந்து கொள்ள அரசுப் பணியாளர் தேர்வாணையம் தவறிவிட்டது. அரசுப்பணி என்பது தான் தமிழ்நாட்டில் இன்று லட்சக்கணக்கான இளைஞர்களின் கனவாக உள்ளது. ஒரு போட்டித் தேர்வை எழுதிய மாணவர்கள், அதன் முடிவை அறிந்தால் தான் அடுத்தப் போட்டித் தேர்வுக்கு முழு மனதுடன் தயாராக முடியும்.
இத்தகைய சூழலில் ஒரு தேர்வை அறிவித்து, நடத்தி, முடிவுகளை அறிவிப்பதற்கு ஓராண்டை பணியாளர் தேர்வாணையம் எடுத்துக் கொள்வது மாணவர்களுக்கு கடுமையான மன உளைச்சலை ஏற்படுத்தும். அவர்களின் உணர்வுகளை தேர்வாணையம் மதிக்க வேண்டும். நான்காம் தொகுதி பணிகளுக்கான போட்டித் தேர்வு முடிவுகளை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் உடனடியாக வெளியிட வேண்டும். அதுமட்டுமின்றி, இனிவரும் காலங்களில் ஓர் அடுக்கு கொண்ட போட்டித்தேர்வுகளுக்கான அறிவிக்கை வெளியிடுவதில் தொடங்கி பணி நியமன ஆணை வழங்குவது வரையிலான அனைத்து நடைமுறைகளும் 5 மாதங்களில் முடிக்கப்பட வேண்டும். ஈரடுக்கு தேர்வு கொண்ட முதல் மற்றும் இரண்டாம் தொகுதி பணிகளுக்கான அறிவிக்கை வெளியிடுவதில் தொடங்கி நியமன ஆணை வழங்குவது வரையிலான அனைத்து நடைமுறைகளும் 9 மாதங்களில் முடிக்கப்படுவதை அரசுப் பணியாளர் தேர்வாணையம் உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
Tags:
கல்விச் செய்திகள்