சர்க்கரை நோயானது மோசமான வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்கங்களால் வரக்கூடிய ஒரு நாள்பட்ட ஆரோக்கிய நிலை ஆகும். இது கணையம் போதுமான அளவு இன்சுலினை உற்பத்தி செய்யாத போது அல்லது அது உற்பத்தி செய்யும் இன்சுலினை உடல் திறம்பட பயன்படுத்த முடியாத போது ஏற்படுகிறது.
இன்சுலின் என்பது இரத்த சர்க்கரையை ஒழுங்குப்படுத்தும் ஹார்மோன் ஆகும். கரையக்கூடிய நார்ச்சத்து என்பது ஒரு வகையான நார்ச்சத்து. இது நீரில் கரையக்கூடியது மற்றும் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தவும், ஒழுங்குபடுத்தவும் உதவுவதாக கூறப்படுகிறது. மேலும் இது இரத்த கொலஸ்ட்ரால் அளவை கட்டுக்குள் வைத்துக் கொள்ள உதவுவதாக கருதப்படுகிறது.
நார்ச்சத்து என்பது உடலால் ஜீரணிக்க முடியாத ஒரு வகையான கார்போஹைட்ரேட் ஆகும். நார்ச்சத்துள்ள உணவுகளை உட்கொள்ளும் போது செரிமான செயல்முறை எப்போதும் சிறப்பாக இருக்கும்.
ஒருவரது செரிமானம் சிறப்பாக நடைபெற்றால், அது இரத்த க்ளுக்கோஸ் அளவு சட்டென்று அதிகரிக்கும் அபாயத்தைக் குறைக்க உதவுகிறது மற்றும் இன்சுலின் வெளியீட்டை ஒழுங்குபடுத்துகிறது.
இப்போது இரத்த க்ளுக்கோஸ் அளவு அதிகரிக்காமல் இருக்க சாப்பிட வேண்டிய உணவுகள் சிலவற்றைக் காண்போம். உங்களுக்கு சர்க்கரை நோய் இருந்தால், இந்த கரையக்கூடிய நார்ச்சத்துள்ள உணவுகளை தினசரி உணவில் சேர்த்து வாருங்கள்.
வெந்தயம்
வெந்தயம் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள உதவும் அற்புதமான பொருள். இந்த விதைகளில் கரையக்கூடிய நார்ச்சத்து அதிகம் உள்ளன மற்றும் இதில் உள்ள கலவைகள் இன்சுலின் சென்சிட்டிவிட்டியை மேம்படுத்த உதவுகிறது.
அதற்கு வெந்தய விதைகளை இரவு தூங்கும் முன் நீரில் ஊற வைத்து, மறுநாள் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் உட்கொள்ள வேண்டும். இது தவிர வெந்தய கீரையை அடிக்கடி உணவில் சேர்த்து வருவதன் மூலமும் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தலாம்.
பசலைக்கீரை
பசலைக்கீரையில் நார்ச்சத்து மற்றும் பிற அத்தியாவசிய ஊட்டச்சத்தக்கள் உள்ளன. மேலும் இதில் கிளைசீமிக் இன்டெக்ஸ் குறைவாக உள்ளதால், இது இரத்த சக்கரை அளவை ஒழுங்குப்படுத்த உதவுகிறது. ஆகவே சர்க்கரை நோயாளிகள் பசலைக்கீரையை அடிக்கடி உணவில் சேர்க்க நல்ல பலன் கிடைக்கும்.
சியா விதைகள்
மிகச்சிறிய அளவிலான சியா விதைகளில் நார்ச்சத்து, ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் போன்றவை ஏராளமாக உள்ளன. இந்த விதைகளை நீரில் ஊற வைக்கும் போது, அது ஜெல் போன்று மாறுவதால், இது செரிமானத்தை மெதுவாக்கி, இரத்த சர்க்கரை அளவை நிலையாக பராமரிக்க உதவுகிறது.
எனவே சர்க்கரை நோயாளிகள் இரத்த சர்க்கரையைக் கட்டுப்படுத்த விரும்பினால், சியா விதைகளை நீரில் 30 நிமிடம் ஊற வைத்து, பின் அதில் எலுமிச்சை சாறு மற்றும் தேன் சேர்த்து குடியுங்கள்.
கொய்யாப்பழம்
கொய்யாப்பழம் ஆப்பிளை விட அதிக சத்துக்களைக் கொண்ட ஒரு சுவையான பழம். முக்கியமாக இது விலை குறைவில் கிடைக்கக்கூடிய பழம். இந்த பழத்தில் கரையக்கூடிய நார்ச்சத்து அதிகம் உள்ளன மற்றும் கிளைசீமிக் இன்டெக்ஸ் மிகவும் குறைவு என்பதால், இது இரத்த சர்க்கரை அளவு அதிகரிப்பதைத் தடுக்கும்.
ப்ராக்கோலி
ப்ராக்கோலி நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் அதிகம் நிறைந்த ஒரு சுவையான காய்கறி. காலிஃப்ளவர் போன்ற தோற்றத்தைக் கொண்ட இந்த காய்கறியில் கிளைசீமிக் இன்டெக்ஸ் குறைவு என்பதால், இது இரத்த சர்க்கரை அளவை ஒழுங்குப்படுத்த உதவுகிறது. எனவே இது சர்க்கரை நோயாளிகளுக்கான மிகச்சிறந்த காய்கறியாகும்.
நட்ஸ்
பாதாம், வால்நட்ஸ், பிஸ்தா போன்ற நட்ஸ்களில் டயட்டரி நார்ச்சத்துக்கள், ஆரோக்கியமான கொழுப்புக்கள் மற்றும் புரோட்டீன் அதிகமாக உள்ளன. மேலும் இவற்றில் கிளைசீமிக் இன்டெக்ஸ் குறைவு என்பதால், இரத்த சர்க்கரை அளவை நிலையாக பராமரிக்க உதவுகிறது. எனவே சர்க்கரை நோயாளிகள் தங்களின் இரத்த சர்க்கரை எகிறாமல் இருக்க நட்ஸ்களை ஸ்நாக்ஸ் நேரத்தில் சாப்பிடுவது நல்லது.
Tags:
உடல் நலம்