முதுமை தடுக்கும்..இளமை தரும்..பழைய சோறு..!

இது அகத்தியர் குணவாகடம் எனும் மருத்துவ நூலின் வரிகள்.- 

"ஆற்று நீர் வாதம் போக்கும்.
அருவி நீர் பித்தம் போக்கும்.
சோற்று நீர் இரண்டையும் போக்கும்"

ஆற்று நீரும் அருவி நீரும் மூலிகைகளைக் கடந்து வருவதுடன் மலைகளில் உள்ள இயற்கை தாதுக்கள் கலந்து மருத்துவத்தன்மை பெறுகின்றன. ஆனால் வாதம், பித்தம் இரண்டையும் போக்கும் வல்லமை சோற்று நீருக்கு உண்டு.

`பழைய சோறு... தமிழர்களின் பாரம்பர்ய உணவு. ஊட்டம் தரும் அந்த உணவு அரிசியில் சமைக்கப்படுவது. அரிசி உணவை பச்சரிசியில் சமைத்தால் `பொங்கல்', வேகவைத்த அரிசியில் சமைத்தால் `புழுங்கல்', மங்கல நிகழ்ச்சிகளில் சமைத்தால் `சிறு சோறு', அமங்கல நிகழ்ச்சிகளில் சமைத்தால் அது `பெருஞ்சோறு'.

உணவின் தன்மைக்கேற்ப வெண்சோறு, பாற்சோறு, உளுத்தஞ்சோறு, செஞ்சோறு, கொழுஞ்சோறு, நெல்சோறு, புளிச்சோறு, ஊன்சோறு என்றார்கள். சோறு, அடிசில், அழினி, கூழ், அவிழ், கொன்றி, நிமிரல், புழுங்கல், பொம்மன், மிதவை போன்றவை சைவ வகை உணவுகள். இதில் கஞ்சியும் ஓர் உணவு.

கஞ்சி உணவு அரிசிச் சோறும் தண்ணியும் கலந்த ஒரு கலவை. கஞ்சியில் உள்ள நீரை மட்டும் காலையில் அருந்துவார்கள். இதை நீராகாரம் என்பார்கள். பழைய கஞ்சியை நீராகாரம், பழங்கஞ்சி, பழந்தண்ணி, புளிச்ச கஞ்சி, பழஞ்சோறு, பழையது, கஞ்சித்தண்ணி என்பார்கள்.

பழைய சோறு பாரம்பரியமானது. தெலுங்கர், மராத்தியர்களின் ஆதிக்கத்துக்குப் பிறகு எண்ணெய்ப் பலகாரங்களும், முஸ்லிம்கள், ஐரோப்பியர்கள் காலத்தில் கார உணவுகளும், புழக்கத்துக்கு வந்தன. மேல்நாட்டினரின் ஃபாஸ்ட் ஃபுட் உணவுகள் நம்மை ஆட்கொள்ள பாரம்பர்ய உணவுகளை விட்டு விலகினோம். எத்தனை மாற்றங்கள் வந்தாலும் பழைய சோறு சத்தானது.

பழைய சோறு குறித்து அமெரிக்க ஊட்டச்சத்து விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டதில் எண்ணற்ற சத்துகளைக் கண்டறிந்தனர். மகத்துவம் மிக்க பழைய சோற்றுக்குப் பதிலாக இட்லி, தோசை, பூரி, சப்பாத்தி, நூடுல்ஸ் என காலத்துக்கு ஏற்ப உணவுகளை மாற்றி விட்டோம்.

பழைய சோற்றில் வைட்டமின் பி6, பி12 போன்ற சத்துகள் நிறைந்துள்ளன. நோய் எதிர்ப்பு சக்தி நிறைந்த இந்த உணவில் உள்ள நல்ல பாக்டீரியா உடல் உள்ளுறுப்புகளை பாதுகாக்கும். நல்ல பாக்டீரியாக்கள் நிறைந்த இந்த உணவு செரிமானக்கோளாறுகளைப் போக்கி செரிமான மண்டலம் சிறப்பாகச் செயல்பட உதவும்.


நீண்டநாள் இளமையுடன் இருக்கவும், முதுமை ஏற்படாமல் தடுக்கவும், எலும்புகளை வலிமைப்படுத்தவும், உடல் சூடு ஏற்படாமல் தடுக்கவும், மலச்சிக்கல் பிரச்னை நீக்கவும், சோர்வு நீக்கி சுறுசுறுப்பு தரவும், ரத்த அழுத்தம் கட்டுப்படுத்தவும், வயிற்றுப்புண் ஏற்படாமல் தடுக்கவும், வாதம், பித்தக் கோளாறுகளில் இருந்து விடுதலை தரவும் உதவக்கூடியது பழைய சோறு.

சத்துகள் நிறைந்த, தாது உப்புகள் நிறைந்த பழைய சோற்றுக்கு சம்பா அரிசி ஏற்றது. அதிலும் கைக்குத்தல் அரிசி மிகவும் சிறப்பு. முதல் நாள் வடித்த சோற்றில் நீர் ஊற்றி வைத்து மறுநாள் உண்ணக்கூடியதே பழைய சோறு.

சமைத்த சோறு வீணாகாமல் இருக்க தண்ணீர் ஊற்றி வைத்த சாதாரண நிகழ்வு இன்றைக்கு ஒரு வரலாறாகி இருக்கிறது. இன்றைக்கு பழைய சோறு உணவை வெளிநாடுகளில் போட்டி போட்டு வாங்கிச் சாப்பிடும் அளவுக்கு பிரபலமாகி இருக்கிறது.

முதல் நாள் சமைத்த உணவில் நீர் ஊற்றி மறுநாள் சாப்பிடும் இந்த பழைய சோற்றுடன் சின்ன வெங்காயம் சேரும்போது நோய் எதிர்ப்பு சக்தியை அள்ளிக்கொடுக்கும். பழைய சோற்றைச் சாப்பிட்டு வந்தால் எந்தவிதக் காய்ச்சல்களும் நம்மை நெருங்காது.
கோடை காலத்தில் கண் நோய்கள், அம்மை, மஞ்சள்காமாலை மற்றும் பல நோய்கள் பாதிக்காமல் இருக்க பழைய சோறு சாப்பிட்டு வருவது மிகவும் நல்லது. நோய்கள் வரும்முன் காக்க சிறந்த உணவு.

`காலைச் சிற்றுண்டியாக பழைய சோறு சாப்பிடுவதால் உடல் லேசாகி சுறுசுறுப்படையும். இரவில் நீர் ஊற்றி மூடிவைப்பதால் அதில் லட்சக்கணக்கான நல்ல பாக்டீரியா உருவாகின்றன' என்று சொல்லியிருக்கிறார் அமெரிக்க விஞ்ஞானி ஒருவர்.

அரிசி சோறு மட்டுமல்ல கேழ்வரகு, கம்பு போன்றவற்றை இடித்து மாவாக்கி காலையில் ஊற வைத்து மாலையில் நீர் விட்டுக் கரைத்து உப்பு சேர்த்துக் காய்ச்ச வேண்டும். முதல்நாள் காய்ச்சி வைத்த மாவை மறுநாள் காலை எடுத்து தண்ணீர் அல்லது மோர் சேர்த்துக் கரைத்து துவையல், ஊறுகாய் சேர்த்துச் சாப்பிடச் சுவையாக இருக்கும். கோடை காலத்தில் ஆற வைத்தும் குளிர்காலத்தில் சூடாகவும் சாப்பிடலாம். மண்பானையில் செய்து வைத்துக் கொண்டால் நான்கு நாள் வரை கூட இதைப் பயன்படுத்தலாம்.
Previous Post Next Post