வரலாற்றில் முதன்முறையாக முழுமையாக ஒரு பன்னாட்டுக் கல்வி உதவித்தொகைக் கிடைத்து வெளிநாட்டுக்குப் படிக்கச் செல்கிறார் ஒரு அரசுப் பள்ளி மாணவி.
இந்தப் பன்னாட்டு ஊக்கத்தொகைக்கு இந்தியாவிலிருந்து 3 பேர் மட்டுமே தேர்வாகி உள்ளனர். அதில், முதல் இரண்டு இடங்களைத் தமிழ்நாடு அரசுப் பள்ளி மாணவர்கள் எட்டிப் பிடித்துள்ளனர்.
11 ஆம் வகுப்புவரை அரசுப் பள்ளியில் படித்த இந்த மாணவி, நன்றாகப் படித்து அதிக மதிப்பெண்களை எடுத்ததால், 12 ஆம் வகுப்பை தருமபுரி அரசு மாடல் ஸ்கூலில் சேர்ந்து படிக்கத் தேர்வு செய்யப்பட்டார். அதன் மூலம் அங்கே உண்டு உறைவிடப் பள்ளியில் தங்கி, முழுமையான ஈடுபாட்டுடன் படித்து இன்று இந்தளவுக்கு முன்னேறியுள்ளார்.
யார் இந்த மாணவி? அவர் பெயர் என்ன? சாதாரண கூலித் தொழிலாளியின் மகள்தான் இவர். இவர் பெயர் ஜெயஸ்ரீ.
"எனக்கு அரசு மாடல் ஸ்கூலில் படிக்க வாய்ப்பு கிடைத்ததால்தான் நான் இந்தளவுக்கு முன்னேறமுடிந்தது. அங்கே உள்ள ஆசியர்கள் முழு அக்கறையுடன் சொல்லிக் கொடுத்தார்கள். அங்கே பள்ளிக் கல்வியை முடித்த பிறகு 'நான் முதல்வன்' திட்டத்திற்குத் தேர்வானேன்.
அதன் பிறகு சென்னையில் வந்து தங்கிப் படித்தேன். அதன்மூலம் வெளிநாட்டுப் பல்கலைக்கழகத்திற்கு விண்ணப்பித்தார்கள். எனக்கு அதற்கான வாய்ப்பு கிடைத்தது. இப்போது தமிழ்நாடு அரசு உதவியுடன் படிக்கச் செல்கிறேன்" என்கிறார் ஜெயஸ்ரீ.
அவரிடம் குடும்பப் பின்புலம், மற்றும் கடந்த கால அனுபவங்கள் பற்றிக் கேட்டோம். தொடர்ந்து பேசிய ஜெயஸ்ரீ, "என் அப்பா பெயர், பெருமாள். அம்மா பெயர், அமலா. இரண்டு பேரும் கூலித்தொழிலாளிகளாக உள்ளனர். நான் கிருஷ்ணகிரி மற்றும் தருமபுரி ஆகிய இரு மாவட்டங்களிலுள்ள அரசுப் பள்ளிகளில் படித்தேன். 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 96% மதிப்பெண்களுடன் தேர்வில் வெற்றி பெற்றேன்.
தற்போது தமிழ்நாடு அரசு கொண்டுவந்துள்ள 'நான் முதல்வன்' திட்டத்தின் மூலம் சிறப்புப் பயிற்சி பெற்றேன். அதன் மூலம் தைவான் நாட்டின் Ministry of Education மூலம் ஊக்கத்தொகையுடன் Kun Shan University இளங்கலை இயந்திரப் பொறியியல் படிக்கப் போகிறேன்.
பண்ணந்தூர் என்ற குக்கிராமத்தில் பிறந்துவளர்ந்த எனக்கு, எங்கள் பகுதியில் இருக்கும் தருமபுரி நகரத்திற்குச் செல்வதே பெரும் கனவாக இருந்தது. அந்தக் காலங்களைக் கடந்து சிங்கார சென்னைக்கு வந்து பயிற்சி பெறவும், அப்பயிற்சியைப் பெற்று இன்று கடல்கடந்து வேறு நாட்டிற்குச் செல்வதற்கு வாய்ப்பை வழங்கிய இருப்பது கல்வி எனும் ஆயுதம்தான்.
எங்கள் வீட்டில் முதல் தலைமுறை பட்டதாரி நான் தான். என்னால் இதைச் சாதிக்க முடியுமானால், நிச்சயம் உங்களாலும் முடியும். உங்களிடம் இருந்து எதை வேண்டுமானாலும் பறிக்கலாம், நீங்கள் பெற்ற கல்வியைத்தவிர.
'புதுமைப் பெண்' திட்டம், 'நான் முதல்வன்', 'இல்லம் தேடிக் கல்வி', 'சிற்பி' , 'வானவில் மன்றம்' போன்ற பல புதுமையான திட்டங்கள் மூலம் என்னைப் போன்ற பல்லாயிரக்கணக்கான மாணவர்களின் வாழ்க்கையை வளவாக்கி வரும் முதல்வர் ஸ்டாலினுக்கு மிகப் பெரிய நன்றி" என்கிறார்
"உயர்கல்வி நிறுவனங்களில் அரசுப் பள்ளி மாணவர்கள் நுழையும்போதுதான் சமூகநீதி முழுமை அடையும். ஏற்றத் தாழ்வு அற்ற சமுதாயம் உருவாகவேண்டும் என்றால் எல்லோருக்கும் எல்லாம் கிடைக்கின்ற மாதிரியான நிலை இருக்கவேண்டும். அந்த நோக்கத்துடன் இந்தத் திராவிட மாடல் அரசு செயல்பட்டு வருகிறது. இந்த உயர்கல்வி வாய்ப்பு மூலமாக அது உங்களுக்கு சாத்தியப்பட்டுள்ளது.
நான் ஐஐடி, என்ஐடி போன்ற உயர்கல்வி நிறுவனங்களின் பேராசிரியர்களிடம் கேட்டுக் கொள்வது எல்லாம் ஒன்றே ஒன்றுதான். எங்கள் பிள்ளைகள் உங்கள் நிறுவனங்களுக்கு வருகிறார்கள். அவர்களை அரவணைத்துக் கொள்ளுங்கள்" என்று மிக நெகிழ்ச்சியாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சுட்டிக்காட்டினார்.
உயர்கல்வி நிறுவனங்களில் படிக்கத் தேர்வாகி உள்ள அனைத்து மாணவர்களுக்கும் பாராட்டு சான்றிதழ் மற்றும் மடிக்கணினிகளை ஸ்டாலின் வழங்கியுள்ளார்.
Tags:
கல்விச் செய்திகள்