ஸ்ரீஹரிகோட்டா: சந்திரயான்-3 விண்கலத்தின் லேண்டர் கலன் நிலவில் நேற்று (ஆக.23) வெற்றிகரமாக தரையிறங்கிய நிலையில் லேண்டரில் இருந்து சாய்தள பாதையின் வழியாக வெளிவந்த பிரக்யான் ரோவர் தற்போது நிலவில் உலா வரத் தொடங்கியுள்ளது.
இதனை இஸ்ரோ ஆய்வு மையம் தனது எக்ஸ் (ட்விட்டர்) சமூக வலைதளத்தில் உறுதிப்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக இஸ்ரோ பதிவு செய்துள்ள ட்வீட்டில், "இந்தியாவில் தயாரிக்கப்பட்ட, நிலவுக்காக தயாரிக்கப்பட்ட சந்திரயான்-3 லேண்டரில் இருந்து சாய்தளப் பாதை வழியாக பிரக்யான் ரோவர் நிலவில் இறங்கியது. இந்தியா நிலவில் நடைபயில்கிறது! அடுத்தடுத்த தகவல்கள் விரைவில்.. " என்று தெரிவித்துள்ளது.
விடிய விடிய கண்காணித்த விஞ்ஞானிகள்: லேண்டரில் இருந்து சாய்தளப் பாதை வெளியே வந்து அதன் வாயிலாக ரோவர் நிலவின் மேல்பரப்பில் இறங்குவதை இஸ்ரோ விஞ்ஞானிகள் விடிய விடிய கண்காணித்து வந்தனர். இந்நிலையில் இன்று காலை அது நிலவின் மேற்பரப்பில் உலாவரத் தொடங்கியுள்ளது.
நிலவில் லேண்டர் தரையிறங்கியதும், பிரக்யான் ரோவர் உலா வரத் தொடங்கியதும் நிலவின் காலைப் பொழுது. அடுத்த 14 நாட்களுக்கு நிலவில் காலை பொழுதுதான் நிலவும். இதனால் நிலவில் இந்த 14 நாட்கள் ரோவர் பல குறிப்பிடத்தக்க ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும் எனத் தெரிகிறது. நிலவின் மேற்பரப்பில் உள்ள கணிமங்கள், வாயுக்கள், பூமியில் நிலநடுக்கம் ஏற்படுவதுபோல் நிலாவில் நிலாநடுக்கம் ஏற்படுகிறதா? என்பன போல் பல்வேறு ஆய்வுகளையும் ரோவர் மேற்கொள்ளவிருக்கிறது.
சந்திரயான் கலங்களில் உள்ள மின்னணுக் கருவிகள் அந்தக் கடும் குளிரைத் தாங்காது. எனவே, நிலவின் பகல் பொழுதில் மட்டுமே கருவிகள் செயல்படும். அதன் பின்னர் தரையிறங்கிக் கலம், உலாவிக் கலம் ஆகியவற்றின் ஆயுள் முடிந்துவிடும். நிலவின் ஒரு நாள் என்பது 14 பூமி நாள்களுக்குச் சமம். எனவே, தரையிறங்கிக் கலம், உலாவிக் கலத்தின் ஆயுள் 14 நாள்கள்.
ரோவர் நிலாவில் உலாவரத் தொடங்கியதை இஸ்ரோ விஞ்ஞானிகள் கொண்டாடினர். இதன் மூலம் சந்திராயன்-3 மிஷன் பூரண வெற்றி பெற்றுள்ளது.
சரித்திரம் படைத்த சந்திரயான்-3 > வாசிக்க: நிலவில் வெற்றிகரமாக இறங்கியது சந்திரயான்-3: தென்துருவத்தை சென்றடைந்த முதல் நாடு எனும் புதிய சரித்திரம்
Tags:
பொதுச் செய்திகள்