நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளையில் இன்று பள்ளி மாணவ-மாணவிகளுடன் அமர்ந்து முதல்வர் ஸ்டாலின் காலை உணவு சாப்பிட்டு முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை மாநிலத்தின் அனைத்து பள்ளிகளுக்கும் விஸ்தரிப்பு செய்தார்.
இந்த வேளையில் மாணவனிடம் முதல்வர் ஸ்டாலின் கலந்துரையாடி 'டைம் என்ன?'' என கேட்டதும், அதற்கு அவன் அளித்த பதிலும் சுவாரசியத்தையும், சிரிப்பலையையும் ஏற்படுத்தியது.
தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்தது முதல் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி கடந்த செப்டம்பர் மாதம் 15ம் தேதி அண்ணா பிறந்தநாளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.
அதன்பிறகு இந்த திட்டம் என்பது விரிவாக்கம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த திட்டத்தின் மூலம் 1.14 லட்சம் மாணவ-மாணவிகள் பயனடைந்து வந்தனர். இதற்கிடையே இந்த திட்டத்தில் தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இன்று முதல் விரிவாக்கம் செய்வதாக அறிவிக்கப்பட்டது.
அதாவது தமிழகம் முழுவதும் உள்ள 31,008 அரசு பள்ளிகளில் 1 முதல் 5ம் வகுப்பு வரை பயிலும் 15,75,000 மாணவர்கள் பயன்பெறும் வகையில் இந்த திட்டம் இன்று விரிவாக்கம் செய்யப்பட்டது. இந்த காலை சிற்றுண்டி விரிவாக்க திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளையில் மறைந்த முதல்வர் கருணாநிதி படித்த பள்ளியில் தொடங்கி வைத்தார்.
பள்ளி மாணவ-மாணவிகளுடன் அமர்ந்து முதல்வர் ஸ்டாலின் காலை சிற்றுண்டியை சாப்பிட்டார். இன்று தொடக்க நாள் என்பதால், சாம்பார், கிச்சடி, வழங்கப்பட்ட நிலையில், அதன் சுவை குறித்து மாணவ, மாணவிகளிடம் விசாரித்து கொண்டே சாப்பிட்டார். இந்த வேளையில் முதல்வர் ஸ்டாலின் ''என் பெயர் தெரியுமா?'' என கேட்டார். அதற்கு சிலர் தெரியும் என கூறினார்.
அதன்பிறகு ஸ்டாலின் தனது அருகே அமர்ந்து சாப்பிட்டு கொண்டிருந்த மாணவனிடம் பேசினார். அப்போது அந்த மாணவன் தனது கையில் வாட்ச் கட்டியிருந்தார். இதை பார்த்த முதல்வர் ஸ்டாலின், ''வாட்ச் சும்மா ஸ்டைலுக்கு கட்டிட்டி வந்துட்டியா?'' என கேட்டு கொண்டே மாணவனின் வாட்ச்சை பார்த்தார். அதன்பிறகு, ''ஓடலையா, வாட்ச் ஓடலையா'' என கேட்டார்.
பின்னர் முதல்வர் ஸ்டாலின் தனது வாட்ச்சை மாணவனிடம் காட்டி, ''இதில் என்ன டைம் இருக்கு தம்பி? என கேள்வி எழுப்பினார். அதற்கு மாணவன், ''இந்த வாட்ச்சில டைம் பார்க்க தெரியல'' என கூறினார். இதையடுத்து அருகே இருந்த மாணவி சாப்பாட்டை மெதுவாக சாப்பிட்டார். இதை பார்த்த ஸ்டாலின், ''ஊட்டிவிடவா'' என கேட்டார். முதல்வர் ஸ்டாலின் மாணவ-மாணவிகளிடம் இப்படி பேசிய வீடியோ தற்போது இணையதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது.
Tags:
பொதுச் செய்திகள்