முதல்வரின் காலை உணவு திட்டத்தால் அரசு பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சேவூரில் நடந்த விழாவில் அமைச்சர் துரைமுருகன் பேசினார்.
தமிழ்நாடு முழுவதும் பேரூராட்சி மற்றும் ஊரக பகுதிகளில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் 1 முதல் 5ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார்.
அதன்படி, வேலூர் மாவட்டத்தில் 576 பள்ளிகளில் 32,304 மாணவ, மாணவிகளுக்கு நேற்று முதல் காலை உணவு வழங்கும் திட்டம் தொடங்கியது. காட்பாடி அடுத்த சேவூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நேற்று நடந்த விழாவில் அமைச்சர் துரைமுருகன் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு சிற்றுண்டி வழங்கி தொடங்கி வைத்தார்.
இதைத்தொடர்ந்து அமைச்சர் பேசியதாவது:
தமிழகம் முழுவதும் விரிவாக்கம் செய்யப்பட்ட காலை உணவு திட்டம் பள்ளிகளில் தொடங்குகிறது. இந்த திட்டத்தை மாவட்டத்தில் தொடங்கி வைப்பதற்காக மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். முன்னாள் முதல்வர்கள் காமராஜர், எம்ஜிஆர் ஆகியோர் பள்ளிகளில் மதிய உணவு திட்டத்தை கொண்டு வந்தனர். இதன்மூலம் மாணவர்கள் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்தது.
தற்போது முதல்வர் மு.க.ஸ்டாலின் காலை உணவு திட்டத்தை தொடங்கியுள்ளார். காலையில் சிறப்பான உணவை மாணவர்களுக்கு கொடுத்தால் நல்ல ஆரோக்கியத்துடனும், உற்சாகத்துடனும் கல்வி கற்பார்கள் என்ற நோக்கில் இந்த திட்டத்தை கொண்டு வந்தார்.
கடந்த ஆண்டு முதல்வரின் காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்த பள்ளிகளில் ஆய்வு செய்தபோது மாணவ- மாணவிகளின் வருகைப்பதிவு அதிகமாக உள்ளது. அரசு சார்பில் பள்ளிகளில் காலை மற்றும் மதியம் என இருவேளையும் மாணவர்களுக்கு உணவு வழங்கப்படுகிறது. தேவைப்பட்டால் இரவு உணவு வழங்கவும் அரசு தயாராக உள்ளது. ஆனால் தனது பிள்ளைக்கு தன் கையால் சோறு ஊட்டவே எந்த தாயும் நினைப்பார். எனவே, இரவு ஒருவேளை உணவை அவர்களே கொடுக்கும் வகையில் விட்டுக்கொடுக்கிறோம்.
இவ்வாறு அவர் பேசினார். விழாவில், கலெக்டர் குமாரவேல் பாண்டியன், திட்ட இயக்குனர் ஆர்த்தி, காட்பாடி ஒன்றியக்குழு தலைவர் வேல்முருகன், துணை மேயர் சுனில்குமார், ஆர்டிஓ கவிதா ஆகியோர் கலந்து கொண்டனர்.இதேபோல், பள்ளிகொண்டா மற்றும் பொய்கை பகுதியில் நடந்த தொடக்க விழாவில் எம்எல்ஏ ஏ.பி.நந்தகுமார், ஒடுகத்தூர் அரசு பள்ளியில் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் மு.பாபு, அணைக்கட்டு பகுதியில் ஒன்றியக்குழு தலைவர் பாஸ்கரன் ஆகியோர் காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்தனர். மலை கிராமங்களில் உள்ள பள்ளிகளிலும் காலை உணவு திட்டம் தொடங்கப்பட்டது.
இதேபோல் வேலூர் கொசப்பேட்டை ஈ.வே.ரா.நாகம்மையார் அரசு பள்ளியில் இந்த திட்டத்தை எம்எல்ஏ கார்த்திகேயன், மேயர் சுஜாதா, கமிஷனர் ரத்தினசாமி ஆகியோர் தொடங்கி வைத்தனர். அப்போது பள்ளி சார்பில் எம்எல்ஏவிடம் மனு அளிக்கப்பட்டது. அதில், பள்ளிக்கென தூய்மை காவலர்கள் நியமிக்க வேண்டும், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்துதர வேண்டும். காலை, மாலையில் வெளியாட்களின் அட்டகாசம் அதிகமாக உள்ளதால் மாணவிகள் அச்சப்படுகின்றனர். எனவே போலீஸ் பாதுகாப்பு தர வேண்டும்' என தெரிவித்திருந்தனர்.
இதேபோல், கே.வி.குப்பம் அரசு ஆதிதிராவிடர் நல தொடக்கப்பள்ளியில் அமைச்சர் துரைமுருகன் காலை உணவு வழங்கும் திட்டத்தை ெதாடங்கி வைத்தார். நிகழ்ச்சியில், கலெக்டர் குமாரவேல் பாண்டியன், மாவட்ட திட்ட இயக்குநர் ஆர்த்தி, மாவட்ட மகளிர் திட்ட இயக்குநர் நாகராஜன், மாவட்ட கல்வி அலுவலர் மணிமொழி, மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் தயாளன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இதேபோல், பள்ளிகொண்டா பேரூராட்சி அரசு பள்ளியில் பேரூராட்சி தலைவர் சுபபிரியா குமரன், ஒடுகத்தூர் பேரூராட்சி அரசு பள்ளியில் பேரூராட்சி தலைவர் சத்தியாவதி பாஸ்கரன், சேர்பாடி அரசு பள்ளியில் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் மு.பாபு, பென்னாத்தூர் பேரூராட்சி அரசு பள்ளியில் பேரூராட்சி தலைவர் பவானி சசிகுமார், பொன்னை அடுத்த மேல்பாடி அரசு பள்ளியில் காட்பாடி ஒன்றியக்குழு தலைவர் வேல்முருகன், பேரணாம்பட்டு அடுத்த பக்காலப்பல்லி அரசு பள்ளியில் ஒன்றியக்குழு தலைவர் சித்ரா ஜனார்த்தனன் ஆகியோர் முதல்வரின் காலை உணவு வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தனர்.
பகுதி வாரியாக காலை உணவு வழங்கப்படும் விவரம்
அணைக்கட்டு ஒன்றியத்தில் 112 பள்ளிகளில் 6,898 மாணவர்களுக்கும், குடியாத்தம் ஒன்றியத்தில் 124 பள்ளிகளில் 6,205 மாணவர்களுக்கும், கே.வி.குப்பம் ஒன்றியத்தில் 88 பள்ளிகளில் 4,135 மாணவர்களுக்கும், கணியம்பாடி ஒன்றியத்தில் 43 பள்ளிகளில் 1,985 மாணவர்களுக்கும், காட்பாடி ஒன்றியத்தில் 83 பள்ளிகளில் 3,551 மாணவர்களுக்கும், பேரணாம்பட்டு ஒன்றியத்தில் 47 பள்ளிகளில் 3,533 மாணவர்களுக்கும், வேலூர் ஒன்றியத்தில் 31 பள்ளிகளில் 2,825 மாணவர்களுக்கும், வேலூர் மாநகராட்சியில் 3 பள்ளிகளில் 324 மாணவர்களுக்கும், குடியாத்தம் நகராட்சியில் 17 பள்ளிகளில் 857 மாணவர்களுக்கும், பேரணாம்பட்டு நகராட்சியில் 4 பள்ளிகளில் 524 மாணவர்களுக்கும், ஒடுகத்தூர் பேரூராட்சியில் 6 பள்ளிகளில் 247 மாணவர்களுக்கும், பள்ளிகொண்டா பேரூராட்சியில் 10 பள்ளிகளில் 688 மாணவர்களுக்கும், பென்னாத்தூர் பேரூராட்சியில் 6 பள்ளிகளில் 355 மாணவர்களுக்கும், திருவலம் பேரூராட்சியில் 2 பள்ளிகளில் 177 மாணவர்களுக்கும் என மொத்தம் 576 பள்ளிகளில் பயிலும் 32,304 மாணவர்களுக்கு நேற்று காலை உணவு பரிமாறப்பட்டது.
Tags:
பொதுச் செய்திகள்