வேலைவாய்ப்பு மற்றும் அடுத்த நிலைக்கு உயர்வதற்கான சாத்தியக்கூறுகள் மருத்துவ படிப்புகளில் உள்ளதால், மருந்தகம் சார்ந்த படிப்பை தொடர்ந்து கற்போரின் எண்ணிக்கை சமீபகாலமாக குறைந்து வருகிறது.டி.பார்ம்., பி.பார்ம்., முடித்தவர்கள் மருந்தகத்துறை பணிகளுக்கு விண்ணப்பிக்க முடியும்.
நான்கு ஆண்டு படிப்பு என்பதால், டாக்டர்களுக்கு இணையான கடினமான பாடத்திட்டம் இதில் உள்ளது.கற்றுத்தேர்ந்து வந்தவர்களுக்கு, நிச்சயம் வேலை வாய்ப்பு உண்டு. ஆனால், இப்படிப்பில் சேரும் பலர், பாதியில் விட்டுச்செல்பவராக உள்ளனர்.
அவ்வகையில், திருப்பூர் மாவட்டத்தைச்சேர்ந்த மாணவர்கள் பலர், மருத்துவ படிப்பில் கூடுதல் வேலைவாய்ப்பு மற்றும் அடுத்த நிலைக்கு முன்னேறுவதற்காக மருத்துவம் சார்ந்த படிப்பைத் தேர்வு செய்கின்றனர். அதில், மருந்தகத்துறையை தவிர்த்து விடுகின்றனர்.
மருந்தகத்துறை சார்ந்த அதிகாரிகள் கூறியதாவது: மருந்துக்கடைகளில் டிப்ளமோ இன் பார்மஸி முடித்தவர்கள் பணியில் இருக்க வேண்டும்.பி.பார்ம்., முடித்து எம்.பார்ம்., அதற்கு அடுத்த நிலையாக, பார்ம் டி., வரை படிக்கலாம்.
ஆனால், பெரும்பாலானோர் முழுமையாக படிப்பு முடிக்கும் முன், இடம் பெயர்ந்து விடுகின்றனர்.தெளிவான முடிவெடுத்து, மாணவர்கள் பாடத்தை தேர்வு செய்து சரி வர படித்தால், வெளிநாடு வேலைக்கு கூட செல்ல இயலும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.
Tags:
கல்விச் செய்திகள்