சிவகங்கை மாவட்டம் வி. மலம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெறாமல் பிளஸ் 1 தேர்ச்சி பெற்று பிளஸ் 2 படித்து வந்த மாணவரை, பள்ளியில் இருந்து வெளியேற்றி நிர்வாகம் விசாரணை செய்து வருகிறது.
இப் பள்ளியில் ஒரு மாணவர், மே 2022ல் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதியபோது கணிதம், அறிவியல், சமூக அறிவியல் பாடங்களில் தோல்வியடைந்துள்ளார். ஆக.2022ல் தேர்வு எழுதி இரண்டு பாடங்களில் வெற்றி பெற்றுள்ளார். அறிவியல் பாடத்தில் தியரியில் 15 மதிப்பெண், செய்முறையில் 25 மதிப்பெண் பெற்றுள்ளார்.
40 மதிப்பெண் பெற்றாலும் தியரியில் 20 மதிப்பெண் பெற வேண்டும். ஆனால் 15 மதிப்பெண் பெற்றதால் அறிவியலில் தேர்ச்சி பெறவில்லை. 40 மதிப்பெண் பெற்றதால் தேர்ச்சி பெற்றதாக நினைத்து வி.மலம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 வகுப்பில் சேர்ந்துள்ளார். பள்ளி நிர்வாகத்தின் கவனக்குறைவால் அட்மிஷன் கொடுத்துள்ளனர்.
2023 மார்ச்சில் பிளஸ் 1 தேர்ச்சி பெற்றுள்ளார். தற்பொழுது பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களின் சான்றிதழ் சரிபார்க்கும் போது அந்த மாணவன் 10ம் வகுப்பில் தேர்ச்சி பெறாதது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து பெற்றோரை அழைத்து பள்ளி தலைமை ஆசிரியர் எழுத்துப்பூர்வமாக எழுதி வாங்கிக்கொண்டு மாணவனை பள்ளியிலிருந்து வெளியேற்றினார்.
தலைமை ஆசிரியர் தமிழரசன் கூறுகையில், 'துறை ரீதியாக விசாரணை நடக்கிறது' என்றார்.
Tags:
கல்விச் செய்திகள்