கலைஞர் உரிமைத் தொகையில் மாற்றம்.. டிசம்பர் மாசம் உங்கள் அக்கவுண்ட்டுக்கு ரூ 4000 வருமாம்!

உரிமைத் தொகையில் டிசம்பர் மாதம் ரூ 4000 வங்கிக் கணக்கிற்கு வரும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஏன் என்னாச்சு என்ற கேள்வி எழுந்துள்ளது.

திமுக ஆட்சிக்கு வந்தால் மகளிருக்கு ரூ 1000 உரிமைத் தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் கடந்த 2021 ஆம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் திமுக ஆட்சிக்கு வந்தது. இதையடுத்து ஆவின் பால் விலை குறைப்பு, கொரோனா நிவாரணம், மகளிருக்கு இலவச பஸ் பயணம் உள்ளிட்ட 4 கோப்புகளில் முதல் கையெழுத்திட்டார் முதல்வர் ஸ்டாலின்.

இந்த நிலையில் ரூ 1000 உரிமைத் தொகை எப்போது அளிக்கப்படும் என்ற கேள்வி எழுந்தது. அதிமுக ஆட்சியின் போது கஜானாவை காலி செய்துவிட்டு சென்றதால், நிதி நிலைமையை காரணம் காட்டினார் நிதியமைச்சராக இருந்த பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்.

இந்த நிலையில் தமிழக சட்டசபை பட்ஜெட் கூட்டத் தொடரின் போது ரூ 1000 மகளிர் உதவித் தொகை செப்டம்பர் 15 ஆம் தேதி முதல் வழங்கப்படும் என அறிவித்த முதல்வர் ஸ்டாலின், அதற்கான பயனாளிகள் தேர்வு செய்யும் பணிகளை செய்யுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

அந்த வகையில் உரிமைத் தொகை பெற சொந்த வீடு இருக்கக் கூடாது, அரசு பதவியில் இருக்கக் கூடாது. வருமான வரி செலுத்தக் கூடாது, ஆண்டுக்கு 3600 யூனிட்டுகளுக்கு மேல் பயன்படுத்தக் கூடாது, கார், பைக் சொந்தமாக இருத்தல் கூடாது உள்ளிட்ட பல கண்டிஷன்கள் போடப்பட்டு அதில் தகுதியுடையவர்களுக்கு கடந்த செப்டம்பர் 15 ஆம் தேதி முதல் மாதந்தோறும் 1000 ரூபாய் வரவு வைக்கப்பட்டு வருகிறது.

முதல் முறை 1.06 கோடி பேர் ரூ 1000 உரிமைத் தொகை திட்டத்திற்கு தகுதியுடைய பெண்களாக தேர்வு செய்யப்பட்டனர். இதன்பிறகு விடுபட்டவர்களுக்கு கடந்த 10ஆம் தேதி 2ஆவது கட்டமாக பணம் செலுத்தப்பட்டது. இதில் 7.35 லட்சம் பெண்களுக்கு ரூ 1000 கிடைத்தது. இரு கட்டங்களாக நடந்த இந்த பயனாளிகள் தேர்வில் மொத்தம் 1.13 கோடி பெண்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் பயன்பெறாதவர்கள் மேல்முறையீடு செய்ய தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டது. அதன்படி கடந்த அக்டோபர் 25ஆம் தேதி மேல்முறையீடு செய்வதற்கான கால அவகாசம் வழங்கப்பட்டது. இதில் 11 லட்சத்து 85 ஆயிரம் பெண்கள் மேல்முறையீடு செய்துள்ளனர்.

இவர்களின் விண்ணப்பங்களை பரிசீலிக்கும் பணிகள் தற்போது நடந்து வருகின்றன. இந்த பணி தற்போது இறுதி கட்டத்தை எட்டிவிட்டது. இன்னும் 10 நாட்களுக்குள் குறுஞ்செய்தி மூலம் தகவல் தெரிவிக்கப்படும். இந்த நிலையில் இரண்டாம் கட்டமாக தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு செப்டம்பர் மாதம் தொகையும் சேர்த்து ரூ 2000 மாக அளிக்கப்பட்டது.

இந்த நிலையில் மேல்முறையீடு செய்யப்படும் நபர்களில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டால் அவர்களுக்கு அடுத்த மாதம் 15 தேதிகளில் உரிமைத் தொகை வரவு வைக்கப்படும். டிசம்பர் மாதத்துடன் சேர்த்து விடுபட்ட செப்டம்பர், அக்டோபர், நவம்பர் ஆகிய மாதங்களுக்கு ரூ 4000 என வரவு வைக்கப்படும்.

Post a Comment

Previous Post Next Post