தமிழகத்தில் அரசு விவசாய கல்லுாரி, தோட்டக்கலை, வனவியல் கல்லுாரிகள் 14, தனியார் விவசாய கல்லுாரிகள் 28 உள்ளன.
தனியார் கல்லுாரிகளில் இளநிலை படிப்புகளும் கோவை, திருச்சி, மதுரை, கிள்ளிகுளம் (நெல்லை) அரசு கல்லுாரிகளில் பிஎச்.டி., படிப்புகள் உள்ளன. 28 துறைகளின் கீழ் ஆண்டுதோறும் 50 முதல் 70 பேர் பிஎச்.டி., முடித்து வெளியேறுகின்றனர். இவர்கள் தனியார் கல்லுாரிகளிலோ அல்லது தனியார் உரக்கம்பெனிகளில் குறைந்த சம்பளத்தில் வேலைக்கு சேருகின்றனர். இவர்களின் அதிகபட்ச கனவு அரசு கல்லுாரி வேலை பெறுவது தான்.வேளாண் பல்கலையில் 9 ஆண்டுகளாக உதவி பேராசிரியர் பணியிடத்திற்கு தேர்வு நடத்தவில்லை.
கல்லுாரிகளைப் பொறுத்தவரை உதவி பேராசிரியர் பணியிடங்கள் அதிகமாகவும் அதில் பாதி இணைப்பேராசிரியர்கள், அதிலும் குறைந்த எண்ணிக்கையில் பேராசிரியர் பணியிடங்கள் இருக்க வேண்டும். உதவி பேராசிரியர்கள் தேர்வு நடைபெறாததால் ஏற்கனவே இருந்தவர்கள் இணை பேராசிரியராகவும் அடுத்து பேராசிரியராகவும் பதவி உயர்வு பெற்றுள்ளனர். இதனால் இணை மற்றும் பேராசிரியர்கள் பணியிடங்கள் அதிகமாகவும் உதவி பேராசிரியர் பணியிடங்கள் குறைவாகவும் உள்ளன.கல்லுாரிகளில் மாணவர்களின் சேர்க்கை அதிகரித்து கொண்டு செல்லும் நிலையில் இப்பணியிடத்திற்கான தேர்வு நடத்தாததால் இணைப்பேராசிரியர், பேராசிரியர்கள் பணிச்சுமையால் பாதிக்கப்படுகின்றனர்.இதுகுறித்து விவசாய பல்கலை துணைவேந்தர் கீதாலட்சுமி கூறியதாவது: உதவி பேராசிரியர் தேர்வுக்கான பணி நடந்து வருகிறது. விரைவில் அறிவிப்பு வெளியாகும்.
கல்லுாரியில் முதலாண்டு பயிலும் மாணவர்கள் அருகிலுள்ள (20 கி.மீ. சுற்றளவுக்குள்) உள்ள விவசாய குடும்பத்தோடு இணைந்து செயல்படுவர். எட்டு செமஸ்டர் பருவத்திற்குள் எட்டு பயிர் சாகுபடியை விவசாயிகளுடன் இணைந்து மாணவர்கள் கற்க முடியும். பூச்சி, நோய் மேலாண்மை குறித்து விவசாயிகளுக்கு மாணவர்கள் விளக்கமுடியும். வாரம் ஒருமுறை விவசாயிகளுடன் தொடர்பு கொண்டு பல்கலைக்கு பாலமாக மாணவர்கள் செயல்படுவர், என்றார்.
Tags:
கல்விச் செய்திகள்