குரூப் 2, குரூப் 2ஏ தேர்வுக்கான ரிசல்ட் வருகிற ஜன.12ம் தேதி வெளியிடப்பட உள்ள நிலையில், காலி பணியிடங்களின் எண்ணிக்கையை டிஎன்பிஎஸ்சி அதிகரித்துள்ளது.
இதனால், தேர்வு எழுதியவர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ பதவியில் காலியாக உள்ள 5,413 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டது. இதற்கான, முதல்நிலை எழுத்துத் தேர்வு கடந்த 2022 மே 21ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்வை 9,94,890 பேர் எழுதினர். இதற்கான தேர்வு முடிவுகள் நவம்பர் 8ம் தேதி வெளியானது. இதில் 57,641 பேர் தேர்ச்சி பெற்றனர். இவர்களுக்கான முதன்மை எழுத்து தேர்வு கடந்த பிப்ரவரி 25ம் தேதி நடந்தது. இத்தேர்வை 51 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் எழுதியுள்ளதாக கூறப்படுகிறது.
டிஎன்பிஎஸ்சி தேர்வு முடிவுகளை விரைந்து வெளியிடும் நோக்கத்துடன், குரூப் 2 முதன்மை எழுத்துத்தேர்வு விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் பணியை துரிதமாக (விடுமுறை நாட்கள் உட்பட) நடத்தி வந்தது. சமீபத்திய புயல் வெள்ளம் காரணமாக விடைத்தாள்கள் திருத்தும் பணிக்கு கூடுதல் காலமானது. இதனால், குரூப் 2 தேர்வு முடிவுகள் ஜனவரி 12ம் தேதி வெளியிடப்படும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்து உள்ளது.
இந்நிலையில் தற்போது காலிப் பணியிடங்கள் எண்ணிக்கையை டிஎன்பிஎஸ்சி அதிகரித்துள்ளது. அதாவது, கூடுதலாக 620 பணிகள் சேர்க்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து குரூப் 2, குரூப் 2ஏ காலி பணியிடங்களின் எண்ணிக்கை 6,033 ஆக உயர்ந்துள்ளது. திருத்தியமைக்கப்பட்ட காலிப்பணியிடங்கள் குறித்த விவரங்களை டிஎன்பிஎஸ்சி தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. காலி பணியிடங்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது தேர்வு எழுதியவர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Tags:
பொதுச் செய்திகள்