கலைஞர் உதவித் தொகை ரூ 1000 இந்த மாதம் 15 ஆம் தேதி வரவு வைக்கப்படுவது சந்தேகம்தான் என்கிறார்கள்.
சென்னை வழியாக ஆந்திராவுக்கு சென்ற மிக்ஜாம் புயல் போகும் போது வடதமிழகத்தை உலுக்கிவிட்டு சென்றது. காற்று குறைந்த அளவை கொடுத்துவிட்டு அதீத கனமழையை கொடுத்தது இந்த புயல்.
சென்னையில் டிசம்பர் 2, 3, 4 ஆகிய தேதிகளில் பெய்த மழையின் அளவு 400 மி.மீ. என பதிவாகியுள்ளது. 2015 ஆம் ஆண்டு ஏற்பட்ட பெருவெள்ளத்தை போல் சென்னையே மிதந்து வருகிறது. புயலும் மழையும் நின்ற நிலையிலும் ஆங்காங்கே மீட்பு பணிகள் இன்னமும் நடந்து கொண்டுதான் வருகின்றன.
கழுத்தளவு நீர், 15 அடி நீரில் மக்கள் தத்தளித்து வருகிறார்கள். கழுத்தளவு நீரில் தாமாக வெளியே வருவது எல்லாம் ஆபத்தையே கொடுக்கும் என்பதால் பலர் வெளியேறாமல் வீட்டிலேயே இருந்து வருகிறார்கள். பல இடங்களில் சாலைகள் சேதமடைந்துள்ளன. பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்கப்பட வேண்டியுள்ளது.
வெள்ள புயல் நிவாரணமாக முதற்கட்டமாக ரூ 2000 கோடியை வழங்குமாறு முதல்வர் ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். இந்த நிலையில் புயல், கனமழையால் காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் ரூ 10 ஆயிரம் கோடி அளவிற்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. மழைநீர் வடிந்தவுடன் சாலை, குடிநீர் வசதிகளை செய்து தர வேண்டும். இதனால் அரசுக்கு நிதி சிக்கல் ஏற்படும் வாய்ப்புள்ளது.
இந்த நிலையில் வழக்கமாக மாதந்தோறும் 15 ஆம் தேதி கலைஞர் உரிமைத் தொகையான ரூ 1000 வரவு வைக்கப்படும். ஆனால் இந்த மாதம் 15 ஆம் தேதி வரவு வைக்கப்படாது என தெரிகிறது. 20 தேதிக்கு மேல் வரவு வைக்கப்பட வாய்ப்பிருப்பதாக தெரிகிறது. இல்லாவிட்டால் அடுத்த மாதத்துடன் சேர்த்து வழங்கவும் வாய்ப்பிருப்பதாக தெரிகிறது. ஆட்சிக்கு வந்தவுடன் இந்த திட்டம் தொடங்கப்படும் என அறிவித்து ஒன்றரை ஆண்டுகள் கழித்துதான் தொடங்கப்பட்டது. இதற்கு எதிர்க்கட்சிகள் விமர்சனங்களை வைத்தன.
அது போல் எல்லா பெண்களுக்கும் ரூ 1000 கொடுக்காமல் சில வரன்முறைகளை வைத்ததற்கும் அதிமுக, பாஜக, பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் கண்டனம் தெரிவித்தன. இந்த நிலையில் ரூ 1000 உரிமைத் தொகை இந்த மாதம் தாமதமாகவோ அல்லது அடுத்த மாதம் சேர்த்து வழங்கினாலோ விமர்சனங்களுக்குள்ளாக நேரிடும் என்பது அரசுக்கு தெரியும். எனவே அந்த தொகையை தாமதப்படுத்த மாட்டார்கள் என்கிறார்கள்.
கலைஞர் உரிமைத் தொகை கடந்த செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி தொடங்கப்பட்டது. அது முதல் மாதந்தோறும் 15 ஆம் தேதி இந்த உரிமைத் தொகை வழங்கப்படுகிறது. கடந்த மாதம் தீபாவளி பண்டிகை 12 ஆம் தேதி வந்ததால் அதற்கு முன்னரே உரிமைத் தொகை வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Tags:
பொதுச் செய்திகள்