மிக்ஜாம் புயல் காரணமாக காற்றின் வேகம் அதிகரிக்கும் என்று கூறப்பட்டு இருக்கும் நிலையில் அடுத்த 2 நாட்கள் பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக என்ன செய்யலாம் என்ற அறிவுறுத்தி இருக்கிறார் தனியார் வானிலை ஆய்வாளர் ஹேமசந்திரன்.
இதுகுறித்து அவர் கூறுகையில், "வடகடலோர மாவட்டங்களான சென்னை, திருவள்ளூர். காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், புதுச்சேரி, கடலூர் ஆகிய மாவட்டங்களில் டிசம்பர் (03.12.2023) & (04.12.2023) ஆகிய இரண்டு நாட்கள் பரவலாக அநேக இடங்களில் கனமழையும் (6 செ.மீ மேல்), ஒருசில இடங்களில் (12 செ.மீ மேல்), கடலோரத்தின் ஓரிரு இடங்களில் (20 செ.மீ) மேல் பதிவாக கூடும்.
வடகோடி மாவட்டங்களில் டிசம்பர் 3 ஆம் தேதி முதல் தரைக் காற்றின் வேகம் படிப்படியாக அதிகரிக்க கூடும், டிசம்பர் 4 ஆம் தேதி தரைக் காற்றின் வேகம் 60 கிமீ வரை செல்லும், கரையை கடக்கும் போது 65 கிமீ முதல் 70 கிமீ வரை செல்லலாம். வடக்கு உள் மாவட்டங்களான வேலூர், இராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மேற்கு, திருவண்ணாமலை, திருப்பத்தூர், சேலம் போன்ற மாவட்டங்களில் டிசம்பர் 3, 4 ஆகிய தேதிகளில் கனமழை எதிர்ப்பார்க்கலாம்.
தென் மாவட்டங்கள், மேற்கு மாவட்டங்கள் & கொங்கு மண்டலத்தில் பெரிதாக அடுத்த 4 நாட்கள் (நான்காம் சுற்றில்) மழை வாய்ப்பு குறைவு, வானம் பொதுவாக மேக மூட்டத்துடன் காணப்படும். ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பதிவாகலாம்.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், புதுச்சேரி, கடலூர் மாவட்ட மக்கள் கீழ்கண்ட நடைமுறைகளை பின்பற்றுங்கள்:
1. டிசம்பர் 3, 4 ஆகிய இரண்டு தேதிகளில் தேவையின்றி வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம்.
2. வெளியில் செல்லும் பயணங்களை டிசம்பர் 5 ஆம் தேதிக்கு ஒத்திவைத்துவிடுங்கள். அலுவலகம் செல்பவர்கள் வீடுகளிலேயே வேலை செய்ய முயற்சியுங்கள் (Work from home).
3. மருத்துவமனை செல்ல இருப்பவர்கள் / மருந்து மாத்திரை வாங்க வேண்டிய முதியவர்கள் இன்றே வாங்கி வைத்துக்கொள்ளுங்கள்.
4. அடுத்த 2 நாட்களுக்கு தேவையான அடிப்படை பொருட்களை இன்று (02.12.2023) இரவுக்குள் வாங்கி வைத்துக்கொள்ளுங்கள்.
5. தமிழகத்தின் வட கடலோரம் & டெல்டா மாவட்ட விவசாயிகள் வேளாண்மை பணிகளை அடுத்த 3 நாட்களுக்கு ஒத்திவைப்பது நல்லது.
6. வடகோடி மாவட்ட நகர்புற பகுதிகளில் சாலையோர கடைகள் வைத்திருப்பவர்கள் பொருட்களை மழையில் பாதிக்காமல் பத்திரப்படுத்தி வைப்பது நல்லது.
7. தாழ்வான இடங்களில் இருப்பவர்கள், பழுதடைந்த வீடுகளில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்வது நல்லது. பாதிப்பில்லாமல் நல்ல மழையை கொடுத்து செல்லும் என சலனமாக இச்சலனம் அமையும்." என்று குறிப்பிட்டு உள்ளார்.
Tags:
பொதுச் செய்திகள்