மாதம் தோறும் இரண்டு ஏகாதசிகள் வரும். ஒரு வருடத்தில் 25 ஏகாதசிகள் வருகின்றன. 'மாதங்களில் நான் மார்கழி' என்று சொன்ன மகாவிஷ்ணுவுக்குப் பிடித்தமான மார்கழி மாத வளர்பிறையில் வரும் ஏகாதசி எல்லா ஏகாதசிகளிலும் முக்கியமானது.
இதைத்தான் 'வைகுண்ட ஏகாதசி' விரதம் என்று மக்கள் அனுஷ்டித்து வருகிறார்கள்.
ஏகாதசிக்கு சமமான விரதம் இல்லை. அதிலூம் மார்கழி மாதம் வளர்பிறை ஏகாதசி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. விஷ்ணுவை வேண்டி வழிபடும் விரதங்களில் முதன்மையானதாக இருப்பது 'ஏகாதசி விரதம்' இந்த விரதத்தை கடைப்பிடிப்பது 'அஸ்வமேத யாகம்' செய்த பலனைக் கொடுக்கும் என்கிறது புராணங்கள்.
பெருமாளுக்கு உகந்த பண்டிகையான வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு அனைத்து பெருமாள் ஆலயங்களிலும் சொர்க்க வாசல் எனப்படும் பரமபதவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெறும். பரமபத வாசல் வழியாக சென்றால் முக்தி கிடைப்பதோடு இம்மை வாழ்வுக்கு தேவையான அனைத்து செல்வங்களும் கிடைக்கும்.
வைகுந்தத்தில் வாசம் செய்யும் பெருமாள் வைகுண்ட ஏகாதசி தினத்தில் விரதமிருந்து வழிபடும் பக்தர்களுக்கு மூன்று கோடி தேவர்கள் சூழ வந்து அருளும் தினம் வைகுண்ட ஏகாதசி எனப்படுகிறது. திருமாலின் சக்தி ரூபத்தை ஏகாதசி திதியில் மார்கழி மாதத்தில் வணங்கினால் வைகுந்த பதவிக்கு நிகரான அளவில்லா செல்வம், புகழ், கல்வி, ஞானம், இன்பம் பெற்று வாழ்வார் என்பது நம்பிக்கை.
இவ்விழாவின் முக்கிய நிகழ்வான சொர்க்கவாசல் திறப்பு எனப்படும் பரமபதவாசல் திறப்பு வைபவம் அனைத்து பெருமாள் தலங்களிலும் வருகின்ற டிசம்பர் 23ம் தேதி அதிகாலை நடைபெறவுள்ளது.
மாதம் மாதம் வரும் அனைத்து ஏகாதசிகளிலும் விரதம் இருந்து வழிபடுவோர் பிறவி துயர் நீங்கி வைகுண்ட பதவியை அடைவர் என்பது நம்பிக்கை. வருடம் முழுவதும் ஏகாதசி விரதத்தை கடைபிடிக்க இயலாதவர்கள், மார்கழி மாதம் வரும் வைகுண்ட ஏகாதசியில் மட்டுமாவது விரதம் இருப்பது சிறப்பான பலனை தரும் என்பது ஐதீகம்.
வைகுண்ட ஏகாதசி நேரம், பரணம்
வைகுண்ட ஏகாதசி சனிக்கிழமை, டிசம்பர் 23, 2023 தொடங்கி
டிசம்பர் 24 ஆம் தேதி வரை இருக்கிறது.
பரண நேரம் - காலை 07:11 முதல் 09:15 AM
பரண நாளில் சூரிய உதயத்திற்கு முன் துவாதசி முடிந்து விடும்
ஏகாதசி திதி ஆரம்பம் - டிசம்பர் 22, 2023 அன்று காலை 08:16
ஏகாதசி திதி முடிவு -டிசம்பர் 23, 2023 அன்று காலை 07:11
ஸ்மார்த்த ஏகாதசிக்கான பரண நேரம் - டிசம்பர் 23 ஆம் தேதி , பிற்பகல் 01:22 முதல்03:26 PM
பரண நாளில் முடிவு நேரம் -பிற்பகல் 12:59
வழிபடுவது எப்படி?
காலையில் எழுந்து நீராடிவிட்டு, வீட்டில் திருமாலின் படத்தின் முன் அமர்ந்து, விஷ்ணு சகஸ்ரநாமம் சொல்லி வணங்க வேண்டும். பின், ஏகாதசியன்று விரதமிருந்து, துவாதசியில் விரதத்தை மலையேற்ற வேண்டும். மேலும் இரவு முழுவதும் கண்விழித்து புராண நூல்களை படிப்பதும், விஷ்ணு சகஸ்ரநாமம், விஷ்ணு பாடல்கள் மற்றும் ரங்கநாதர் ஸ்துதி முதலியவற்றை ஓதுவதுமாக இருப்பது சிறப்பு.
ஏகாதசி அன்று செய்யக்கூடாதவையும் செய்ய வேண்டியவையும்
1. ஏகாதசி திதி நாட்களில் தாய், தந்தைக்கு நினைவு நாள் (சிரார்த்தம்) வந்தால் அன்று நடத்தாமல் மறு நாள் துவாதசி அன்று நடத்த வேண்டும்.
2. ஏகாதசி அன்று உண்ணாமல் இருப்பவர்களை கேலி செய்யக்கூடாது.
3. ஏகாதசி அன்று துளசி இலைகளை பறிக்கக் கூடாது. தேவையானதை முதல்நாளே பறித்து வைத்து விட வேண்டும்.
4. பரமபதம் வைகுண்ட ஏகாதசியன்று இரவு கண்விழித்து பரமபதம் விளையாடுவது ஒரு முக்கியமான சம்பிரதாயமாகக் கருதப்படுகிறது.
5. பாவம் செய்தவர்கள் வாழ்வில் கீழே இறங்குவர் என்பதையும், புண்ணியம் செய்தால் சொர்க்கமாகிய திருமாலின் வைகுண்டத்தை எளிதாக அடையலாம் என்பதையும் இதன்மூலம் தெரிந்து கொள்ளலாம்.
6. ஏகாதசி நாளில் உண்ணாமலும் உறங்காமலும் விரதம் இருக்க வேண்டும் என்பதே முக்கியம்.
7. ஆனால், ஏகாதசி விரதம் இருப்பவர்கள் பூரண உபவாசம் (பட்டினி) இருக்க வேண்டும். குளிர்ந்த நீர் குடிக்க தடையில்லை. ஏழு முறை துளசி இலை சாப்பிட வேண்டும். ஏகாதசி குளிர் மாதமான மார்கழியில் வருவதால், உடலுக்கு வெப்பம் கிடைக்க துளசியை சாப்பிட வேண்டும்.
8. பட்டினி கிடப்பதால், ஜீரண உறுப்புகளுக்கு ஓய்வு கிடைக்கிறது. குளிர்ந்த நீர் வயிறை சுத்தமாக்குகிறது.
9. ஏகாதசியில் அன்னதானம் செய்ய வேண்டும்.
10. அகத்திக் கீரையில் பாற்கடல் அமுதமும், நெல்லி, சுண்டைக்காயில் லட்சுமியின் அருளும் இருப்பதாக ஐதீகம். அதனால் துவாதசி நாளில் சுவாமிக்கு நைவேத்யம் செய்து, ஒரு ஏழைக்கு தானம் செய்த பிறகு நாம் சாப்பிட வேண்டும்.
Tags:
நம்பிக்கை