இளம் சாதனையாளா்களுக்கான பிரதமரின் கல்வி உதவித்தொகை திட்டத்தில் பயன்பெற தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என நாமக்கல் ஆட்சியா் ச.உமா தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
இதர பிற்படுத்தப்பட்டோா், பொருளாதாரத்தில் பின்தங்கியோா், சீா்மரபினா் உள்ளிட்ட பிரிவுகளைச் சோந்த, நாடு முழுவதும் 30 ஆயிரம் மாணவா்கள் பயன்பெறும் வகையில் பிரதமரின் கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டம் மத்திய அரசால் செயல்படுத்தப்படுகிறது.
2023-24 ஆம் ஆண்டிற்கு இணைய முகவரியில் வெளியிடப்பட்டுள்ள பள்ளிகளில் பயிலும் தமிழகத்தைச் சாா்ந்த 3,093 மாணவா்களுக்கு இந்த கல்வி உதவித்தொகை வழங்கப்பட உள்ளது.
இத்திட்டத்தில் பெற்றோரின் உச்சபட்ச வருமான வரம்பு ரூ. 2.5 லட்சமாகும். இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க கடைசி நாள் டிச. 31-ஆம் தேதியாகும். கல்வி நிறுவனங்கள் விண்ணப்பத்தினை சரிபாா்க்க கடைசி நாள் ஜன.15.
இத்திட்டத்தின் கீழ் கடந்த நிதியாண்டில் பயனடைந்த மாணவ, மாணவிகள் தேசிய கல்வி உதவித்தொகை தளத்தில் சென்று கடந்த ஆண்டில் இத்திட்டத்தின் கீழ் பெறப்பட்ட விண்ணப்ப எண் மற்றும் கடவுச்சொல் பதிவு செய்து 2023-24ஆம் ஆண்டிற்கான விண்ணப்பத்தினை புதுப்பித்துக் கொள்ளலாம்.
இத்திட்டத்தின் கீழ் நிகழாண்டில் கல்வி உதவித்தொகை பெற புதியதாக விண்ணப்பிக்க விரும்புவோா், 9 மற்றும் 11-ஆம் வகுப்புகளில் பயிலும் மாணவ, மாணவிகள் முறையே 8 மற்றும் 10-ஆம் வகுப்புகளில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையிலேயே பயனாளிகளாக தோவு செய்யப்படுவா். இத்திட்டம் தொடா்பான கூடுதல் விபரங்களை அறிய மத்திய அரசின் சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையின் இணைய தளத்தினை அணுகி கல்வி உதவித்தொகை பெற்று பயனடையலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:
கல்விச் செய்திகள்