உங்கள் குழந்தையின் நினைவாற்றல் பெருக வேண்டுமா? இந்த உருண்டை ஒன்று போதும்!

தேவையான பொருட்கள்

நெய் - 2 டேபிள் ஸ்பூன்

ராகி மாவு - 1 கப்

முந்திரி - ஒரு கைப்பிடியளவு (உடைத்தது)

நட்ஸ் பொடி - 2 ஸ்பூன்

ஏலக்காய்ப்பொடி - கால் ஸ்பூன்

வெல்லம் - ஒரு கப் (பொடித்தது)

உப்பு - ஒரு சிட்டிகை

செய்முறை

ஒரு கடாயில் நெய் சேர்த்து சூடானதும், முந்திரி பருப்பை வறுத்து, தனியாக எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.

அதே கடாயில் உள்ள நெய்யில் ராகி மாவை வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும். வாசம் வந்து நல்ல மணல், மணலாகும் வரை வறுத்து மற்றொரு பாத்திரத்தில் சேர்த்து ஆறவைக்க வேண்டும்.

பின்னர் அதில் வறுத்த முந்திரி, நட்ஸ் பொடி, ஏலக்காய்ப்பொடி, வெல்லம், சிட்டிகை உப்பு அனைத்தையும் சேர்த்து நன்றாக கலந்துவிட வேண்டும்.

பின்னர் அதில் நெய் ஊற்றி உருண்டை பிடிக்க வேண்டும். அது சரியாக வரவில்லையென்றால், உருக்கிய நெய் சேர்த்து உருண்டைகளை பிடித்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

இதை ஒரு காற்றுப்புகாத டப்பாவில் அடைத்து வைத்துக்கொண்டு, தினமும் ஒரு உருண்டை கொடுத்து வந்தால், குழந்தையின் உடல் ஆரோக்கியம் மேம்படும்.

குழந்தையின் நினைவாற்றல் பெருகும். மேலும் இது குழந்தைகளுக்கு பிடித்த மாலை நேர சிற்றுண்டியாகவும் இருக்கும்.

ராகியின் நன்மைகள்

ராகி, கேழ்வரகு என்று தமிழில் அழைக்கப்படுகிறது. இது சிறுதானிய வகையைச் சேர்ந்தது. இந்தியாவில் பரவலாக பயன்படுத்தப்படும் உணவு. இதில் கஞ்சி, புட்டு, இடியாப்பம் உள்ளிட்ட உணவு வகைகளை செய்யமுடியும். இது உடல் ஆரோக்கியத்தை பேண உதவுகிறது.

மேலும் ராகியில் தாதுப்பொருட்கள் அதிகம் உள்ளது. மற்ற சிறுதானியங்களில் இருப்பதை விட 5-30 மடங்கு கால்சியம் ராகியில் நிறைந்துள்ளது. மேலும், இதில் பாஸ்பரஸ், பொட்டாசியம், இரும்பு போன்ற சத்துக்களும் உள்ளது. எலும்பு உறுதிக்கும், ஆரோக்கியத்திற்கும் கால்சியம் என்பது மிகவும் முக்கியமானது.

இதில் கால்சியம் மட்டுமின்றி, நார்ச்சத்து, கார்போஹைட்ரேட், கொழுப்பு, புரதம், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் போன்ற பிற ஊட்டச்சத்துக்களும் நிறைந்துள்ளன. ராகியின் ஊட்டச்சத்து மதிப்பு காரணமாக இது சமீபகாலமாக ஆரோக்கியமான உணவில் பயன்படுத்தப்படுகிறது.

உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், இதய பிரச்னை, செரிமான நிலைகள் (IBS) மற்றும் எலும்பு நோய்கள் போன்ற பல்வேறு நாட்பட்ட நிலைகளின் அபாயங்களைக் குறைக்க உதவும் ஆன்டிஆக்ஸிடன்ட்களும் இதில் அதிகம். இது ஒரு சூப்பர்ஃபுட் உணவு வகையைச் சேர்ந்தது.

இது ப்ரேக் ஃபாஸ்ட்க்கு அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இதில் உள்ள வைட்டமின் சத்துக்கள் நோய் எதிர்ப்புக்கம், சரும, முடி ஆரோக்கியத்துக்கும் உதவுகிறம். கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு சிறந்தது. உடல் எடையை குறைக்க உதவுகிறது.

6 மாதத்தில் குழந்தைகளுக்கு ராகி மாவில் செய்து கொடுக்கப்படும் கஞ்சி அல்லது களி குழந்தையின் வளர்ச்சியில் பெரும் பங்கு வகிக்கிறது.
Previous Post Next Post