புதிதாக பணியில் சேரும் ஆசிரியர்களுக்கு செக் வைத்த பள்ளிக் கல்வித்துறை!

தமிழ்நாட்டில் புதிதாக 2,000 பட்டதாரி ஆசிரியர்கள் பணியமர்த்தப்பட உள்ளனர். இதற்கான தேர்வு தேதி ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் புதிதாக பணியமர்த்தப்படும் ஆசிரியர்களுக்கு 5 ஆண்டுகள் பணியிட மாறுதல் கிடையாது என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

இது குறித்து பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் , பள்ளிக் கல்வி இயக்குநருக்குக் கடிதம் எழுதியுள்ளார்.அந்த கடிதத்தில், 757 பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்பிட தற்போது வழிவகையில்லை.

ஆசிரியர் பணியிடங்கள் அதிகமாக காலியாக உள்ள மாவட்டங்களில் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் எண்ணிக்கையுடைய பள்ளிகளுக்கு பணிநிரவல் (deployment) செய்யப்பட வேண்டும்.தற்போது பட்டதாரி ஆசிரியர் 2000 பணியிடங்களை நிரப்பிக் கொள்ள அனுமதிக்கப்பட்டதில் தேர்வாகும் தேர்வர்களை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் அதிகமாக காலியாகவுள்ள கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மற்றும் தருமபுரி மாவட்டங்களில் முன்னுரிமை அடிப்படையில் நியமனம் செய்யப்பட வேண்டும்.

இந்த மாவட்டங்களில் தேர்வர்களை முதலில் நியமனம் செய்யும் போதே குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் இம்மாவட்டங்களில் பணிபுரிய வேண்டும் எனும் நிபந்தனையை நியமன ஆணையில் குறிப்பிட்டு நியமனம் செய்யப்பட வேண்டும்.அதோடு, மேற்காணும் அறிவுறுத்தல்களை தவறாது கடைப்பிடிக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது. மீறுவோர் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
Previous Post Next Post