மகளிர் உரிமைத்தொகை: விண்ணப்பிக்கலயா? கவலை வேணாம்! மீண்டும் சான்ஸ்.. எப்போது தெரியுமா? அமைச்சர் தகவல்

மகளிர் உரிமைத்தொகைக்கு புதிய விண்ணப்பங்கள் வரும் ஜனவரி மாதம் முதல் பெறப்படும் என்றும் இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் ஜனவரி முதல் விண்ணப்பிக்கலாம் என்றும் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின் போது திமுக பல்வேறு வாக்குறுதிகளை அளித்தது. ஆட்சிக்கு வந்தால் மகளிருக்கு மாதம் தோறும் 1000 ரூபாய் உரிமைத்தொகை வழங்கப்படும் என திமுக அறிவித்த வாக்குறுதி மிகவும் கவனம் பெற்றது. தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்த திமுக ஆவின் பால் விலை குறைப்பு, கொரோனா நிவாரணம், மகளிருக்கு இலவச பஸ் பயணம் உள்ளிட்ட திட்டங்களை உடனடியாக செயல்படுத்தியது.

எனினும் ரூபாய் 1000 உரிமைத் தொகை எப்போது அளிக்கப்படும் என்ற கேள்வி எழுந்தது. இந்த நிலையில் 1000 மகளிர் உதவித் தொகை செப்டம்பர் 15 ஆம் தேதி முதல் வழங்கப்படும் என முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவித்தார். அதற்கான பயனாளிகள் தேர்வு செய்யும் பணிகளை செய்யுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அந்த வகையில் உரிமைத் தொகை பெற அரசு பதவியில் இருக்கக் கூடாது.

மீண்டும் வாய்ப்பு: வருமான வரி செலுத்தக் கூடாது, ஆண்டுக்கு 3600 யூனிட்டுகளுக்கு மேல் பயன்படுத்தக் கூடாது, சொந்தமாக 4 சக்கர வாகனங்கள் இருத்தல் கூடாது உள்ளிட்ட பல நிபந்தனைகள் போடப்பட்டது . அதன்படி தகுதியுடையவர்களுக்கு கடந்த செப்டம்பர் 15 ஆம் தேதி முதல் மாதந்தோறும் 1000 ரூபாய் வரவு வைக்கப்பட்டு வருகிறது. மகளிர் தொகைக்கு விண்ணப்பித்து நிராகரிக்கப்படும் மகளிருக்கு உரிய காரணமும் தெளிவாக அரசு தரப்பில் கூறப்பட்டு இருந்தது.

ஜனவரி மாதம் முதல்: இதில் ஏதேனும் குறைபாடுகள் இருந்தால் மேல் முறையீடு செய்யவும் அரசு அனுமதி அளித்தது. தகுதியுள்ள ஒரு மகளிர் கூட விடுபட்டுக்கூடாது என்பதற்காக விண்ணப்பங்களை உரிய முறையில் பரிசீலித்து ஆயிரம் ரூபாய் உதவித்தொகையை அளித்து வருகிறது.

இந்த நிலையில், மகளிர் உரிமைத்தொகையை பெறுவதற்கான புதிய விண்ணப்பங்கள் ஜனவரி முதல் பெறப்படும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். இதுவரை மகளிர் உரிமை தொகை கேட்டு விண்ணப்பிக்காதவர்களும் விண்ணப்பிக்கலாம் எனவும் அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.
Previous Post Next Post