காலை எழுந்ததும் வெறும் வயிற்றில் பப்பாளி பழம் சாப்பிட்டால்...

எப்போதும் வெறும் வயிறாக இருக்கும்போது ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக் கொள்வது நல்லது. சில ஆரோக்கியமான எளிய பழங்கள் இதற்கு உதவலாம்.

இதற்குப் பருவக்கால பழமான பப்பாளி ஒரு சிறந்த பழமாகும். இதன் வாசனை காரணமாக சிலருக்கு இது பிடிப்பதில்லை என்றாலும் பப்பாளி பல ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது, மேலும் அதை வெறும் வயிற்றில் உண்பது மூலம் நாம் பல நன்மைகளைப் பெற முடியும்.

இது குறைந்த அளவில் கலோரிகளை கொண்டிருந்தாலும் அதிக அளவில் நார்ச்சத்துக்களை கொண்டுள்ளது, இதனால் உடல் எடையைக் குறைக்கவும் கொழுப்பைக் கட்டுப்படுத்தவும் பப்பாளி உதவுகிறது, மேலும் வெறும் வயிற்றில் ஒரு கப் பப்பாளி சாப்பிடுவது வயிற்றுக்கு பல நன்மைகளை செய்கிறது. இது செரிமான பாதையில் உள்ள நச்சுக்களை அழித்து குடல் இயக்கத்தைச் சீராக்குகிறது. மேலும் வயிறு உப்புசம், வயிறு கோளாறு மற்றும் மலச்சிக்கல் போன்ற செரிமான பிரச்சனைகளை சரி செய்யவும் பப்பாளி உதவுகிறது.

வைட்டமின் ஏ மற்றும் சி யை பப்பாளி அதிகமாக கொண்டுள்ளது, மேலும் உடலில் உள்ள நச்சுக்களை நீக்கி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இது உதவுகிறது. இந்த கொரோனா காலத்தில் நாம் நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது முக்கியமாகும். நாம் பப்பாளியை வெறும் வயிற்றில் சாப்பிடும்போது இது தொற்றுநோய்களைத் தடுக்க உதவுகிறது.

நீங்கள் உடல் எடையைக் குறைக்க முயற்சித்துக் கொண்டுள்ளீர்கள் எனில் உங்களுக்குப் பப்பாளி கண்டிப்பாக உதவும், காலை உணவாக ஒரு கப் பப்பாளியை சேர்த்துக்கொள்வது உடல் எடை குறைப்பிற்கு நன்மை பயக்கிறது. உடல் எடை அதிகரிப்பிற்கு கலோரி முக்கிய காரணமாக உள்ளது. பப்பாளி குறைவான அளவில் கலோரிகளை கொண்டுள்ளது. அதே நேரம் செரிமான சக்தியை மேம்படுத்த உதவும் நார்ச்சத்தை இது அதிகமாகக் கொண்டுள்ளது.

இதனால் பப்பாளி உங்கள் பசியை கட்டுப்படுத்துவதோடு நீண்ட நேரம் வயிறை திருப்தியாக உணர வைக்கிறது. பப்பாளியில் வைட்டமின் சி, பொட்டாசியம், ஆண்டி ஆக்ஸிடண்ட்கள் மற்றும் நார்ச்சத்துக்கள் இருப்பதால் இது தமனிகளின் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது, மேலும் இதனால் நமது உடலில் இரத்த ஓட்டம் சீராக இருக்கிறது, மேலும் இந்த சுழற்சியால் உடலில் உள்ள கொழுப்பின் அளவானது குறைகிறது, இதனால் நமக்கு இதய நோய்கள் மற்றும் பக்கவாதம் ஏற்படுவதற்கான வாய்ப்புகளைக் குறைக்க பப்பாளி உதவுகிறது. எனவே உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்கள் இனி உங்களது உணவில் பப்பாளியை சேர்த்துக் கொள்ள மறக்க வேண்டாம்.

​அழற்சி எதிர்ப்பு

பப்பாளியில் உள்ள பபைன் என்சைம் உடலில் ஏற்படும் அழற்சியை குறைக்க உதவுகிறது. மேலும் இது ஒரு இயற்கை நிவாரணியாக செயல்படுகிறது. இந்த பபைன் வீக்கத்தை சரி செய்ய உதவுகிறது. மேலும் உடலில் புரத உற்பத்திக்கு இது வெகுவாக உதவுகிறது எனக் கூறப்படுகிறது.

காலம் காலமாகப் பப்பாளி கண்களுக்கு நல்லது என்கிற பேச்சை பெரியவர்கள் கூற கேட்டிருப்போம், அது முற்றிலும் உண்மையே. பப்பாளியில் உள்ள முக்கிய ஊட்டச்சத்துக்களான லுடீன், ஜியாக்சாண்டின் மற்றும் வைட்டமின் ஈ ஆகியவை கண்களுக்கு நல்லது மற்றும் கண்களில் வயது தொடர்பாக ஏற்படும் மாகுலர் சிதைவைத் தடுக்க இது உதவுகிறது.

​சருமத்திற்கு நன்மை செய்கிறது

பப்பாளி ஒருவரது உடலுக்கு எவ்வளவு நன்மை பயக்கிறது என்பதை இதுவரை பார்த்தோம். ஆனால் அது நமது சருமத்திற்கும் பல்வேறு நன்மைகள் அளிப்பது பலருக்கு தெரியாத விஷயமாக இருக்கலாம். இந்த பழம் சருமத்தை மேம்படுத்துவதற்கு மிகவும் உதவுகிறது. வைட்டமின் சியை இது அதிகமாகக் கொண்டிருப்பதால் பீட்டா கரோட்டீன் மற்றும் லைகோபீன் போன்ற கரோட்டினாய்டுகளை கொண்டுள்ளது.

இவை இரண்டும் ஒன்றாக சேரும்போது அவை நமது சருமத்திற்கு பல நன்மைகளை செய்கின்றன. மேலும் சருமத்தில் ஏற்படும் ஃப்ரீ ரேடிக்கல் பிரச்சனைகளில் இருந்தும் இது பாதுக்காப்பு அளிக்கிறது. இதன் விளைவாக வயதாவதற்கு முன்பே முகங்களில் ஏற்படும் சுருக்கங்களை சரி செய்ய இவை உதவுகின்றன. நீண்ட நாட்களுக்கு சருமம் இளமையுடன் இருப்பதற்கு பப்பாளி உதவுகிறது.

நம் வீட்டில் பெரியோர்கள் பப்பாளி பழத்தைக் கர்ப்பிணி பெண்கள் உண்ணக்கூடாது என கூறுவதை கேட்டிருப்போம். அதை முழுவதுமாக ஏற்றுக்கொள்ள முடியாது என்றாலும் அவர்கள் சொல்வதிலும் சிறிது உண்மை இருக்கவே செய்கிறது.

பப்பாளியில் கருப்பையில் சுருக்கத்தை ஏற்படுத்தக்கூடிய லேடேக்ஸ் என்னும் கலவை இருக்கிறது. கர்ப்பமாகி குழந்தை வளர்ந்த நிலையில் உள்ளவர்களுக்கு இது பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது என்றாலும் கர்ப்பமாகி ஆரம்பக்கட்டத்தில் இருப்பவர்களுக்கு இது பாதிப்பை ஏற்படுத்தலாம். எனவே கர்ப்பிணி பெண்கள் பப்பாளியை தவிர்ப்பது நல்லது.

பப்பாளி பல்வேறு ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டது. மேலும் விலை குறைவான பழமாகும். எனவே இனி உங்கள் அதிகாலை உணவாக பப்பாளியை சேர்த்துக்கொள்ளலாம். அதன் மூலம் பல ஆரோக்கிய நன்மைகளை நீங்கள் பெற முடியும்.
Previous Post Next Post