தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் 2024ம் ஆண்டில் நடத்தவுள்ள போட்டித்தேர்வுகளின் அட்டவணையை வெளியிட்டது.
இதில், இளைஞர்கள் பலரும் எதிர்பார்த்த குரூப் 4, குரூப் 1, குரூப் 2/2ஏ பணிக்கான போட்டித் தேர்வுகள் இடம்பெற்றுள்ளன. இந்த அட்டவணை வெளியான பின்பு, தனியார் பயிற்சி நிறுவனங்களும், சில யூ டியூப் சேனல்களும் இளைஞர்களை கவரும் வகையில் செய்திகளை வெளியிட்டு வருகின்றன. எனவே, அரசுப் போட்டித் தேர்வுகளின் உண்மையான களநிலவரம் என்ன? எந்தளவு தேர்வில் முதலீடு செய்ய வேண்டும்? உள்ளிட்ட கேள்விகளுக்கான பதிலை இங்கு பாப்போம்.
டிஎன்பிஎஸ்சி, எஸ்எஸ்சி உள்ளிட்ட இதர பணியாளர் தேர்வுகளில் அதிக அளவிலான இளைஞர்கள் பங்கேற்று வருகின்றனர். ஒருகாலகட்டத்தில் அரசுத் துறைகளில் பெரும்பாலும் குறிப்பிட்ட வர்க்க சமூகத்தைச் சேர்ந்த மக்களுக்கே ஆதிக்கம் செலுத்தி வந்த நிலையில், இன்று அதற்கான தடைகள் நீக்கப்பட்டுள்ளன. இப்போது, தேர்வுகள் நடத்தப்பட்டு தகுதி மற்றும் இடஒதுக்கீடு அடிப்படையில் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.
மேனிலை நோக்கிய ஒரு சமூக பொருளாதார வட்டங்களுக்கு செல்ல விரும்பும் லட்சக்கணக்கான இளைஞர்கள் போட்டித் தேர்வுகளுக்கு தயாராகி வருகின்றனர். தமிழ்நாட்டில் தோராயமாக 4ல் 1 கல்லூரி பட்டதாரி ஏதேனும் ஒரு அரசு போட்டித் தேர்வில் கலந்து கொள்வதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இதில் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் எந்தவித வேலைக்கும் செல்லாமல் போட்டித் தேர்வுகளுக்கு என்று முழுநேரமாக படித்து வருகின்றனர்.
ஆனால், இந்த தேர்வுகளில் காணப்படும் போட்டி இன்று தீவிரத் தன்மையை எட்டியுள்ளது. உதாரணமாக, 2023ல் டிஎன்பிஎஸ்சி 14 தேர்வுகளை நடத்தியது. இதில், 20 லட்சம் தேர்வர்கள் கலந்து கொண்டனர். தேர்வில் கலந்து கொண்டவர்களில் மொத்தமாக 10,000 பேர் மட்டுமே அரசு பதவிகளுக்கான வேலை வாய்ப்பினை பெற்றனர். அதாவது, டிஎன்பிஎஸ்சி ஆட்சேர்ப்பின் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் விகிதம் (Selection Rate: Total Job position/ total job applicant) 1%க்கும் குறைவாக உள்ளது.
டிஎன்பிஎஸ்சி உள்ளிட்ட இதர தேர்வுகளில் காணப்படும் அதிக அளவிலான போட்டிகள், தேர்வர்களிடம் அதிகப்படியான எதிர்மறையான தாக்கங்களை ஏற்படுத்துகின்றன. குறிப்பாக, தேர்வு பாதையில் பல்லாண்டு காலமாக நின்று வரும் நீண்ட கால தேர்வர்களை சொல்லலாம். தொடர்ச்சியாக தேர்வுகளை சந்தித்து வரும் தேர்வர்கள் இதர வேலைகளுக்கு செல்லாமல் அரசுத் தேர்வுகளில் கூடுதல் முதலீட்டை செய்து வருகின்றன.
உதாரணமாக, கடந்த 2001 முதல் 2006 ஆண்டு வரையிலான காலகட்டத்தில், பொருளாதார நிதிநெருக்கடி காரணமாக, குரூப் 1, 2,4 பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு அறிவிக்கைகளை தமிழ்நாடு அரசு நிறுத்தி வைத்திருந்தது. இந்த காலகட்டத்தில், கல்லூரி படிப்புகளில் முடித்த இளைஞர்கள், டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கான தயாரிப்பிலே தொடர்ந்து கவனம் செலுத்தியதாகவும், சந்தை பொருளாதாரத்திற்கு ஏற்ற திறன்கள் பெறாமல் குறைந்த சம்பளம் பெறும் வேளையில் பணியமர்த்தப்பட்டதாகவும் Kunal Mangal என்ற ஆய்வாளர் தனது ஆய்வுக் கட்டுரையில் (The Long-Run Costs of Highly Competitive Exams for Government Jobs) தெரிவிக்கிறார். மேலும், இந்த விண்ணப்பதாரர்கள், திருமணம் செய்து கொள்வதை தள்ளி வைத்ததாகவும், தாய் தந்தையை அதிகம் சார்ந்து இருக்க தொடங்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், குடும்பத்தின் மூத்த உறுப்பினர்கள் வருமான இழப்பை ஈடுசெய்வதற்கா ஓய்வு பெறுவதை தாமதப்படுத்தி தொடர்ந்து உழைத்ததாகவும் கூறுகிறார்.
எனவே, 2024ல் அரசு தேர்வுகளை எதிர்நோக்கி காத்திருக்கும் தேர்வர்கள், உங்களுக்காகவே சுய நிபந்தனை வரம்புகளை நிர்ணயித்துக் கொள்ள வேண்டும். இலக்கை நோக்கி போதுமான முன்னேற்றம் அடைந்து வருகிறோமா? என்று தொடர்ந்து கண்காணித்து கொள்ள வேண்டும்.
அரசு தேர்வுகள் என்பது உங்களுக்கு கிடைத்த ஒரு பெரிய வாய்ப்பு. ஆனால், அந்த வாய்ப்பை உங்களிடம் இருந்து யாரும் பறிக்க முடியாது. இருப்பினும், தேர்ந்தெடுக்க வாய்ப்பில்லை என்று நீங்கள் கருதினால் அதில் இருந்து பின்வாங்கும் முழு சுதந்திரம் உங்களுக்கு உண்டு என்பதையும் நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும். மேலும், முழுநேரமாக தேர்வுக்கு தயாராகி வருபவராக இருந்தால், தொலைதூரக் கல்வி மூலம் சான்றிதழ் பெறுவது, கணினி , தட்டச்சு சான்றிதழ் பெறுவது , ஆங்கில அறிவை வளர்ப்பது, பகுதி நேர வேலை மூலம் வருவாய் ஈட்டுவது போன்ற கூடுதல் நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியமானதாகும்.
Tags:
பொதுச் செய்திகள்