தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை 2024-ன் மூலம் நடத்தப்பட்ட இரண்டாம் சுற்று கவுன்சிலிங்கின் முடிவில், 197 கல்லூரிகளில் 10%க்கும் குறைவான இடங்களே நிரம்பியுள்ளன.
அதேநேரம் அண்ணா பல்கலைக்கழக வளாக கல்லூரிகள் 100% நிரம்பியுள்ளன.
தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள 440க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளின் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நடைபெற்று வருகிறது
'இரண்டு சுற்றுகளின் முடிவில், 39.39 சதவீதம் இடங்கள் நிரம்பி உள்ளது. 69,147 மாணவர்களுக்கு இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கலந்தாய்வில் பங்கேற்காத மாணவர்களின் சதவீதம் முதல் சுற்றில் 32 சதவீதமாக இருந்தது. 2 வது சுற்றில் 41.61 சதவீதமாக அதிகரித்துள்ளது.
2 ஆவது சுற்றில் 87,422 மாணவர்கள் அழைக்கப்பட்டதில், 37,089 மாணவர்கள் பங்கேற்கவில்லை. முதல் மற்றும் 2 வது சுற்றில் 1,15,439 மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், 69,147 மாணவர்களுக்கு இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 46,292 மாணவர்கள் பங்கேற்க வில்லை' என கல்வி ஆலோசகர் அஸ்வின் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, இரண்டாம் சுற்று முடிவில் அண்ணா பல்கலைக்கழக வளாக கல்லூரிகளில் 100% இடங்கள் நிரம்பியுள்ளன. கிண்டி வளாகம், எம்.ஐ.டி வளாகம் மற்றும் கட்டிடக்கலை மற்றும் திட்டமிடல் வளாகங்களில் 100% இடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. இதேபோல், காரைக்குடியில் உள்ள மத்திய மின்வேதியியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் (CECRI) அனைத்து இடங்களும் நிரப்பப்பட்டுள்ளன.
40 கல்லூரிகளில் 90% இடங்களும், 29 கல்லூரிகளில் 75% இடங்களும் நிரம்பிவிட்டன. 90% இடங்களுக்கு மேல் நிரப்பப்பட்ட அரசு மற்றும் உதவி பெறும் கல்லூரிகளில், அரசு தொழில்நுட்பக் கல்லூரி, கோயம்புத்தூர்; கோயம்புத்தூர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி; அரசு பொறியியல் கல்லூரி, சேலம், அரசு பொறியியல் கல்லூரி, திருநெல்வேலி, அரசு பொறியியல் கல்லூரி, ஈரோடு (IRTT) மற்றும் அரசு பொறியியல் கல்லூரி ஸ்ரீரங்கம், அண்ணா பல்கலைக்கழக மண்டல வளாகம், கோவை; அரசு பொறியியல் கல்லூரி, பர்கூர்; தியாகராஜர் பொறியியல் கல்லூரி, மதுரை; அழகப்ப செட்டியார் அரசு பொறியியல் கல்லூரி, காரைக்குடி; பி.எஸ்.ஜி தொழில்நுட்பக் கல்லூரி, கோயம்புத்தூர்; சிப்பெட் சென்னை (CIPET); மற்றும் தந்தை பெரியார் அரசு தொழில்நுட்ப நிறுவனம், வேலூர் ஆகியவை அடங்கும்.
2வது சுற்று முடிவில், 197 கல்லூரிகளில் 10%க்கும் குறைவான இடங்களும், 58 கல்லூரிகளில் 1%க்கும் குறைவான இடங்களும் நிரம்பியுள்ளன, 30 கல்லூரிகளில் எந்த இடமும் நிரப்பப்படவில்லை.
இரண்டாம் சுற்று முடிவில், கணினி அறிவியல் சார்ந்த படிப்புகளில் 59.13% இடங்கள், இ.சி.இ (ECE) மற்றும் தொடர்புடைய பிரிவுகளில் 16.5% இடங்கள்; இ.இ.இ (EEE) மற்றும் தொடர்புடைய பிரிவுகளில் 6.24% இடங்கள்; மெக்கானிக்கல் பிரிவில் 5.27% இடங்கள்; மற்றும் சிவில் இன்ஜினியரிங் பிரிவில் 2.86% இடங்கள் நிரம்பியுள்ளன. மீதமுள்ள பிரிவுகள் மொத்தம் எடுக்கப்பட்ட இடங்களில் 10% ஆகும், என்று அஸ்வின் கூறினார்.
மாணவர்கள் பெரும்பாலும் சென்னை மற்றும் கோயம்புத்தூரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரிகளை, கேம்பஸ் இண்டர்வியூ எதிர்ப்பார்த்து அதிகம் தேர்வு செய்கின்றனர் என்றும் அஸ்வின் கூறினார்.
Tags:
கல்விச் செய்திகள்