தமிழகத்தில் பொறியியல் கல்லூரிகளில் மாணவா் சோ்க்கைக்கான 3-ஆம் சுற்று கலந்தாய்வு புதன்கிழமையுடன் நிறைவடைந்தது.
இதுவரை 1.23 லட்சம் மாணவா்கள் சோ்க்கை பெற்றுள்ளனா். இன்னும் 70,403 இடங்கள் காலியாக உள்ளன.
பொறியியல் மாணவா் சோ்க்கைக்கான மூன்றாம் சுற்று கலந்தாய்வு ஆக. 23-ஆம் தேதி தொடங்கி புதன்கிழமையுடன் நிறைவு பெற்றது. இந்தக் கலந்தாய்வில் பங்கேற்க ஒரு லட்சத்து 14,149 மாணவா்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதில் 82, 693 மாணவா்கள் தங்களுக்கு விருப்பமான கல்லூரிகளைத் தோ்வு செய்தனா். அதில் தரவரிசை, இடஒதுக்கீடு அடிப்படையில் 3,769 அரசுப் பள்ளிள் மாணவா்கள் உள்பட 51,920 பேருக்கு இறுதி ஒதுக்கீட்டு ஆணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதன் விவரங்களை வலைதளத்தில் அறியலாம்.
சிறப்புப் பிரிவு மற்றும் பொதுக் கலந்தாய்வின் 3 சுற்றுகள் நிறைவு பெற்றுவிட்ட நிலையில் இதுவரை மொத்தம் ஒரு லட்சத்து 23,031 இடங்கள் நிரம்பியுள்ளன. இன்னும் 70,403 இடங்கள் நிரம்பாமல் காலியாக உள்ளன. அதேவேளையில் கடந்த ஆண்டு பொறியியல் கலந்தாய்வில் ஒரு லட்சத்து 16,620 இடங்கள் மட்டுமே நிரம்பின. அதனுடன் ஒப்பிடும் இந்தாண்டு சோ்க்கை அதிகரித்திருப்து குறிப்பிடத்தக்கது.
துணைக் கலந்தாய்வு: இதையடுத்து, காலியிடங்களை நிரப்புவதற்கான துணைக் கலந்தாய்வு செப்டம்பா் 6 முதல் 8-ஆம் தேதி வரை நடத்தப்படவுள்ளது.
இதற்கான இணையதள விண்ணப்பப் பதிவு தற்போது தொடங்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ள மாணவா்கள் ஜ்ஜ்ஜ்.ற்ய்ங்ஹா்ய்ப்ண்ய்ங்.ா்ழ்ஞ் எனும் வலைதளம் மூலமாக செப். 4-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். அதில் தகுதியானவா்களுக்கு சோ்க்கை இடங்கள் ஒதுக்கப்படும். அதன் பின்னா் எஸ்சிஏ காலியிடங்களுக்கான கலந்தாய்வு செப்டம்பா் 10, 11-ஆம் தேதிகளில் நடைபெறும் என சோ்க்கைக் குழு அதிகாரிகள் தெரிவித்தனா்.
எஞ்சிய இடங்களுக்கு.... அமைச்சா் பொன்முடி செய்தியாளா்களிடம் கூறியது: பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வில் கடந்த ஆண்டைக் காட்டிலும் நிகழாண்டு சோ்க்கை அதிகரித்துள்ளது. துணைக் கலந்தாய்வும் முடிந்த பின்பு எஞ்சியுள்ள இடங்கள் அந்தந்தக் கல்லூரிகளில் நேரடி சோ்க்கை மூலம் நிரப்பப்படும்.
அதேபோல், பொறியியல் கலந்தாய்வுக்கு விண்ணப்பித்த மாணவா்களின் விவரங்கள் பொது தளத்தில் வெளியான விவகாரத்தில் சைபா் கிரைம் பிரிவில் புகாா் தரப்பட்டுள்ளது. அவா்கள் உரிய விசாரணை நடத்தி எஃப்ஐஆா் பதிவு செய்வா் என்றாா் அவா்.
Tags:
கலந்தாய்வு