உயர்க்கல்வி பயிலும் மாணவர்கள் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மற்றும் அனைத்து நகர கூட்டுறவு வங்கிகளை அணுகி ரூ.5 இலட்சம் வரை கல்விக்கடன் பெற விண்ணப்பிக்கலாம்.
இது குறித்து சேலம் மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்தி குறிப்பில்; உயர்க்கல்வி பயிலும் மாணவர்கள் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மற்றும் அனைத்து நகர கூட்டுறவு வங்கிகளை அணுகி ரூ.5 இலட்சம் வரை கல்விக்கடன் பெற விண்ணப்பிக்கலாம். விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அணுகக்கூடிய மிக முக்கிய துறையாக கூட்டுறவுத்துறை விளங்குகிறது. அந்த வகையில் கூட்டுறவுத்துறையின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட அளவிலான கூட்டுறவுத்துறை அலுவலர்களுடன் ஆய்வு கூட்டங்கள் நடத்தப்பட்டு, கூட்டுறவுத்துறையில் தற்பொழுது மேற்கொள்ளப்பட்டுவரும் நடவடிக்கைகள் மற்றும் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
கூட்டுறவுத்துறையில் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி, கூட்டுறவு அச்சகம், மொத்த விற்பனை பண்டகசாலை, 8 நகர கூட்டுறவு வங்கிகள், 3 வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கங்கள், 5 நகர கூட்டுறவு கடன் சங்கங்கள், 6 தொடக்க கூட்டுறவு வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கிகள், 205 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், 97 பணியாளர்கள் கூட்டுறவு சங்கங்கள், 8 லேம்ப் கூட்டுறவு சங்கங்கள், 2 பெண்கள் உழவர் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கங்கள், 5 தொடக்க கூட்டுறவு பண்டகசாலைகள், 9 பணியாளர் கூட்டுறவு பண்டகசாலைகள், 11 மாணவர் கூட்டுறவு பண்டகசாலைகள், 4 தனிவகை சங்கங்கள் என மொத்தம் 371 கூட்டுறவு சங்கங்கள் செயல்பட்டு வருகிறது.
சேலம் மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு வங்கிகள் மற்றும் சங்கங்கள் மூலம் மகளிர் சுய உதவி குழு கடன், பயிர் கடன், கால்நடை பராமரிப்பு கடன், மாற்றுத் திறனாளிகளுக்கான கடன், மகளிர் தொழில் முனைவோர் கடன், நகைக்கடன், வீட்டுவசதி கடன்கள் ஆகிய கடனுதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலுக்கிணங்க தற்பொழுது சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மற்றும் சேலம் மாவட்ட அனைத்து நகர கூட்டுறவு வங்கிகள் மூலம் வழங்கப்படும் கல்விக்கடன் உச்சவரம்பு ரூபாய் 1 இலட்சத்திலிருந்து ரூபாய் 5 இலட்சம் வரை உயர்த்தி வழங்கப்படுகிறது. அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் மூலம் வழங்கப்படும் பட்டயப் படிப்புகள், தொழில் முறை படிப்புகள் உள்ளிட்ட இளங்கலை பட்டப்படிப்புகள், முதுகலைப் பட்டப் படிப்புகள் படிக்கும் மாணவர்கள் கல்விக்கடனை பெறலாம்.
சேலம் மாவட்டத்தில் கூட்டுறவுத்துறை மூலம் வழங்கப்படும் கல்வி கடனுக்கான 2024-25 ஆம் ஆண்டு குறியீடாக மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிக்கு ரூ.1 கோடியாகவும், சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து நகர கூட்டுறவு வங்கிகளுக்கும் சேர்த்து ரூ.1 கோடியாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து இன்றைய தினம் ஜெயராம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இளங்கலை கணினி அறிவியல் முதலாமாண்டு பயிலும் மாணவி ஆருத்ரா சுரேஷ் அவர்களுக்கு சேலம் நகர கூட்டுறவு வங்கியின் மூலம் ரூபாய் ஒரு இலட்சம் கல்வி கடன் வழங்கப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள உயர் கல்வி பயிலும் தகுதியான மாணவர்கள் அனைவரும் சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மற்றும் அனைத்து நகர கூட்டுறவு வங்கிகளையும் அணுகி கல்வி கடன் பெற்று பயனடையலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:
பொதுச் செய்திகள்