இன்றைய ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்கத்தால், உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரிப்பதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது.
உடலில் கொலஸ்ட்ரால் அதிகமானால், அதன் விளைவாக அந்த கொலஸ்ட்ரால் இரத்தக்குழாய்களில் படிந்து, இரத்த ஓட்டத்தில் தடையை ஏற்படுத்துவதோடு, ஒரு கட்டத்தில் மாரடைப்பைத் தூண்டிவிடும்.
எனவே ஒருவர் தங்கள் உடலில் கெட்ட கொலஸ்ட்ராலை தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அதற்கு உணவு முறை மற்றும் வாழ்க்கை முறையில் முதலில் மாற்றங்களை கொண்டு வர வேண்டும். முக்கியமாக உடலில் தேங்கியுள்ள கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைக்க ஒருசில உணவுப் பொருட்கள் பெரிதும் உதவி புரியும்.
அதுவும் சில உணவுப் பொருட்களை நீரில் ஊற வைத்து, காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் உட்கொள்ளும் போது, கெட்ட கொலஸ்ட்ரால் இன்னும் திறம்பட குறையும். இப்போது உடலில் தேங்கியுள்ள கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைக்க உதவும் சில உணவுகளைக் காண்போம்.
வெந்தய விதைகள்
உடலில் இருக்கும் கெட்ட கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்த வெந்தய விதைகளை சாப்பிடுவது மிகவும் நல்லது. ஏனெனில் வெந்தய விதைகளில் கரையக்கூடிய நார்ச்சத்து உள்ளது. இது கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைக்க உதவும். அதற்கு ஒரு டீஸ்பூன் வெந்தய விதைகளை இரவு தூங்கும் முன் நீரில் ஊற வைத்து, மறுநாள் காலையில் வெறும் வயிற்றில் நீருடன் உட்கொள்ள வேண்டும்.
ஆளி விதைகள்
ஆளி விதைகளில் நார்ச்சத்து, ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் லிக்னான்கள் போன்றவை அதிகம் உள்ளன. இச்சத்துக்கள் அனைத்தும் உடலில் உளள கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைக்க உதவும். மேலும் இது உடலில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தும் மற்றும் இதய நோயின் அபாயத்தைக் குறைக்க உதவும். அதற்கு காலையில் ஒரு ஸ்பூன் ஆளி விதை பொடியை ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் கலந்து குடிக்க வேண்டும்.
எள்ளு விதைகள்
எள்ளு விதைகள் உடலில் இரத்த அளவை அதிகரிக்க உதவுவதோடு, உடலில் கெட்ட கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்த பெரிதும் பயனுள்ளதாக இருக்கும். ஏனெனில் இதில் நார்ச்சத்து, மக்னீசியம் அதிகம் உள்ளன. இவையே கொலஸ்ட்ரால் குறைய காரணங்களாகும். அற்கு ஒரு ஸ்பூன் எள்ளு விதைகளை எடுத்து, இரவு தூங்கும் முன் ஒரு டம்ளர் நீரில் போட்டு இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் வெறும் வயிற்றில் உட்கொள்ள வேண்டும்.
உலர் திராட்சை
உலர் திராட்சையில் கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைக்க உவும் நார்ச்சத்து மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகமாக உள்ளன. மேலும் இதில் நல்ல கொலஸ்ட்ராலை அதிகரிக்கும் பண்புகளும் உள்ளன. எனவே இந்த உலர் திராட்சையை ஒரு ஸ்பூன் எடுத்து, இரவு தூங்கும் முன் நீரில் ஊற வைத்து, மறுநாள் காலையில் வெறும் வயிற்றில் உட்கொள்ள வேண்டும். இப்படி தினமும் காலையில் 5 ஊற வைத்த திராட்சையை உட்கொண்டு வந்தால், கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைக்கலாம்.
பாதாம்
பாதாமில் உள்ள மோனோசாச்சுரேட்டட் கொழுப்புக்கள் மற்றும் நார்ச்சத்து உடலில் தேங்கியுள்ள கெட்ட கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்க உதவி புரியும். எனவே உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் சேரக்கூடாதென்றால், தினமும் காலையில் வெறும் வயிற்றில் ஊற வைத்த பாதாமை உட்கொள்ளுங்கள். இதனால் கெட்ட கொலஸ்ட்ரால் குறைந்து, நல்ல கொலஸ்ட்ரால் அதிகரித்து, இதய ஆரோக்கியமும் மேம்படும்.
Tags:
உடல் நலம்