தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி தாலுகா பாகலஹள்ளி ஊராட்சி தண்டுக்காரன்பட்டி கிராமத்தைச் சார்ந்தவர் கொளந்தை என்பவர் விவசாய தொழில் செய்து வருகிறார்.
இவரது மனைவி மாதம்மாள் இவர்களுக்கு சந்தியா என்ற மகளும், ஹரி பிரசாத், சூரிய பிரகாஷ் என இரண்டு மகன்களும் உள்ளனர். கொளந்தை தனது மூன்று பிள்ளைகளையும், 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை தண்டுகாரம்பட்டி அரசு நடுநிலைப்பள்ளியிலும், 9 முதல் 12 வரை ஏலகிரி அரசு மேல்நிலைப் பள்ளியிலும் படிக்க வைத்துள்ளார்.
டாக்டராக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்த பெற்றோர்
இந்த நிலையில் சந்தியா நன்றாக படித்ததால், தனது மகளை நிலத்தை விற்றாவது டாக்டராக்க வேண்டுமென கொளந்தை-மாதம்மாள ஆசை பட்டுள்ளனர். அதேபோல் அரசு பள்ளி ஆசிரியர்களும், சந்தியா நன்றாக படிப்பதால், மருத்துவராக வேண்டும் என உத்வேகம் கொடுத்து வந்துள்ளனர். இதனால் சந்தியாவிற்கு சிறுவயதிலிருந்து டாக்டராக வேண்டும் எண்ணம், பசுமரத்து ஆணி போல மனதில் பதிந்தது. இந்த நிலையில் 2019 ஆம் ஆண்டு சந்தியா 12 ஆம் வகுப்பு படிப்பை முடித்துள்ளார்.
நீட் தேர்விற்கான போராட்டம்
இதனையடுத்து நீட் தேர்வு வந்ததால், எப்படியாவது படித்து நீட் தேர்வில் தகுதி பெற்று டாக்டராக வேண்டுமென சென்னையில் ஒரு நீட் கோச்சிங் சென்டர் சேர்ந்து படித்துள்ளார். ஆனால் நீட் தேர்வில் தகுதி பெறவில்லை. இதனால் தனது டாக்டர் கனவை சந்தியா மறந்துள்ளார். இதனை அடுத்து சந்தியாவின் தந்தை கொளந்தை அவரை தர்மபுரி அரசு கல்லூரியில் சேர்த்துள்ளார்.
அப்போது சந்தியாவின் டாக்டர் கனவு நிறைவேற ஒரு வாய்ப்பு உருவானது.
அப்போது, அன்றைய அதிமுக அரசு நீட் தேர்வில் 7.5% சதவீதம் அரசு பள்ளி மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க வேண்டும் என சட்டத்தை நிறைவேற்றியது. இதனால் மீண்டும் குஷியான சந்தியா, வீட்டில் இருந்தபடியே நீட் தேர்வு எழுதுவதற்கு படித்து வந்தார். இவருக்கு சாதகமாக அப்பொழுது கொரோனா பொதுமுடக்கத்தால் கல்லூரிகளுக்கு நீண்ட நாள் விடுமுறை கிடைத்தது. இதனை பயன்படுத்தி சந்தியா நல்ல முறையில் படித்து, நீட் தேர்வில் தகுதி பெற்றார். இதன்மூலம் 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டில் கரூர் அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து தனது மருத்துவ கனவை நிறைவேற்றிக் கொண்டார். தற்போது மூன்றாம் ஆண்டு எம்.பி.பி.எஸ்., படித்து வருகிறார் சந்தியா
தம்பிகளுக்கு வழிகாட்டியாக மாறிய சந்தியா
அரசு உள் ஒதுக்கீட்டில் எம்.பி.பி.எஸ்., சேர்ந்த சந்தியா தனது தம்பிகளுக்கும், ஒரு நல்ல வழிகாட்டியாய் மாறினார். பணமே இல்லாமல் எம்.பி.பி.எஸ்., சேர்ந்த சந்தியாவை பார்த்ததும், தம்பிகள் ஹரி பிரசாத், சூரிய பிரகாஷ் இருவரும் எம்.பி.பி.எஸ் சேர வேண்டும் என்று தீவிரமாக தனது சகோதரியை பார்த்து படிக்க ஆரம்பித்தனர்.
கடந்த 2023-24 கல்வி ஆண்டில் நீட் தேர்வில் தகுதி பெற்று சேலம் அரசு மருத்துவக் கல்லூரியில் ஹரி பிரசாத் எம் பி பி எஸ் சேர்ந்தார். இதில் ஹரி பிரசாத்திற்கு ஏலகிரி அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் ஒன்றிணைந்து நீட் கோச்சிங் சென்டருக்கு பணம் கட்டி படிக்க வைத்தனர்.
அதேபோல் சூரிய பிரகாசும் பன்னிரண்டாம் வகுப்பு முடித்தவுடன் அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் 25 ஆயிரம் பணம் கொடுத்து ஒரு டிரஸ்ட் உதவியுடன் நீட் கோச்சிங் சென்டரில் படித்து நல்ல மதிப்பெண் பெற்றார்.
தொடர் முயற்சியால் வெற்றி
இதனை அடுத்து சூரிய பிரகாசும் அரசு உள் ஒதுக்கீட்டில் எம்.பி.பி.எஸ் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்ந்துள்ளார். ஏற்கனவே க்கா சந்தியா கரூரில் படித்து வரும் நிலையில், சூரிய பிரகாசம் அதே கல்லூரியில் எம்.பி.பிஎஸ் சேர்ந்துள்ளார்.
இதனால் ஏலகிரி அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்த ஒரே குடும்பத்தைச் சார்ந்த மூன்று பேர் அடுத்தடுத்த ஆண்டுகளில் நீட் தேர்வில் தகுதி பெற்று எம்.பி.பி.எஸ் சேர்ந்துள்ளனர். இதனால் விவசாயி கொளந்தையின் குடும்பத்தினர் உறவினர்கள் மற்றும் தண்டுக்காரன்பட்டி கிராம மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ஆசிரியர்களே நீட் தேர்வுக்கான கட்டணம் செலுத்தியது நெகிழ்ச்சி
இந்தப் பள்ளியில் உள்ள ஆசிரியர்கள், நன்றாக படிக்கின்ற மாணவர்களை 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டில் எம்.பி.பி.எஸ் மற்றும் பி.இ., படிப்பதற்கு வழிகாட்டி உதவி செய்து வருகின்றனர்.
அரசு பள்ளியில் படித்தால் மருத்துவராக முடியுமா என்ற நிலை மாறி, அரசு பள்ளியில் படித்தால் எல்லோரும் மருத்துவராக முடியும் என்ற நிலை உருவாகியுள்ளது. தனியார் பள்ளிகளில் படிக்கின்ற மாணவர்கள் பள்ளி படிப்பு முதல் எம்பிபிஎஸ் படிப்பு முடியும் வரை லட்சக்கணக்கில் பணம் செலவு செய்து வருகின்றனர். அரசு பள்ளி என்பது வறுமையின் அடையாளம் இல்லை, அரசு பள்ளி இப்பொழுது பெருமையின் அடையாளம் என்று தரம் உயர்ந்து வருகிறது.
ஒரே குடும்பத்தை சேர்ந்த அக்காள் தம்பி மூன்று பேரும் நீட் தேர்வில் தேர்ச்சி
ஏலகிரி அரசு பள்ளியில் படித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அக்கா, தம்பிகள் மூன்று பேரும் நீட் தேர்வில், அரசு உள் ஒதுக்கீட்டில் எம்.பி.பி.எஸ் சேர்ந்துள்ளதால், தர்மபுரி சி. இ .ஓ. ஜோதி சந்திரா, தலைமை ஆசிரியர் தங்கவேலு, தர்மபுரி எம்எல்ஏ வெங்கடேஷ்வரன் உள்ளிட்டார் மாணவர்களை வாழ்த்தி பாராட்டினர்.
மேலும் பிளஸ் டூ முடிந்ததும் அரசு நடத்திய பயிற்சி மற்றும் ஆசிரியர்கள் வழிகாட்டுதல் மூலம் எம்பிபிஎஸ் படிப்பில் மூன்று பேரும் சேர்ந்துள்ளனர். இதில் ஹரி பிரசாத் நன்கு படித்ததால் அவரது நீட் பயிற்சிக்கு பள்ளியில் பணியாற்றிய ஆசிரியர்களே கட்டணம் செலுத்தினர். அதேபோல் சூரிய பிரகாசுக்கும் நீட் இலவச பயிற்சிக்கு பள்ளி நிர்வாகமே ஒன்றிணைந்து செயல்பட்டது. இதனால் ஒரே குடும்பத்தைச் சார்ந்த மூன்று பேரும் நீட் தேர்வில் தகுதி பெற்று எம்பிபிஎஸ் படிப்பில் சேர்ந்துள்ளனர்.
இது ஆசிரியர்களாகிய எங்களுக்கு மிகுந்த பெருமை என்று, ஏலகிரி அரசு பள்ளி ஆசிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Tags:
கல்விச் செய்திகள்