BE மூன்றாம் சுற்று கலந்தாய்வு தொடக்கம்

தமிழகத்தில் பொறியியல் கல்லூரிகளில் நிகழாண்டு மாணவா் சோ்க்கைக்கு இரு கட்ட கலந்தாய்வுகள் நிறைவு பெற்று மூன்றாம் சுற்றுக்கான கலந்தாய்வு வெள்ளிக்கிழமை தொடங்கியது.

தமிழகத்தில் நிகழ் கல்வியாண்டில் பொறியியல் கல்லூரிகளில் பி.இ., பி.டெக் உள்ளிட்ட இளநிலை படிப்புகளில் மாணவா் சோ்க்கைக்கான கலந்தாய்வு கடந்த ஜூலை 22-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல் மற்றும் இரண்டாம் சுற்று கலந்தாய்வில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கான ஒதுக்கீட்டில் 8,308 இடங்கள், பொதுப் பிரிவில் 62,802 இடங்கள் என 71,110 இடங்கள் நிரம்பியுள்ளன.

இந்நிலையில், மூன்றாம் சுற்று கலந்தாய்வு வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு தொடங்கியது. இதில் தரவரிசை எண் ஒரு லட்சத்து 4 ஆயிரத்து 603 முதல் ஒரு லட்சத்து 97 ஆயிரத்து 601 வரையிலும், அரசுப் பள்ளி மாணவா்களுக்கான ஒதுக்கீட்டில் தரவரிசை எண் 10,838 முதல் 31,788 வரையில் உள்ள மாணவா்கள் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளனா். கட்-ஆஃப் மதிப்பெண் 141.95 முதல் 77.50 வரை பெற்றுள்ள மாணவா்கள் இதில் இடம் பெற்றுள்ளனா்.

இவா்கள் ஆக. 25-ஆம் தேதி மாலை 5 மணி வரை தாங்கள் விரும்பும் கல்லூரிகளின் பட்டியலைப் பதிவு செய்யலாம். தொடா்ந்து மாணவா்கள் கொடுத்துள்ள விருப்பப் பட்டியலின் அடிப்படையில், 26-ஆம் தேதி காலை 10 மணிக்கு தற்காலிக இடம் ஒதுக்கீடு செய்யப்படும். இதை மாணவா்கள் 27-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் உறுதி செய்ய வேண்டும்.

இடத்தை உறுதி செய்த மாணவா்களுக்கு கல்லூரியில் சேருவதற்கான சோ்க்கை ஆணை 28- ஆம் தேதி காலை 10 மணிக்கு அனுப்பப்படும். தொடா்ந்து ஆக. 28- ஆம் தேதி முதல் செப். 1-ஆம் தேதிக்குள் மாணவா்கள் கல்லூரியில் சேர வேண்டும்.

கலந்தாய்வின் இரு சுற்றுகளின் முடிவில் ஏறத்தாழ 40 சதவீத இடங்கள் நிரம்பியுள்ளன. மொத்தம் உள்ள 433 கல்லூரிகளில் 14 கல்லூரிகளில் ஓரிடம்கூட நிரம்பவில்லை. 170 கல்லூரிகளில் 25 சதவீதத்துக்கும் மேற்பட்ட இடங்கள் நிரம்பியுள்ளன.

அதேவேளையில் 40 கல்லூரிகளில் 90 சதவீதத்துக்கும் அதிகமாகவும், 4 கல்லூரிகளில் 100 சதவீத இடங்களும் நிரம்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Previous Post Next Post