தமிழ்நாட்டில் 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு மற்றும் கல்லூரியில் பட்டப் படிப்பை முடித்தவர்கள் அரசு வேலைக்காக வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்வது அடியோடு குறைந்துள்ளது.
டிஎன்பிஎஸ்சி மற்றும் ஆசிரியர் தேர்வு வாரியம் போன்ற துறைகள் நடத்தும் போட்டித் தேர்வு மூலமே அரசு காலிப் பணியிடங்கள் நிரப்பப்படுவதால், பல லட்சம் பேர் அந்த பக்கமே போகவில்லை என்பது புள்ளி விவரங்களில் தெரிகிறது.
தமிழ்நாட்டில் 80களில் 90களில் பிறந்தவர்கள், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ்-2, கல்லூரியில் பட்டப் படிப்பை முடித்தவர்கள், அரசு வேலை கிடைக்க வேண்டும் என்ற கனவுடன் தங்களுடைய கல்வித்தகுதியை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து வந்தார்கள். இன்று அப்படி பதிவு செய்வதும் புதுப்பிப்பது நடந்து கொண்டுதான் இருக்கிறது. ஆனால் முன்பைவிட நிலைமை மிகப்பெரிய அளவில் மாறி உள்ளது. வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்வதால் வேலை கிடைக்காது என்ற எண்ணம் பலருக்கும் வந்துவிட்டதாக தெரிகிறது. ஏனெனில் 2000களில் பிறந்தவர்கள் பலர் பதிவு செய்ய வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு பக்கமே போவது இல்லை.
பொதுவாக வேலைவாய்ப்பு அலுவலகங்களில் அரசு வேலைக்காக பதிவு செய்தவர்கள் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை தங்கள் பதிவை புதுப்பிக்க வேண்டும். அவ்வாறு புதுப்பிக்க தவறியவர்களுக்கு 2 மாதம் கூடுதல் அவகாசம் வழங்கப்படும். இந்த நடைமுறையை இப்போது பலரும் பின்பற்றுவது இல்லை.. ஒருமுறை பதிவு செய்ததுடன் சரி.. மீண்டும் புதுப்பிக்கக்கூட வருவது இல்லை.
இது தொடர்பான புள்ளி விவரங்கள் வெளியாகி உள்ளது. அதன்படி கடந்த 2021-ம் ஆண்டு ஜூலை மாதம் 31-ம் தேதி நிலவரப்படி, அரசு பணிக்காக வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்தவர்கள் எண்ணிக்கை 70 லட்சத்து 30 ஆயிரத்து 345 ஆக இருந்து வந்தது. அது 2022-ம் ஆண்டு நவம்பர் மாதம் 31-ம் தேதி கணக்குப்படி, 67 லட்சத்து 61 ஆயிரத்து 363 ஆக குறைந்துள்ளது. ஆனால் கடந்த ஆண்டு (2023) ஜனவரி மாதம் 31-ம் தேதி நிலவரப்படி, 67 லட்சத்து 58 ஆயிரத்து 698 ஆக சரிந்து இருந்தது. இதனிடையே இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 30-ம் தேதி கணக்குப்படி, 53 லட்சத்து 74 ஆயிரமாக குறைந்து போயிருக்கிறது.. இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது, 13 லட்சத்து 84 ஆயிரத்து 698 குறைவாகும்.
கடந்த ஏப்ரல் மாத புள்ளி விவரங்களின் படி, வேலைவாய்ப்பு அலுவலகங்களில், 24 லட்சத்து 74 ஆயிரத்து 985 ஆண்கள், 28 லட்சத்து 98 ஆயிரத்து 847 பெண்கள், மூன்றாம் பாலினத்தவர் 284 பேர், மாற்றுத்திறனாளிகள் 1 லட்சத்து 49 ஆயிரத்து 803 பேர் பதிவு செய்திருக்கிறார்கள்.இதில் 18 வயதுக்கு கீழுள்ள பள்ளி மாணவர்கள் 10 லட்சத்து 69 ஆயிரத்து 609 பேர் ஆவார். 19 வயது முதல் 30 வயது வரையுள்ள இளைஞர்கள் 23 லட்சத்து 62 ஆயிரத்து 129 பேர் என்பதும் 31 வயது முதல் 45 வயது வரையுள்ள 16 லட்சத்து 94 ஆயிரத்து 518 பேர் என்பதும் தெரியவந்தள்ளது.
46 வயது முதல் 60 வயது வரையுள்ள 2 லட்சத்து 40 ஆயிரத்து 537 பேரும், 60 வயதுக்கு மேல் உள்ள 7,323 பேரும் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்தும் புதுப்பித்தும் வருகிறார்கள். ஆனால் நடைமுறையில் என்ன நடக்கிறது என்றால், காலியாக உள்ள அரசு பணிகளின் அனைத்து நிலைகளுக்கும் டிஎன்பிஎஸ்சியின் போட்டித் தேர்வுகள் நடத்தியே நிரப்பப்பட்டு வருகிறது. ஆசிரியர் பணியிடங்களும் டி.ஆர்.பி., டி.இ.டி. தேர்வுகள் மூலம் பணியாளர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். இதனால், வேலை வாய்ப்பு அலுவலகங்களுக்கு இனி வேலையில்லை என்ற நிலை உருவாகியுள்ளது. பலரும் ஆர்வம் காட்டுவது இல்லை.. அதேநேரம் தற்போது நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்று வேலைக்கு செல்வோரின் எண்ணிக்கை மிக அதிகமாக அதிகரித்துள்ளது. நான் முதல்வன் திட்டத்தில் பதிவு செய்தால், சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. அத்துடன் வேலையில் சேருவதும் எளிதாக இருப்பதாக தெரிவிக்கிறார்கள்.
Tags:
பொதுச் செய்திகள்