மாரடைப்பு மற்றும் கால் வலி என்பவை முற்றிலும் வெவ்வேறு உடல் உறுப்புகளுடன் தொடர்புடைய பிரச்சினைகளாகத் தோன்றினாலும், அவற்றுக்கு இடையே ஆழமான தொடர்பு இருக்கிறது என்பதுதான் உண்மை.
இதயம் மற்றும் கால்கள் வெவ்வேறு பகுதிகளில் இருந்தாலும், இரண்டும் ஒரே ரத்த நாள அமைப்புகளால் இணைக்கப்பட்டுள்ளன.
இந்த ரத்த நாளங்களில் ஏற்படும் அடைப்பு, கால் வலி, மாரடைப்பு என இரண்டு பிரச்சனைகளுக்கும் காரணமாக அமைகிறது.
இதயம் மற்றும் கால்களுக்கு இடையிலான இணைப்பு:
மனித உடலில் ரத்தத்தை எல்லா உறுப்புகளுக்கும் கொண்டு செல்லும் முக்கிய வழிகள் ரத்தநாளங்கள். இதயம் ரத்தத்தை உந்தித் தள்ளி, ரத்த நாளங்கள் மூலம் உடலின் ஒவ்வொரு செல்லுக்கும் ஊட்டச்சத்து மற்றும் ஆக்சிஜனை எடுத்து செல்கின்றன.
இந்த ரத்த நாளங்கள் பெரிய தமனிகள், சிறிய தமனிகள், நுண் ரத்த நாளங்கள் என பல வகைகளில் உள்ளன.
ரத்த நாளங்கள் கொழுப்பு, கால்சியம் மற்றும் பிற பொருட்களின் படிவுகளால் அடைத்துக் கொள்வதையோ, அல்லது ரத்த நாள பாதையை குறுக்குவதையோ அடைப்பு என்று அழைக்கிறோம்.
இதனால், மாரடைப்பு மற்றும் கால் வழி என இரண்டுமே ஏற்படக்கூடும். இதயத்திற்கு ரத்தத்தை வழங்கும் கொரோனரி தமனிகளில் ஏற்படும் அடைப்பு, இதய தசைச் செல்களுக்கு போதுமான ஆக்சிஜன் கிடைக்காமல் செய்து, மாரடைப்பை ஏற்படுத்துகிறது.
கால்களுக்கு ரத்தத்தை வழங்கும் தமனிகளில் ஏற்படும் அடைப்பு, கால்களுக்கு போதுமான ரத்தம் செல்லாமல் போவதால் அதிகப்படியான கால் வலி, நடக்க முடியாமல் போவது போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
மாரடைப்பு மற்றும் கால் வலிக்கு இடையே உள்ள தொடர்பு:
ரத்த நாளங்களில் ஏற்படும் அடைப்பு, இதயம் மற்றும் கால்கள் இரண்டையும் பாதிக்கக்கூடும்.
இரண்டு பிரச்சனைகளுக்கும் கொலஸ்ட்ரால் அதிகரிப்பு, உயர் ரத்த அழுத்தம், புகைப்பிடித்தல், நீரிழிவு போன்ற ஒரே காரணிகள் பொதுவாக இருக்கும்.
மார்பு அல்லது கால் வலி, மூச்சு விடுவதில் சிரமம், குளிர்ச்சி போன்ற அறிகுறிகள், மாரடைப்பு மற்றும் கால் வலிக்கு பொதுவான அறிகுறிகளாக இருக்கும்.
இந்த இரண்டு பிரச்சனைகளுக்கும் வாழ்க்கைமுறை மாற்றங்கள், மருந்துகள், அறுவை சிகிச்சை போன்ற சிகிச்சைகள் மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படலாம்.
கால் வலி: எச்சரிக்கை!
கால் வலி என்பது மாரடைப்பு ஏற்படக்கூடிய அபாயம் இருப்பதை குறிக்கும் ஒரு எச்சரிக்கை அறிகுறியாகும்.
எனவே, உங்களுக்கு கால் வலி இருந்தால், அதை அலட்சியமாக எடுத்துக் கொள்ளாமல், உடனடியாக மருத்துவரை அணுகுவது அவசியம்.
Tags:
உடல் நலம்