இரண்டாம் ஆண்டு பி.எட். பட்டப் படிப்புக்கான செமஸ்டர் தேர்வு வினாத்தாள் முன்கூட்டியே வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.
4ஆவது செமஸ்டர் தேர்வு
தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கிவரும் கல்லூரிகளில் பி.எட் (B.Ed) இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கு இன்று 4ஆவது செமஸ்டர் தேர்வு நடைபெறுவதாக இருந்தது. இதில், படைப்புத்திறனும் உள்ளடக்க கல்வியும் (creating an inclusive school) என்ற தேர்வுக்கான வினாத்தாள் முன்கூட்டியே கசிந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது .
இன்று காலை 10 மணிக்கு தேர்வு தொடங்கும் முன்பாக, வெளியான வினாத்தாளை திரும்ப பெறுவதாக உயர் கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டது. தொடர்ந்து இணையதளம் வாயிலாக புதிய வினாத்தாள் அனுப்பப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பி.எட் படிப்புக்கான தேர்வுகள் கடந்த 27ம் தேதி தொடங்கிய நிலையில், 31ம் தேதி வரை செமஸ்டர் தேர்வு நடைபெறுகிறது.
தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் நீக்கம்
இதைத் தொடர்ந்து தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் ராமகிருஷ்ணன் நீக்கப்பட்டார். அவருக்கு பதிலாக, புதிய பதிவாளராக ராஜசேகரன் என்பவர் நியமிக்கப்பட்ட்டுள்ளார்.
துணை வேந்தர் இல்லாததே முக்கியக் காரணம்
மாநிலம் முழுவதும் பல்வேறு பல்கலைக்கழகங்களில் துணை வேந்தர் காலி இடம் நிரப்பப்படாமல் காலியாக உள்ளது. இதற்கு மாநில அரசு - ஆளுநர் மோதலே முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது.
எனினும் இதனால் மாணவர்களே பாதிக்கப்பட்டு வருகின்றனர். அண்ணா பல்கலைக்கழகம், சென்னை பல்கலைக்கழகம், பாரதியார் பல்கலைக்கழகம், மதுரை காமராசர் பல்கலைக்கழகம், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் என ஐந்து பல்கலைக்கழங்களில் துணைவேந்தர் பணியிடங்கள் காலியாக உள்ளன.
கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக துணைவேந்தர் இல்லாமல் தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. புதிய துணைவேந்தரை நியமிப்பதற்கு எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதே இதுபோன்ற வினாத்தாள் கசிவு போன்ற முறைகேடுகளுக்கும், குளறுபடிகளுக்கும் முக்கியக் காரணம் என்று கல்வியாளர்கள் குற்றம் சாட்டி உள்ளனர். இதைத் தொடர்ந்து பதிவாளர் நீக்கப்பட்டு, புதிதாக ஒருவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
Tags:
கல்விச் செய்திகள்