நாடு முழுவதும் இளநிலை மருத்துவ மாணவர் சேர்க்கை நீட் தேர்வு அடிப்படையில் நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் அரசு ஒதுக்கீட்டு இடங்களை மருத்துவ கல்வி இயக்குனரகம் நிரப்பி வருகிறது. தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரிகளில் கட்டணம் குறைவு என்பதால் பெரும்பாலானோரின் இலக்கு இந்த அரசு மருத்துவ கல்லூரிகள் தான். அதனைத் தாண்டி சில தனியார் மருத்துவ கல்லூரிகள் ஒரளவு குறைவான கட்டணத்துடன் எம்.பி.பி.எஸ் படிப்புகளை வழங்கி வருகின்றன.
அந்தவகையில், தமிழகத்தில் குறைவான கட்டணம் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரிகளின் டாப் பட்டியலை இப்போது பார்ப்போம்.
வேலூரில் உள்ள கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி, என்.ஐ.ஆர்.எஃப் தரவரிசையில் அகில இந்திய அளவில் 3 ஆம் இடத்தையும் தமிழக அளவில் முதலிடத்தையும் பிடித்துள்ளது. இங்கு வருடாந்திர கட்டணம் ரூ.35,000 முதல் ரூ.1 லட்சம் வரை இருக்கும்.
கோயம்புத்தூரில் உள்ள அமிர்த விஸ்வ வித்யாபீடம், என்.ஐ.ஆர்.எஃப் தரவரிசையில் அகில இந்திய அளவில் 8 ஆம் இடத்தையும் தமிழக அளவில் இரண்டாம் இடத்தையும் பிடித்துள்ளது. இங்கு வருடாந்திர கட்டணம் ரூ.80,000 முதல் ரூ.1 லட்சம் வரை இருக்கும். இரண்டு கல்லூரிகளும் அகில இந்திய ஒதுக்கீடு அடிப்படையில் இடங்களை நிரப்பும்.
தமிழக அரசு ஒதுக்கீட்டு இடங்கள் உள்ள தனியார் மருத்துவ கல்லூரிகளைப் பொறுத்தவரை, கற்பக விநாயகா மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் மதுராந்தகம், தாகூர் மருத்துவக் கல்லூரி சென்னை, அன்னப்பூர்ணா மருத்துவக் கல்லூரி சேலம், ஸ்ரீ முத்துக்குமரன் மருத்துவக் கல்லூரி சென்னை, மாதா மருத்துவக் கல்லூரி சென்னை ஆகிய கல்லூரிகளுக்கு வருடாந்திர கட்டணமாக ரூ.4,35,000 உள்ளது.
பிற தனியார் கல்லூரிகளில் ரூ.4,40,000 முதல் ரூ.4,50,000 வரை வருடாந்திர கட்டணம் உள்ளது. இதுதவிர விடுதிக் கட்டணம் மற்றும் இதரக் கட்டணங்கள் கல்லூரிகளைப் பொறுத்து மாறுபடும்.
Tags:
கல்விச் செய்திகள்