ஒரே வீட்டுக்கு அல்லது தொழில் நிறுவனத்துக்கு இரண்டு இணைப்புகள் இருந்தால், அதை ஒரே இணைப்பாக ஒருங்கிணைத்து ஒரே கட்டணமாக கணக்கீடு செய்ய புதிய நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
தமிழக மின்வாரியத்தில் ஏற்பட்டு வரும் தேவையற்ற மின் இழப்புகளைத் தடுக்க ஒரே வீட்டுக்கு இரண்டு மின் இணைப்பு இருந்தால், அதை கணக்கீடு செய்வதில் மின்வாரியம் மாற்றம் கொண்டு வந்துள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் ஒரு வீடு அல்லது வா்த்தக நிறுவனத்தில் இரு மின் இணைப்புகள் இருந்தால், அதை ஒரே மின் இணைப்பாக ஒருங்கிணைத்து, ஒரே கட்டணமாக கணக்கீடு செய்யப்படுகிறது. இந்த நடைமுறை இந்த மாதம் முதல் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. இதற்கான மென்பொருள் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகள் கூறியது: மின்வாரியத்தில் ஏற்படும் தேவையில்லாத மின்இழப்புகளை சரிசெய்யும் வகையில் இந்த நடைமுறை கொண்டுவரப்பட்டுள்ளது. தற்போது, ஒவ்வொரு வீட்டு இணைப்புக்கும் 100 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படுகிறது. அதேநேரம் ஒரு வீட்டுக்கு இரு இணைப்புகள் பெற்றிருந்தால், தலா 100 யூனிட் இலவசமாக கிடைக்கும்.
அதேபோல், ஒரே வணிக கட்டடங்களுக்கு இரு இணைப்புகள் இருக்கும்போது மின் கட்டணமும் குறைவாக வரும்.
இதனால், மின்வாரியத்துக்கு அதிக அளவு வருவாய் இழப்பு ஏற்பட்டு வந்தது. இதனால், இத்தகைய இணைப்புகளைக் கண்டறிந்து ஒரே இணைப்பாக ஒருங்கிணைத்து மின்கட்டணம் கணக்கிடப்படும். அதன்படி, ஒரே வீட்டுக்கு இரு மின் இணைப்புகள் இருந்தால், இலவசமாக வழங்கப்படும் 100 யூனிட் மட்டுமே கழித்து, மற்ற யூனிட்களுக்கு கட்டணம் கணக்கிடப்படும். கடைகளுக்கும், இரு மீட்டரில் உள்ள யூனிட்டுகளை கணக்கிட்டு, மொத்தமாக மின் கட்டணம் விதிக்கப்படும். இதனால், நீண்டகால வருவாய் இழப்பு தடுக்கப்படும் என்றனா்.
Tags:
பொதுச் செய்திகள்