வாரத்தின் ஒவ்வொரு நாட்களும் ஒவ்வொரு தெய்வத்திற்கு உரிய நாளாக கருதப்படுகிறது. அந்த வகையில் வெள்ளிக்கிழமையானது செல்வத்தின் தெய்வமாக கருதப்படும் லட்சுமி தேவிக்கு உரிய நாளாகும்.
இந்நாளில் லட்சுமி தேவியை வழிபட்டு, அவரது ஸ்தோத்திரத்தை உச்சரித்தால், வீட்டில் லட்சுமி தேவி குடிபுகுந்து, வீட்டின் செல்வம் அதிகரிக்க வழிவகை செய்வார் என்பது நம்பிக்கை.
ஒருவர் நல்ல செல்வ செழிப்பான வாழ்க்கை வாழ விரும்பினால், அதற்கு லட்சுமி தேவியின் ஆசியைப் பெற்றிருக்க வேண்டும். உங்கள் வீட்டில் மற்றும் உங்களுக்கு லட்சுமி தேவியின் பரிபூர்ண ஆசி வேண்டுமானால், அவருக்கு உரிய நாளான வெள்ளிக்கிழமைகளில் ஒருசில செயல்களை செய்வதைத் தவிர்த்திடுங்கள். இல்லாவிட்டால் லட்சுமி தேவியின் கோபத்திற்கு ஆளாக நேரிடும். இப்போது வெள்ளிக்கிழமைகளில் செய்யக்கூடாதவைகள் எவையென்பதைக் காண்போம்.
லட்சுமி தேவியின் சிலையை கழுவக்கூடாது
வெள்ளிக்கிழமை லட்சுமி தேவியை வீட்டிற்கு அழைக்கும் நாளாகும். இந்நாளில் லட்சுமி தேவியை நீரில் கழுவுவது, லட்சுமியை வீட்டை விட்டு வெளியே அனுப்புவதற்கு சமம். எனவே லட்சுமி தேவியின் சிலையை வெள்ளிக்கிழமைகளில் கழுவாதீர்கள். அதேப் போல் பழைய அல்லது உடைந்த சிலை வீட்டில் இருந்து அப்புறப்படுத்தாமல், புதிய சிலையை வாங்கி வீட்டில் நிறுவலாம். இதன் மூலம் லட்சுமி தேவி வீட்டிலேயே நிலைத்திருப்பார்.
வீட்டின் கதவை மூடாதீர்
வெள்ளிக்கிழமைகளில் மாலை வேளையில் வீட்டின் பிரதான வாசல் கதவை மூடி வைத்திருக்காமல், சிறிது நேரம் திறந்து வைத்திருக்க வேண்டும். ஏனெனில் இந்த நேரத்தில் லட்சுமி தேவி வீடு வீடாக செல்வார். இந்நிலையில் வீட்டின் கதவு மூடியிருந்தால், லட்சுமி தேவி வீட்டிற்குள் வராமல், வாசலோடு சென்றுவிடுவார். எனவே மாலை வேளையில் வீட்டின் வாசல் கதவை மூடி வைத்திருக்காதீர்கள்.
கடன் கூடாது
வெள்ளிக்கிழமைகளில் யாரிடமும் கடன் வாங்காதீர்கள். அதேப் போல் கடன் கொடுக்கவும் செய்யாதீர்கள். அவ்வாறு செய்தால், வீட்டில் செல்வம் நிலைத்திருக்காமல் போவதோடு, வீட்டில் உள்ளோரின் ஆரோக்கியமும் குறையும். முக்கியமாக இந்நாளில் யாரேனும் உதவி என்று கேட்டால், அவருக்கு உதவி செய்யுங்கள். அதுவும் அது கடனாக இருக்கக்கூடாது என்பதை நினைவில் கொள்ளுங்கள். இந்நாளில் கடன் வாங்கினால், நிதி நிலைமை பலவீனமாகும்.
பெண்களை அவமதிக்காதீர்
வெள்ளிக்கிழமைகளில் பெண்களை அவமதிக்கவோ, திட்டவோ கூடாது. பெண்களை அவமரியாதை செய்வது, லட்சுமி தேவியை அவமதிப்பதற்கு சமம். எனவே இந்நாளில் வீட்டில் உள்ள பெண்களிடம் கடுமையாக நடந்து கொள்ளாதீர்கள். மாறாக அவர்களிடம் மிகவும் அன்பாக நடந்து கொள்ளுங்கள். எவ்வளவுக்கு எவ்வளவு பெண்களை ஒவர் மதிக்கிறாரோ, அவரது கையில் பணம் அதிகம் சேரும்.
உப்பு, மஞ்சள் போன்றவற்றை கொடுக்காதீர்
உப்பு, மஞ்சள் போன்றவற்றில் லட்சுமி தேவி குடியிருப்பதாக கருதப்படுகிறது. இந்த மங்களகரமான பொருட்களை வீட்டில் இருந்து மற்றவருக்கு கடனாக கொடுத்தால், வீட்டில் உள்ள லட்சுமி தேவியை மற்றவருக்கு கொடுப்பதற்கு சமம். எனவே இந்த பொருட்களை யாருக்கும் கடன் கொடுக்காதீர்கள்.
Tags:
நம்பிக்கை