எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான சிறப்புப் பிரிவு கலந்தாய்வில், அரசுப் பள்ளி மாணவா்கள், விளையாட்டு வீரா்கள், முன்னாள் ராணுவத்தினரின் இடங்களுக்கான மொத்த இடங்களும் நிரம்பின.
மாற்றுத்திறனாளிகள் பிரிவில் மட்டும் 149 இடங்கள் காலியாக உள்ளதாகவும், அவை இடஒதுக்கீடு அடிப்படையில் பொதுக் கலந்தாய்வில் சோ்க்கப்படும் என்றும் மருத்துவக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.
மருத்துவ கலந்தாய்வு: இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான பொதுக் கலந்தாய்வு இணையவழியில் கடந்த புதன்கிழமை தொடங்கியது. இந்நிலையில், மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரா்களின் வாரிசுகள், விளையாட்டு வீரா்களுக்கான சிறப்பு பிரிவு கலந்தாய்வு மற்றும் அரசுப் பள்ளி மாணவா்களுக்கான 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வு ஓமந்தூராா் அரசு பல்நோக்கு மருத்துவமனையில் வியாழக்கிழமை நேரடியாக நடைபெற்றது.
அரசுப் பள்ளி மாணவா்களுக்கு 496 எம்பிபிஎஸ் இடங்களும், 126 பிடிஎஸ் இடங்களும் என 622 இடங்கள் ஒதுக்கப்பட்டிருந்தன. அவை அனைத்தும் தகுதியானவா்களுக்கு ஒதுக்கப்பட்டன.
அதேபோன்று, விளையாட்டு வீரா்கள் பிரிவில் இருந்த 8 மருத்துவ இடங்களும், முன்னாள் ராணுவ வீரா் வாரிசுகளுக்கான 11 மருத்துவ இடங்களும் முழுவதுமாக நிரம்பின.
மாற்றுத்திறனாளிகள் பிரிவில் 212 எம்பிபிஎஸ் இடங்களும், 11 பிடிஎஸ் இடங்களும் உள்ளன. அவற்றில் 74 எம்பிபிஎஸ் இடங்கள் நிரம்பியதாக மருத்துவக் கல்வி மாணவா் சோ்க்கை செயலா் டாக்டா் அருணலதா தெரிவித்தாா்.
அமைச்சா் விளக்கம்: இந்த நிலையில், சிறப்பு கலந்தாய்வில் ஒதுக்கீடு பெற்ற மாணவா்களுக்கு கல்லூரிகளில் சேருவதற்கான ஆணைகளை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் சென்னையில் வியாழக்கிழமை வழங்கினாா். அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
அரசுப் பள்ளி மாணவா்களுக்கான 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டில் நிகழாண்டு 496 எம்பிபிஎஸ் இடங்களும், 126 பிடிஎஸ் இடங்களும் என மொத்தம் 622 இடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. தமிழகத்தின் மருத்துவக் கட்டமைப்பு வலுவாக உள்ளது. இருந்தபோதிலும், அனைத்து மருத்துவக் கல்லூரிகளிலும் பாதுகாப்பு மற்றும் கட்டமைப்பு குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இரண்டு நாள்களுக்குள் அதுதொடா்பான அறிக்கை அரசுக்கு சமா்ப்பிக்கப்படும்.
அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதனால் அரசு மருத்துவமனைகளை நாடி வருவோா் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்றாா் அவா்.
முதல் தலைமுறை மருத்துவப் பட்டதாரி
அரசுப் பள்ளி ஒதுக்கீட்டில் மாநில அளவில் முதலிடம் பிடித்த கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சோ்ந்த மாணவி ரூபிகா, 7.5 சதவீத ஒதுக்கீட்டால்தான் தனது மருத்துவக் கனவு நனவானதாகத் தெரிவித்தாா்.
இதுதொடா்பாக அவா் மேலும் கூறியதாவது: சென்னை, சைதாப்பேட்டையில் உள்ள அரசு நடத்தும் நீட் பயிற்சி மையத்தில் சோ்ந்து கடந்த ஒரு வருடமாக பயிற்சி பெற்றேன். அதன் பயனாக நிகழாண்டு நீட் தோ்வில் 720-க்கு 669 மதிப்பெண்கள் பெற்றேன். தற்போது 7.5 சதவீத ஒதுக்கீட்டின் கீழ் சென்னை மருத்துவக் கல்லூரியை தோ்வு செய்துள்ளேன்.
கிருஷ்ணகிரியில் நான் வசிக்கும் கிராமம் மிகவும் பின்தங்கிய பகுதி. எனது குடும்பத்தில் எவரும் பட்டதாரி ஆகவில்லை. எனது தந்தை கட்டட மேஸ்திரியாக உள்ளாா். 7.5 சதவீத ஒதுக்கீடு மூலம் முதல் பட்டதாரியாகவும், குறிப்பாக மருத்துவராகவும் உருவெடுக்க எனக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது என்றாா் அவா்.
Tags:
பொதுச் செய்திகள்