அக்டோபர் 1 முதல் PPF விதிகளில் புதிய மாற்றம்..

பாதுகாப்பான முதலீட்டை தேடும் பலரும் முதலில் தேர்ந்தெடுப்பது பொது வருங்கால வைப்பு நிதி (PPF) திட்டத்தை தான்.
இது சற்று நீண்ட கால முதலீட்டு திட்டமாக இருந்தாலும் எந்தவித அபாயமும் இன்றி தங்களுடைய முதலீட்டை அதிகரிக்க விருப்பப்படும் முதலீட்டாளர்களுக்கு PPF திட்டம் தான் முதன்மை தேர்வாக இருக்கும். சிறு சேமிப்பு திட்டங்களின் கீழ் ஒழுங்கற்ற முறையில் திறக்கப்படும் கணக்குகளை முறைப்படுத்த நிதித்துறை சமீபத்தில் புதிய வழிகாட்டுதல்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய வழிகாட்டுதல்கள் அக்டோபர் 1, 2024 முதல் நடைமுறைக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் முதன்மை நோக்கம் என்று பார்த்தால் முரண்பாடுகளுடன் கணக்குகள் திறக்கப்படுவதை தடுக்கும் பொருட்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.PPF என்றால் என்ன?: பொது வருங்கால வைப்பு நிதி என்று சொல்லப்படுகிற PPF என்பது இந்திய அஞ்சல் அலுவலகத்தால் வழங்கப்படும் சேமிப்பு திட்டமாகும்.

இது ஆபத்து இல்லாத முதலீட்டு திட்டமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. 15 வருட முதிர்வுக்காலத்துடன், நீண்ட காலத்திற்கு தங்கள் நிதியைத் முதலீடு செய்ய விரும்புவோருக்கு PPF திட்டம் சிறந்தத் தேர்வாக இருக்கும். இந்தத் திட்டம் தற்போது 7.1% வட்டி விகிதத்தை வழங்குகிறது. மேலும் பெறப்படும் அசல் மற்றும் வட்டிக்கு முற்றிலும் வரி இல்லை.

PPF திட்டத்தில் குறைந்தபட்சம் 500 ரூபாய் முதல் முதலீடு செய்யலாம். PPF திட்டத்தில் முதலீடு செய்வதற்கான அதிகபட்ச வரம்பு 1.5 லட்சம். PPF திட்டத்தின் முதிர்வுக் காலம் 15 ஆண்டுகள். இதில் போடப்படும் முதலீடு பாதுகாப்பானதாக இருக்கும்.

மேலும் அரசாங்கத் திட்டம் என்பதால் எந்தவித அபாயமும் இருக்காது. உத்தரவாதமான வருமானம் பெறலாம். மைனர் பெயரில் PPF கணக்கு: சிறுவரின் பெயரில் கணக்கைத் தொடங்கியிருந்தால் அத்தகைய ஒழுங்கற்ற கணக்குகளுக்கு போஸ்ட் ஆபீஸ் சேவிங்ஸ் அக்கவுண்டிற்கு (POSA) வழங்கப்படும் வட்டி செலுத்தப்படும். அதன் பிறகு அந்த சிறுவர் 18 வயதை அடைந்தவுடன் PPF திட்டத்திற்கு பொருந்தக்கூடிய வட்டி விகிதம் வழங்கப்படும்.

அதாவது சிறுவர்கள் மேஜர் ஆகும் வரை சேவிங்ஸ் அக்கவுண்டுகளுக்கு வழங்கப்படும் வட்டி செலுத்தப்படுகிறது. இதுபோன்ற சிறுவர்களுக்கு திறக்கப்படும் PPF கணக்குகளுக்கான முதிர்வு காலம் அந்தக் குழந்தை மேஜரானதற்குப் பிறகு தொடங்கப்படும். அதாவது ஒரு குழந்தை 18 வயதை கடந்த பின்பு முதிர்வு காலம் தொடங்கப்படும். அதிலிருந்து 15 ஆண்டுகள் வரை கணக்கைத் தொடர வேண்டும்.

ஒன்றுக்கும் மேற்பட்ட PPF கணக்குகள்: ஒருவரிடம் ஒன்றுக்கும் மேற்பட்ட PPF திட்டத்தின் கணக்குகள் இருந்தால்.. முதலீட்டாளர்கள் தேர்ந்தெடுக்கும் பட்சத்தில் ஏதாவது ஒரு கணக்கு முதன்மை கணக்காக இருக்கும். அந்த கணக்கில் உள்ள தொகை ஒரு ஆண்டுக்கான உச்சவரம்புக்குள் இருந்தால் PPF திட்டத்திற்கான வட்டி விகிதம் செலுத்தப்படும். மேலும் இரண்டாம் கணக்கில் உள்ள தொகை முதன்மை கணக்கோடு சேர்க்கப்படும். ஆனால் ஒரு நிதியாண்டுக்கு 1.5 லட்சம் என்ற வரம்பை மீறி மீதம் தொகை இரண்டாவது கணக்கில் இருந்தால், அதற்கு எந்தவித வட்டியும் செலுத்தப்படாமல் திருப்பி வழங்கப்படும். முதன்மை மற்றும் இரண்டாவது கணக்கைத் தாண்டிய கூடுதல் PPF கணக்குகள், அந்தக் கணக்கைத் தொடங்கிய நாளிலிருந்து பூஜ்ஜிய சதவீத வட்டியைப் பெறும்
Previous Post Next Post