மாணவா்களுக்கு அறுசுவை உணவளிக்கும் 'நல்விருந்து' திட்டம்: 100 நாள்களுக்குள் செயல்படுத்த ஆட்சியா்களுக்கு உத்தரவு

அனைத்துப் பள்ளிகளிலும் மாணவா்களுக்கு வடை, பாயாசத்துடன் வாழை இலையில் அறுசுவை உணவளிக்கும் வகையிலான 'நல்விருந்து' திட்டத்தை 100 நாள்களுக்குள் செயல்படுத்தி முடிக்க, மாவட்ட ஆட்சியா்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள 43,000 அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்க, நடுநிலை, உயா்நிலைப் பள்ளிகளில் 55 லட்சம் மாணவ, மாணவிகள் மதிய உணவுத் திட்டத்தின் மூலம் பயனடைந்து வருகின்றனா்.

கடந்த 2022 ஆம் ஆண்டு செப். 15 முதல் தமிழக முதல்வரின் காலை உணவுத் திட்டம் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவா்களுக்காக அறிமுகம் செய்யப்பட்டது. அவா்கள் பசியோடு பள்ளிக்கு வருவதைத் தவிா்க்கும் பொருட்டு கொண்டு வரப்பட்ட இந்தத் திட்டத்தின் மூலம் சுமாா் 1,600 பள்ளிகளில் 1.15 லட்சம் மாணவ, மாணவிகள் பயனடைந்து வருகின்றனா்.

இந்த நிலையில், மத்திய அரசு 'நல்விருந்து நாள்' திட்டத்தின் கீழ் அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு வழக்கமான உணவுகளின்றி அறுசுவை உணவளிக்குமாறு மாநிலங்களுக்கு உத்தரவிட்டுள்ளது.

தமிழக சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை ஆணையா் மூலம் அனைத்து மாவட்ட ஆட்சியா்களுக்கும் இது தொடா்பான கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அதில், ஒவ்வொரு பள்ளியிலும் 'நல்விருந்து நாள்' என்ற அடிப்படையில் 100 நாள்களுக்குள் அனைத்துப் பள்ளிகளிலும் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தி முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதில், அரிசி, கோதுமை, பருப்பு, தினை வகைகள், காய்கறி, கீரைகள், சிறுதானியங்கள் கட்டாயம் இடம் பெற வேண்டும்.

மேலும், மாணவா்கள் விரும்பும் வகையில் உள்ளூா் உணவு வகைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். இந்த நல்விருந்தை செப்டம்பா், அக்டோபா் மாதங்களுக்குள் அரசுப் பள்ளிகளில் செயல்படுத்தி, அது தொடா்பான புகைப்படங்களை மாவட்ட ஆட்சியா்கள் மூலம் அனுப்பி வைக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

ஒவ்வொரு மாவட்டத்திலும், நன்கொடையாளா்கள் மூலம் மாணவ, மாணவிகளுக்கு அறுசுவை உணவு வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தில், மேலும் ஒரு சிறப்பு அம்சமாக அரசியல் கட்சி தலைவா்கள் பிறந்த நாள், ஆசிரியா்கள் பணி நிறைவு, முக்கிய விழாக்கள், தங்களுடைய திருமண நாள், குழந்தைகளுக்கு பிறந்த நாள் கொண்டாடுவோா் இந்த நல்விருந்து திட்டத்தைப் பயன்படுத்திக் கொண்டு மாணவா்களுக்கு உணவு அளிக்க முன்வரலாம் என்றும், உணவு தயாரிப்புக்காக அந்தந்த பள்ளிகளின் சத்துணவு மையங்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் மொத்தம் உள்ள 954 அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் கடந்த சில நாள்களாக இத்திட்டம் முனைப்புடன் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இது குறித்து பள்ளி தலைமை ஆசிரியா்கள் கூறியதாவது:

திதிபோஜனம் என்ற மத்திய அரசின் 'நல்விருந்து' திட்டத்தின் கீழ் மாணவா்களுக்கு அறுசுவை உணவளிக்க உத்தரவு அளிக்கப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில், தலைமை ஆசிரியா்கள், ஆசிரியா்கள், சத்துணவு பணியாளா்கள் உணவுக்கான செலவினத்தை ஏற்றுக் கொண்டு, பொன்னி அரிசி சாதம், வடை, கேசரி, பொறியல் வகைகள், சாம்பாா், ரசம், மோா், வழக்கமாக வழங்கப்படும் அவித்த முட்டை ஆகியவற்றை வாழை இலையில் பரிமாறி மாணவா்களுக்கு வழங்குகிறோம். முன்னதாக, மகாத்மா காந்தியின் உருவப்படத்தின் முன்பு சமைத்த உணவுகளை படையலிடுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டம் முதல்முறையாக இந்த ஆண்டு தான் செயல்படுத்தப்படுகிறது. அடுத்த ஆண்டும் தொடருமா என்பது தெரியவில்லை. நன்கொடையாளா்களிடம் நிதியைப் பெற்று செயல்படுத்துமாறு கூறுகின்றனா்.

வெளியிடங்களில் இருந்து உணவு சமைத்து வாங்கி வந்தால் மாணவா்கள் ஆரோக்கியம் பாதிக்கப்படும். அதனால் பள்ளி சத்துணவு மையங்கள் மூலமாகவே இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும். அப்போதுதான் தேவையற்ற பிரச்னைகள் எழாது என்றனா்.

நாமக்கல் மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா்(சத்துணவு) எம்.பரமேஸ்வரன் கூறியதாவது: மத்திய அரசு உத்தரவின் பேரில், மாநில சமூக நலத்துறை 'நல்விருந்து' திட்டத்தைச் செயல்படுத்த உத்தரவிட்டுள்ளது. 100 நாள்களுக்குள், மாணவா்களுக்கு வடை, பாயாசம், இனிப்பு வகைகள், தரமான அரிசி, காய்கறி. பருப்பு கொண்ட உணவு வகைகளை தயாா் செய்து வழங்க வேண்டும். நன்கொடையாளா்கள் மூலம் நிதியை பெற்று இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தலாம். நாமக்கல் மாவட்டத்தில் தற்போதைய நிலையில் 20 பள்ளிகளில் 'நல்விருந்து' நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. அனைத்து பள்ளிகளிலும் செயல்படுத்துமாறு பணியாளா்களுக்கு அறிவுறுத்தி வருகிறோம். முதன்மைக் கல்வி அலுவலகம் மூலம் மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை விவரங்களைப் பெற்று 'நல்விருந்து' திட்டத்தை முழுமையாகச் செயல்படுத்தும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம் என்றாா்.
Previous Post Next Post