கால்சியம் நம் உடலுக்குத் தேவையான ஒரு முக்கியமான கனிமச் சத்து. இது எலும்புகளின் ஆரோக்கியத்திற்கும், தசைகளின் சிறப்பான இயக்கத்திற்கும், உடலின் மொத்த நலனையும் பாதுகாக்கவும் உதவும் ஓர் ஊட்டச் சத்தாகும்.
இச்சத்தை அளிப்பதில் முதல் இடத்தில் உள்ளது பால். பாலைத் தவிர்த்து, கால்சியம் தரக்கூடிய வேறு பல பானங்களும் உள்ளன. லாக்டோஸ் சகிப்புத்தன்மை இல்லாதவர்களும், வேகன்களும் பாலுக்கு மாற்றாக அந்தப் பானங்களை அருந்தி உடலுக்குத் தேவையான கால்சியத்தைப் பெற்றுக்கொள்ளலாம். அந்த 6 வகைப் பானங்கள் என்னென்ன என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.
1. செரிவூட்டப்பட்ட ஆல்மண்ட் மில்க்கில் இயற்கையாகவே கால்சியம் சத்து உள்ளது. இருந்தபோதும் பல ஆல்மன்ட் மில்க் பிராண்ட்களில் கால்சியம் மேலும் செரிவூட்டப்பட்டு, உடலுக்கு ஒரு நாளைக்குத் தேவையான கால்சியத்தின் அளவில் முப்பது சதவிகிதம் கிடைக்குமாறு தயாரிக்கப்படுகின்றன. அவை குறைந்த அளவு கலோரி கொண்டதாகவும் நட்டி ஃபிளேவருடனும் இருப்பதால் செரியல் மற்றும் ஸ்மூத்திகளில் சேர்த்து உண்ண ஏற்றதாகிறது.
2. ஆரஞ்சு ஜூஸில் இயற்கையாகவே வைட்டமின் C அதிகம் உள்ளது. பல பிராண்ட்கள் ஆரஞ்சு ஜூஸில் கால்சியம் சத்தை செரிவூட்டம் செய்து தயாரிக்கின்றனர். இதனால் ஒரு கப் ஜூஸில் இரண்டு வகையான முக்கிய ஊட்டச்சத்துக்கள் கிடைக்க வாய்ப்பாகிறது. ஒரே நேரத்தில் உடலுக்கு ஒரு நாளைக்குத் தேவையான கால்சியத்தின் அளவில் முப்பது சதவிகிதம் கிடைத்துவிடுகிறது. மேலும் நோயெதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கிறது.
3. பசும் பாலுக்கு மாற்றாக செரிவூட்டப்பட்ட சோயா பால் அருந்தலாம். இதிலிருந்து உடலுக்கு ஒரு நாளைக்குத் தேவையான கால்சியத்தின் அளவில் முப்பது சதவிகிதம் கிடைப்பதுடன் தாவர வகை புரோட்டீனும் கிடைக்கும்.
4. இளநீரில் நீர்ச்சத்தும் எலக்ட்ரோலைட்களும் அதிகம். இதனுடன் கால்சியம் சத்து செரிவூட்டப்படும்போது உடலுக்கு பொட்டாசியம், மக்னீசியம் போன்ற கனிமச் சத்துக்களோடு முக்கியமான கால்சியம் சத்தும் கிடைக்கும். செரிவூட்டப்பட்ட இளநீர் மலச்சிக்கல் நீங்கவும் உதவும்.
5. அதிகளவு கால்சியம் சத்து நிறைந்த எள் விதைகளை அரைத்து தண்ணீரில் கலந்து ஒரு வகை பானமாக அருந்தலாம். நட்டி ஃபிளேவருடன் கூடிய இந்த சுவையான பானம் உடலுக்குத் தேவையான கால்சியம் சத்துக்களோடு ஆரோக்கியம் தரும் கொழுப்பு சத்தும் கொடுக்கக்கூடியது.
6. டோஃபு என்பது சோயா பீன்சிலிருந்து தயாரிக்கப்படும் ஓர் உணவு. இதில் இயற்கையான கால்சியம் சத்து அதிகம் உள்ளது. இதை காய், பழங்களுடன் சேர்த்து அரைத்து ஸ்மூத்தியாக உண்ணலாம். ஆல்மன்ட் பட்டர், பீநட் பட்டருடன் சேர்த்து அரைத்து ஒரு க்ரீமியான, அதிகளவு கால்சியம் நிறைந்த பானமாகவும் உட்கொள்ளலாம். டோஃபுவை தயார் செய்யும்போது அதனுடன் கால்சியம் சல்ஃபேட் சேர்ப்பதுண்டு. அதனால் ஒரு நாள் உணவில் ஒரு முறை டோஃபுவை சேர்த்துக்கொண்டாலே அன்றைய கால்சியம் தேவை பூர்த்தி செய்யப்பட்டுவிடும்.
பாலுக்கு மாற்றாக மேற்கூறிய பானங்களில் ஒன்றை தினசரி உட்கொண்டு கால்சியம் குறைபாடின்றி வாழ்வோம்.
Tags:
உடல் நலம்