உடல் சூட்டைத் தணிக்க 7 எளிய வழிமுறைகள்!

மழைக் காலத்திலும் சிலரின் உடல் சூடாகவே இருக்கும். உடல் சூட்டால் அதிகமான வேர்வை வெளியாகும். முகப்பருக்கள் அதிகமாகும்.

வாய்ப்புண், உதடு காய்தல், வயிற்றில் அசிடிட்டி உருவாதல், நெஞ்சு எரிச்சல், வேர்க்குரு, தலைமுடி கொட்டுதல், வெள்ளை முடி, அதிகமான தலைவலி இதுபோன்ற உடல் உபாதைகள் ஏற்படுகிறது. உடல் சூடாவதில் இருந்து எப்படி பாதுகாத்து கொள்ள வேண்டும் என்பதற்கு எளிய வழிமுறைகள்

எண்ணெய் தேய்த்து குளிப்பது:

வாரம் இரு முறை நல்லெண்ணெய் தேய்த்து குளிப்பது உடல் சூட்டை தணிக்கும். சீரகம், மிளகு இது இரண்டையும் நல்லெண்ணெயில் போட்டு மிதமாக சூடுபடுத்த வேண்டும். பிறகு தலை, தொப்புள், காது மடல் என உடம்பு முழுவதும் பூசி அரை மணி நேரம் கழித்து குளிக்க வேண்டும்.

வெந்தயம்:

காலையில் வெறும் வயிற்றில் இரண்டு ஸ்பூன் வெந்தயம் சாப்பிட்டு வந்தால் உடல் சூடு தணியும். அல்லது இரவு வெந்தயத்தை ஊறவைத்து காலையில் அந்த தண்ணீரை குடிக்கலாம். வெந்தயம் சாப்பிட்ட பிறகு தினமும் மோர் குடிப்பது மிகவும் நல்லது.

வெண்ணை:

தினமும் ஒரு ஸ்பூன் வெண்ணெய் எடுத்து வந்தால் உடல் சூட்டை தணிக்கிறது. இது அல்சரையும் குணப்படுத்துகிறது. இத்துடன் முடிந்தால் இரண்டு அல்லது மூன்று ஸ்பூன் தேங்காய் எண்ணெய் சாப்பிட வேண்டும். இரவு தூங்க செல்லும் போது பாலில் பனங்கற்கண்டு கலந்து குடிக்க வேண்டும்.

குளிர்ந்த நீர்:

ஒரு பக்கெட்டில் சிறிது ஐஸ் கட்டிகளை போட்டு அரை பாட்டில் ரோஸ் வாட்டரை ஊற்றவும். பிறகு அந்த தண்ணீரில் காலை விட்டு 15 நிமிடங்கள் வைத்திருக்க வேண்டும். இது உடல் சூட்டை தணிப்பதோடு இரத்த ஓட்டங்களை சீராக்குகிறது.

அரிசி:

10 கிராம் அரிசியை எடுத்துக்கொண்டு அதை கொஞ்சமாக இடித்துக் கொள்ள வேண்டும். இடித்த அரிசியை 30 மிலி தண்ணீரில் 4 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். பிறகு அதை வடிகட்டி வடிகட்டிய தண்ணீரை மட்டும் குடிக்க வேண்டும். இதை காலையிலும் மாலையிலும் குடித்து வந்தால் உடல் சூடு குறையும். இதை குளிர்சாதன பெட்டியில் வைத்து முடிந்தால் மண்பானையில் வைத்து குடிக்கலாம்.

உணவே மருந்து:

கோழி மீன் ஆட்டுக்கறி போன்ற அசைவ உணவுகளை தவிர்க்க வேண்டும். குறைந்த அளவில் இவைகளை எடுத்துக் கொள்ளலாம். மசாலா பொருட்கள், உப்பு, புளிப்பு, அதிக காரமுள்ள உணவுகள், பாக்கெட்டுகளில் வரக்கூடிய உணவுகள் ஆகியவற்றை தவிர்க்க வேண்டும்.

வாழைப்பழம், தர்பூசணி, முலாம்பழம் போன்ற நீர்ச்சத்து மற்றும் நார்ச்சத்து நிறைந்த பழங்களை சாப்பிட வேண்டும். ஆப்பிள், பப்பாளி, புடலங்காய், பாகற்காய், பாதாம் பிசின், வெள்ளரிக்காய் போன்ற உணவுகள் நமது உடம்பிற்கு நல்லது. இளநீர், சர்க்கரை கலக்காத குளிர்ச்சியான பால், உடம்பிற்குத் தேவையான அளவு தண்ணீர் ஆகியவற்றை குடிக்கலாம். ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை ஒரு டம்ளர் தண்ணீர் குடிப்பது நல்லது. குளிர்சாதன பெட்டியில் உள்ள நீரை குடிக்கக்கூடாது.

அந்த நீர், உடல் சூட்டை மேலும் அதிகரிக்கிறது. சீரகத்தை உணவில் அதிகமாக எடுத்துக் கொள்ள வேண்டும். உடம்பை சீராக வைக்கக்கூடிய பொருள்தான் இந்த சீரகம். சீரகத்தை ஊற வைத்த தண்ணீரை குடிக்கலாம்.சமையலில் ரீபைன்ட் எண்ணையை பயன்படுத்துவது தவிர்த்து விட்டு அதற்கு பதிலாக நெய் பயன்படுத்துவது நல்லது. காலையில் வெறும் வயிற்றில் மலை வாழைப்பழத்தை சாப்பிட்டால் உடல் சூட்டை தணிக்கும்.

முகம் கழுவுதல்:

முகத்தை அடிக்கடி குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். முகப்பருக்களை குறைப்பதோடு உடல் சூட்டையும் குறைக்கிறது. சந்தனத்தில் பன்னீர் கலந்து அதை முகத்தில் தேய்த்தால் உடம்பில் குளிர்ச்சி ஏற்படும். அதேபோல் உடல் சூட்டால் உடம்பில் ஏற்படும் அரிப்பு, வேர்க்குரு போன்றவைகளுக்கு சந்தனத்தை தடவலாம்.
Previous Post Next Post