வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை உட்பட புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களில் தற்போது தேர்தல் இல்லை என்று மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தமிழகத்தில் வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய புதிய மாவட்டங்களை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் கடந்த 2019ம் ஆண்டு நடந்தது. புதிய மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் 2021ம் ஆண்டு நடந்தது. எனவே 2019ம் ஆண்டு தேர்வில் தேர்வு செய்யப்பட்டவர்கள் பதவிக்காலம் வரும் டிசம்பர் மாதம் நிறைவடைய உள்ளது.
எனவே மாநில தேர்தல் ஆணையம் உள்ளாட்சி தேர்தலுக்கான ஆயத்த பணிகளை தொடங்கியுள்ளது. இதனால் 2021ம் ஆண்டு தேர்வு செய்யப்பட்டவர்கள் தங்களின் பதவிக்காலம் நிறைவடைவதற்கு முன்பு தேர்தல் நடத்தப்படுமோ என்ற அச்சத்தில் உள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட மாவட்டங்களில் உள்ள ஊராட்சித் தலைவர்கள் தங்களின் பதவிக்காலம் தொடர்பாக விளக்கம் கேட்டு மாநில தேர்தல் ஆணையத்திற்கு மனுக்களை அனுப்பி வருகின்றனர். இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட மாவட்ட கலெக்டர்களுக்கு மாநில தேர்தல் ஆணைய செயலாளர் பாலசுப்ரமணியம் கடிதம் அனுப்பி உள்ளார். இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், 'கடந்த 2021ம் ஆண்டு நடந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற ஊராட்சி தலைவர் பதவி காலம் வரும் டிசம்பரில் நிறைவடைய உள்ளதாக தகவல்கள் வெளியாகின்றன.
பஞ்சாயத்து ராஜ் சட்டத்தின் அடிப்படையில், அவர்கள் பதவி காலத்தை 5 ஆண்டுகள் வரை தொடர கோரியுள்ளனர். தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டத்தின்படி கிராம ஊராட்சி தலைவர் பதவிக்காலம் உள்ளாட்சி அமைப்பின் முதல் கூட்ட நாளில் இருந்து 5 ஆண்டுகள் வரை கால நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி 2021ம் ஆண்டு நடந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதிகள் பதவி காலம் 2026 அக்டோபர் 19ம்தேதி முடிவடைகிறது. அதற்கு முன்னதாக இந்த 9 மாவட்டங்களில் தேர்தல் நடைபெறாது. தேவையில்லாமல் பதவி காலம் குறித்து குழப்பம் அடைய வேண்டாம்' என்றனர்.
Tags:
பொதுச் செய்திகள்