சமைக்காமல் சாப்பிடவே கூடாத 9 வகை உணவுகள்


நாம் உடல் ஆரோக்கியத்துடன் செயல்படவும் நோயின்றி வாழவும் பல வகையான சைவ மற்றும் அசைவ உணவுகளை உட்கொண்டு வருவதை வழக்கமாக்கிக் கொண்டுள்ளோம்.

அவற்றுள் ஏறக்குறைய அனைத்து வகை உணவுகளையும் சமைத்த பின்தான் உட்கொள்கிறோம். சில வகை உணவுகளை சமைக்காமல் அப்படியே பச்சையாகவும் உண்பதுண்டு. அப்படி உண்பதால் சில ஆரோக்கியக் குறைபாடுகளும் அசௌகரியங்களும் உண்டாவதற்கான வாய்ப்பு உண்டாகும். அவ்வாறு சமைக்காமல் பச்சையாக உண்பதைத் தவிர்க்க வேண்டிய 9 வகை உணவுகள் என்னென்ன என்பதை இப்பதிவில் பார்க்கலாம்.

1. குடை மிளகாய் (Capsicum) வகைகளை பச்சையாக உண்பது ஆபத்தானது. ஏனெனில் அவற்றின் விதைகளில் விஷத் தன்மை உடைய இரசாயனப் படிமங்கள் அல்லது நாடாப் புழுக்களின் முட்டைகள் போன்ற அசுத்தங்கள் கலந்திருக்க வாய்ப்புண்டு.

2. முட்டையை தகுந்த முறையில் சமைக்காமல் பச்சையாக உண்பது மிகவும் கெடுதல். ஏனெனில் அதில் சல்மோனெல்லா (salmonella) என்ற பாக்ட்டீரியா இருக்கக் கூடும். அது உணவு சார்ந்த இரைப்பை குடல் நோய்களையும் காய்ச்சலையும் வரவழைக்கக் கூடும்.

3. பச்சைப் பாலில் நோய்களை உண்டுபண்ணக்கூடிய E. கோலி, சல்மோனெல்லா மற்றும் கேம்பிலோபாக்ட்டர் (Cambylobacter) போன்ற பாக்ட்டீரியாக்கள் இருப்பதற்கான வாய்ப்புள்ளதால் பாலை காய்ச்சியே உபயோகிப்பது நல்லது.

4. உருளைக் கிழங்கில் இயற்கையிலேயே சொலானைன் (Solanine) என்ற நச்சுத் தன்மை உள்ளது. இது குடலில் சென்று வாந்தி போன்ற ஜீரணக் கோளாறுகளை உண்டுபண்ணும். எனவே, சமைக்காத உருளைக் கிழங்கை சாப்பிடுவதைத் தவிர்ப்பது நலம்.

5. உருளைக் கிழங்கில் உள்ளது போலவே கத்திரிக் காயிலும் சொலானைன் உள்ளது. பச்சைக் கத்திரிக்காயை உட்கொண்டால் குமட்டலும் வாந்தியும் வரும் வாய்ப்புள்ளது.

6. புரோக்கோலியை சமைத்து உண்பதால் அதிலுள்ள ஊட்டச் சத்துக்கள் குறையாது. வயிற்றுப் பிரச்னைகள் வரும் வாய்ப்பும் குறையும். எனவே இதை பச்சையாய் உண்பதைத் தவிர்ப்பது நலம்.

7. முட்டைகோஸையும் பச்சையாய் சாப்பிடுவதை அறவே தவிர்ப்பது நலம். இதிலும் E.கோலி, சல்மோனெல்லா போன்ற பாக்டீரியாக்கள் உள்ளன.

8. பீட்ரூட்டில் அதிகளவு நார்ச்சத்து உள்ளது. இதை பச்சையாக உண்ணும்போது ஜீரணமாவதில் சிரமம் உண்டாகி வயிற்றில் பிடிப்பு ஏற்படவும் கூடும்.

9. 'அர்பி கே பட்டே' எனப்படும் கொலொகாசியா (Colocasia) என்ற கிழங்கின் இலைகளில் ஆக்ஸலேட்ஸ் என்றொரு ஆர்கானிக் அமிலம் இருக்கக் கூடும். இது கிட்னியில் கற்கள் உற்பத்தியாகக் காரணியாகும்.

எனவே, மேற்கூறிய உணவுகளை எப்பவும் சமைத்தே உட்கொண்டு ஆரோக்கியம் காப்போம்.
Previous Post Next Post