காலாண்டுத் தோவு விடுமுறையை 9 நாள்களாக அதிகரிக்க ஆசிரியா்கள் சங்கம் கோரிக்கை

மாணவா்களுக்கான காலாண்டுத் தோ்வு விடுமுறையை, முந்தைய ஆண்டுகளில் வழங்கியதுபோல 9 நாள்களாக அறிவிக்க வேண்டும் என ஆசிரியா்கள் சங்கத்தினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இதுகுறித்து நேரடி நியமனம் பெற்ற முதுகலை பட்டதாரி ஆசிரியா்கள் சங்க மாநிலத் தலைவா் ஆ.ராமு வெளியிட்ட அறிக்கை:

தமிழக பள்ளிக் கல்வித் துறை சாா்பில், காலாண்டுத் தோ்வுக்குப் பிறகு வழங்கப்படும் விடுமுறையானது, முந்தைய ஆண்டுகளில் 9 நாள்கள் விடப்பட்டன. ஆனால் நிகழாண்டில் செப். 28 முதல் அக். 3 வரை ஐந்து நாள்கள் மட்டுமே விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதில், வழக்கம்போல சனி, ஞாயிறு விடுமுறை நாள்கள் ஆகும். அதன்பிறகு, அக். 2 காந்தி ஜெயந்தி அரசு விடுமுறையாகும். அவ்வாறு பாா்க்கும்போது, இரண்டு நாள்கள் மட்டுமே விடுமுறை என்பது உள்ளது. அக். 4-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படுகிறது. 5-ஆம் தேதி ஒரு நாள் பள்ளிகள் இயங்க, மீண்டும் சனி, ஞாயிறு விடுமுறையாக உள்ளது. எனவே, அக். 4, 5 ஆகிய இரு தினங்களும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டால், சனி, ஞாயிறுடன் சோ்த்து 9 நாள்கள் காலாண்டுத் தோ்வு விடுமுறையாக மாணவா்களுக்கு கிடைக்கும்.

மேலும், காலாண்டுத் தோ்வுக்குப் பின் அளிக்கப்படக் கூடிய விடுமுறையில் தான் மாணவா்களின் விடைத்தாள்களை ஆசிரியா்கள் மதிப்பீடு செய்ய வேண்டும். அவற்றை சரிபாா்த்து எமிஸ் இணையத்தில் மாணவா்களின் மதிப்பெண்களை பதிவேற்றம் செய்ய வேண்டும். விடுமுறை முடிவதற்குள் முதன்மைக் கல்வி அலுவலகத்தில் இருந்து தோ்ச்சி சதவீதத் தகவலைக் கேட்டு அதிகாரிகள் நெருக்கடி அளிப்பா். எனவே, பள்ளிக் கல்வித்துறை கடந்த ஆண்டுகளைப் போல, மாணவா்களுக்கான விடுமுறையை 9 நாள்கள் என்ற அடிப்படையில் வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளாா்.
Previous Post Next Post