இன்று (செப்.29) முதல் வானில் இரண்டு நிலவுகள் தெரியும் என அமெரிக்கா விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனை வெறும் கண்களால் பார்க்க முடியாது என்றும், வானில் உள்ள கோள்களை பார்க்க பயன்படுத்தப்படும் சிறப்பு தொலைநோக்கிகள் கொண்டு பார்க்க முடியும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்திருக்கின்றனர். அதாவது, வானில் நிறைய விண்கற்கள் புவி ஈர்ப்பு விசைக்கு அப்பால் சுழன்று கொண்டு இருக்கின்றன.
அதில் ஏதேனும் ஒரு விண்கல் அவ்வப்போது புவி ஈர்ப்பு விசைக்குள் கட்டுப்பட்டு சில நாட்கள் புவி வட்டப்பாதை நோக்கி சுழலும். அந்த நிகழ்வுதான் இன்று முதல் நடக்க இருக்கிறது. இதற்கு '2024 PT5' என பெயரிடப்பட்டுள்ள நிலையில், இந்த விண்கல்லானது, இன்று (செப்டம்பர் 29) முதல் நவம்பர் 25ஆம் தேதி வரை தென்படும்.
அமெரிக்க வானியல் ஆய்வு மைய ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, 2024 PT5 ஆனது சூரிய ஒளிபட்டு பூமியின் தற்காலிக 'மினி நிலவு' போல காட்சியளிக்கும். இதனை வெறும் கண்ணாலோ, நமது சாதாரண தொலைநோக்கி உதவியுடனோ பார்க்க முடியாது. அந்த சிறிய விண்கல் அளவு மிகசிறியது என்பதால் அதற்கென உள்ள விண்வெளி தொழில்முறை உபகரணங்களால் மட்டுமே பார்க்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இம்மாதிரியாக மினி நிலவுகள் தோன்றுவது இது முதல் முறையல்ல. ஏற்கனவே, கடந்த 1981 மற்றும் 2022 ஆகிய ஆண்டுகளில் வானில் தென்பட்டுள்ளது. கடந்த 2022ஆம் ஆண்டு தோன்றிய 'NX 1' என பெயரிடப்பட்டது. இன்று தோன்றும், '2024 PT5' மீண்டும் 2055இல் பூமியின் சுற்றுப்பாதைக்குத் திரும்பும் என்றும் வானியல் விஞ்ஞானிகள் கணித்துள்ளனர்.
Tags:
பொதுச் செய்திகள்