இருதய தசை வலுவிழப்பதால் வரும் பாதிப்பினை குறிப்பது இருதய செயலிழப்பு. ஆனால் அதற்கு அச்சப்படத் தேவையில்லை.
மனம் தளர்ந்து போக அவசியமில்லை. அதற்கான காரணத்தை கண்டுபிடித்து, அதனை சரி செய்து, உரிய மருந்துகளை தொடர்ந்து உட்கொண்டால் இந்த நோய் இல்லாதவர்களைப் போன்று பல வருடங்கள் உயிர் வாழ வாய்ப்புகள் அதிகம். மூச்சுத்திணறல் போன்ற காரணங்களினால் மருத்துவமனையில் அடிக்கடி உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு மருத்துவம் பார்க்கும் தேவையினையும் தவிர்க்கலாம்.
கீழே உள்ளவற்றை வாரம் ஒரு முறையாவது படித்து, கட்டுப்பாடுகளை ஞாபகம் வைத்துக்கொண்டு கடைபிடிப்பது அவசியம்:
1.மருந்துகளை விடாமல் உட்கொள்ள வேண்டும். மருந்தினால் வேறு ஏதாவது பாதிப்புகள் ஏற்பட்டால் மருத்துவரை அணுகுவது அவசியம்.
2.மருந்துக் கடைகளில் நேரடியாக வேறு ஏதாவது பிரச்சினைகளுக்கு, முக்கியமாக வலி நிவாரண மருந்துகளை வாங்கி உட்கொள்வதை தவிர்க்கவும்.
மரு. சு.பிரதீப் சக்கரவர்த்தி, டாக்டர் சிவக்கனி மருத்துவமனை உடுமலைப்பேட்டை.
3.மருந்தின் அளவை அதிகப்படுத்துவதில் உங்களுக்கு கூடுதல் நன்மை கிடைக்கும். அதே நேரம், சில மருந்துகள் சிலருக்கு சில பாதிப்பினை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. மருந்தின் அளவினை மாற்றும் பொழுது, ஒன்றிரண்டு வாரங்களில் மருத்துவர் உங்களைக் காண விரும்புவார். அப்பொழுது சிறுநீரக செயல் திறன் போன்றவற்றை கண்காணிக்க ரத்தப்பரிசோதனை செய்ய வேண்டும் என்பதனை அறிந்து கொள்ள வேண்டும். அதனால் மருத்துவரை பார்க்காமல் மருந்தினை மட்டும் வாங்கி உட்கொள்வதை தவிருங்கள்.
4.இருதயம் வலுவிழக்கும் பொழுது, உடலின் பல பாகங்களில் நீர் சேருவதற்கான வாய்ப்புள்ளது. அதனால் ஒரு நாளில் நீரின் (தேனீர், மோர், ரசம் உட்பட) அளவு 1250 மில்லி முதல் 1500 மில்லி வரை மட்டுமே உட்கொள்வது முக்கியம். நீர் அதிகமுள்ள பழங்களை உட்கொண்டால், அன்று நீர் உட்கொள்ளும் அளவினை மறக்காமல் குறைத்துக் கொள்ள வேண்டும். நீரை வெளியேற்றத் தேவையான மருந்துகளும் உங்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கலாம். உப்பு அதிகம் உள்ள பண்டங்களை உட்கொண்டாலும் அது நீரினை உள்ளிழுக்கும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
5.மது அருந்துவதும் புகை பிடிப்பதும் இதயத்திற்கு தீங்கு விளைவிக்கும்.
6.எடை பார்க்கும் கருவி ஒன்றினை வாங்கி வீட்டில் வைத்துக்கொள்வது அவசியம். உடல் எடையினை தினமும் காலை எழுந்தவுடன் சரிபார்த்து, எடை ஒரு கிலோவுக்கு மேல் கூடியிருப்பது தெரிந்தால் மருத்துவரை காண வருவது அவசியம். அவர் நீரை வெளியேற்றும் மருந்தின் அளவினை அதிகரிப்பார். அதன் மூலம் உங்கள் நுரையீரலில் நீர் சேர்வதை தவிர்க்க முடியும். அதனால் நள்ளிரவு மூச்சுத் திணறலினால் நீங்கள் அவசரமாக மருத்துவ உதவி நாடி வருவதற்கான தேவையும் குறையும்.
7.மிக முக்கியமான ஒன்று. உடல் நலம் தேறினாலும், வலுவிழந்த இதயம் மருந்தினால் மீண்டும் வலுப் பெற்றாலும் மருந்து உட்கொள்வதை தவிர்க்க வேண்டாம். அவ்வாறு செய்தால் இப்பிரச்சினை அதிக வீரியத்துடன் மீண்டும் உங்களை தாக்குவதற்கான வாய்ப்பு அதிகம்.
8.சிலருக்கு இருதய ரத்த ஓட்டம் சீராக இல்லாததால் அது வலுவிழக்கலாம். அதனை ஆஞ்சியோ மூலம் கண்டுபிடித்து சரி செய்து, மருந்தும் உட்கொண்டால் நன்மை அதிகம்.
9. சிலருக்கு பேஸ்மேக்கர் கருவியினை பொருத்தினால் இருதயம் வலுப்பெறும். அது அவசியமாகும் போது மருத்துவர் அதனை உங்களுக்கு புரியும்படி விளக்குவார்.
10. இந்தப் பிரச்சினையுடன் ரத்தக்குறைபாடு இருந்தால் இரும்புச்சத்து ஊசி போடத் தேவைப்படலாம். மேலும் நுரையீரல் கிருமித் தொற்றினால் உடல் நிலை மோசமாகாமல் தடுக்க ஒவ்வொரு வருடமும் ஃப்ளூ(flu)தடுப்பூசி போடுவது நலம்.
11.சில மணி நேரம் படுத்து, பின் எழும்போது ரத்த அழுத்தம் சிறிது குறைந்து உங்களுக்கு தலை சுற்றல் ஏற்படலாம். இரவு அல்லது அதிகாலை எழும் போது இதற்கான வாய்ப்பு அதிகம். ஒரு ஐந்து நிமிடங்கள் உட்கார்ந்து எழுவது இதற்கான சாத்தியங்களை குறைக்கும்.
வலுவிழந்த இதயத்தை மருத்துவத்தின் வலிமை கொண்டு மீட்டெடுங்கள். மனம் தளறாமல், கட்டுப்பாடுகளை மறவாமல் ஆரோக்கியத்துடன் வாழுங்கள்.
Tags:
உடல் நலம்