தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளின் கீழ் 25 மாநகராட்சிகள், 142 நகராட்சிகள், 561 பேரூராட்சிகள், 12 ஆயிரத்து 525 கிராம பஞ்சாயத்துகள், 388 ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் 36 மாவட்ட ஊராட்சிகளும் செயல்பட்டு வருகின்றன.
இதில், 2019ல், 27 மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தல் நடந்தது. இந்நிலையில் கடந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற தலைவர்கள், வார்டு கவுன்சிலர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள் உள்ளிட்ட உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக்காலம் வரும் ஜனவரி 5ம் தேதியுடன் முடிவடைகிறது.
எனவே, இந்த 27 மாவட்டங்களிலும் ஊரக உள்ளாட்சி தேர்தலை நடத்தும் பணியில் மாநில தேர்தல் ஆணையம் ஈடுபட்டுள்ளது. இதுகுறித்து, தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையச் செயலர் கே.பாலசுப்ரமணியம், மாவட்ட ஆட்சியர்களுக்கு அனுப்பியுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:- "உள்ளாட்சி அமைப்புகளின் தேர்தலுக்குத் தேவையான அனைத்து வாக்குப் பதிவு பொருட்களையும் தயார் நிலையில் வைத்திருப்பது அவசியம்.
அதுமட்டுமின்றி, ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கு பயன்படுத்தப்படும் அனைத்து வகையான வாக்குப்பெட்டிகளும், தற்போதைய தரம் மற்றும் நிலையை, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் நேரடியாகப் பார்வையிட்டு, வாக்குப்பதிவுக்குப் பயன்படுத்த நல்ல நிலையில் உள்ளதா என்று, மறுசீரமைப்பு செய்யலாம். பழுதுபார்க்கப்பட்ட பிறகு வாக்குப்பதிவுக்கு பயன்படுத்தப்பட்டு, முற்றிலும் சேதமடைந்து பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளதை தனியாக பிரித்து வைக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
Tags:
பொதுச் செய்திகள்