ஸ்மார்ட் மீட்டர் திட்டம் குறித்து முக்கிய உத்தரவு ஒன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது.. இதுகுறித்து தமிழக மின் வாரியத்திடம், மத்திய மின் துறை தெரிவித்திருப்பது என்ன?
என்பது குறித்த தகவல்களும் வெளியாகியிருக்கின்றன.
தமிழக மின் வாரியத்தில் ஏற்படும் செலவினங்களை குறைக்கவும், மின் பயன்பாட்டில் கணக்கீட்டில் வெளிப்படைத்தன்மை இருக்கவும், ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை கொண்டுவரப்போவதாக மின்வாரியம் தெரிவித்திருந்தது. இதற்கான டென்டரும் அறிவிக்கப்பட்டு, அதற்கான பணிகளும் நடந்து வருகின்றன.
கிட்டத்தட்ட 25,000 தொழில் நிறுவனங்களில், ஆளில்லாமல் மின் பயன்பாட்டை கணக்கெடுக்க, ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் திட்டத்தை தமிழக மின்வாரியம் செயல்படுத்தப்போவதாகவும், இதற்காகவே மீட்டர் பொருத்தப்பட்ட நிலையில், சிம் கார்டு வாங்குவதுடன், மென்பொருள் தயாரிப்பு பணியிலும் ஈடுபட்டிருப்பதாகவும் செய்திகளும் வெளியாகி வந்தன.
சர்வர் இணைப்பு: இந்த ஸ்மார்ட் மீட்டரில், மாதந்தோறும் கணக்கெடுக்கும் தேதி, மென்பொருள் வடிவில் பதிவேற்றம் செய்யப்பட்டு, தொலைதொடர்பு வசதியுடன், அலுவலக, சர்வரில் இணைக்கப்படுவதால், குறிப்பிட்ட தேதி வந்ததுமே, தானாகவே கணக்கெடுத்து, நுகர்வோருக்கு கட்டணம் அனுப்பப்பட்டுவிடும். இதற்காக, 4ஜி அலைவரிசையில் இயங்கும் வகையில் சிம்கார்டு வாங்கும் நடவடிக்கையிலும் மின்வாரியம் ஈடுபட்டுள்ளது.
அதுமட்டுமல்ல, மின் கணக்கீட்டுக்கு புதிய சாப்ட்வேர் ஒன்றும் தயாரிக்கப்பட்டு வருகிறது. சிம்கார்டு மூலமாக கிடைக்கும் தொலைத்தொடர்பு சேவையைப் பயன்படுத்தி மாதந்தோறும் ஆளில்லா மின்பயன்பாடு கணக்கு எடுக்கப்படும் என்றும் மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.
மின் பகிர்மானம்: இப்படிப்பட்ட சூழலில், ஸ்மார்ட் மீட்டர் குறித்த புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. இந்தியா முழுதும் மறுசீரமைக்கப்பட்ட மின் பகிர்மான திட்டத்தை, மத்திய அரசு செயல்படுத்தியுள்ள நிலையில், மின் இழப்பை பூஜ்ஜியமாக குறைக்க, புதிய மின் வழித்தடம் அமைக்கப்பட வேண்டும் என்பதிலும் முனைப்பு காட்டி வருகிறது.
அத்துடன், மின்சாரம் விற்பனைக்கு ஏற்ப வருவாய் கிடைப்பதை உறுதி செய்ய, டிரான்ஸ்பார்மர், மின் வழித்தடங்களில், ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்தப்பட வேண்டும் என்பதிலும் உறுதியாக உள்ளதால், நாடு முழுதும் மறுசீரமைக்கப்பட்ட மின் பகிர்மான திட்டத்தை, மத்திய அரசு செயல்படுத்தியுள்ளது.
மறுசீரமைப்பு: எனவேதான், மறுசீரமைப்பு திட்டத்தை, தமிழகத்தில், 10,600 கோடி ரூபாயில் மேற்கொள்ள, மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதில், மத்திய அரசு, 6,360 கோடி ரூபாயை கடனாகவும் வழங்குகிறது. இந்த நிதியாண்டிற்குள் திட்ட பணிகளை முடித்து விட்டால், மத்திய அரசு தரும் கடனை திரும்ப செலுத்த தேவையில்லை. அந்த கடன் மானியமாகி விடும். இல்லாவிட்டால் வட்டியுடன், கடனை திரும்ப செலுத்த வேண்டியிருக்கும்.
அதனால்தான், வீடு, வணிக நிறுவனங்களில் துல்லியமாக மின் பயன்பாட்டை கணக்கெடுக்க, ஆளில்லாமல் தொலைத்தொடர்பு வசதியுடன் கணக்கெடுக்கும் ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை செயல்படுத்த, மாநில அரசுகளுக்கு, மத்திய அரசு தற்போது உத்தரவிட்டுள்ளது.
தாமதம் கூடாது: அந்தவகையில், நம்முடைய தமிழக மின் வாரியமும், 3 கோடி மின் இணைப்புகளில் ஸ்மார்ட் மீட்டர் பொருத்த உள்ளது. இதற்காக மீட்டர் பொருத்தும் பணிகளை மேற்கொள்ளும் ஒப்பந்த நிறுவனத்தை தேர்வு செய்ய, கடந்த ஆண்டில், 'டெண்டர்' கோரப்பட்டது. இதுதொடர்பாக இன்னும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.
இப்படிப்பட்ட சூழலில், "ஸ்மார்ட் மீட்டர்" திட்டத்தை விரைவாக செயல்படுத்த வேண்டும் என்றும், இனியும் தாமதம் செய்தால் மறுசீரமைப்பு திட்டத்திற்கான மானியம் வழங்கப்படாது என்றும் மின் வாரியத்திடம், மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஏற்கனவே டெண்டர் விடப்பட்டிருப்பதால், இதற்கான பணிகளை தமிழக மின்வாரியமும் விரைந்து துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
Tags:
பொதுச் செய்திகள்