பட்டா.. பத்திர ஆபீஸ் போனவர்களுக்கு இன்ப அதிர்ச்சி.. ஒரே நாளில் அடியோடு மாறிய சிஸ்டம்


தமிழக அரசு பொதுமக்களின் வசதிக்காக பத்திரப்பதிவின் போதே உடனடியாக பட்டா பெயர் மாற்றம் செய்யும் வசதியை அண்மையில் சோதனை அடிப்படையில் அறிமுகம் செய்தது.

இந்த ஒரு நிமிட பட்டா திட்டத்தை தற்போது முழுமையாக விரிவாக்கம் செய்துள்ளது. அதன்படி கிராமப்புற வீடுகளை பத்திரப்பதிவு செய்யும் போதே உடனடியாக பட்டா வழங்கப்படுகிறது. ஆகஸ்ட் 3ம் தேதி முதல் பட்டா பெயர் மாற்றம் செய்யும் பணிகள் உடனுக்குடன் நடக்கிறது..

பத்திரப்பதிவு முடிந்த பின்னர் பட்டா வாங்கும் விவகாரத்தில் விஏஓ, நிலஅளவையர், தாசில்தார் என அலுவலகம் அலுவலகமாக அலைய வேண்டிய நிலை முடிவுக்கு வந்துள்ளது. தமிழக அரசு பொதுமக்களின் வசதிக்காக பத்திரப்பதிவின் போதே உடனடியாக பட்டா பெயர் மாற்றம் செய்து வழங்கும் ஒரு நிமிட பட்டா திட்டத்தை (தானியங்கி பட்டா) நேற்று முதல் கிராமங்களில் நடைமுறைப்படுத்தி இருக்கிறது.

இந்த திட்டத்தின் மூலம் நகர் பகுதிகளில் உள்ள குடியிருப்புகள் மற்றும் கிராமங்களில் உள்ள விவசாய நிலங்களை பத்திரப்பதிவின் போதே பெயர் மாற்றம் செய்து தந்துவிடுவார்கள். முன்னதாக இந்த திட்டத்தில் கிராமங்களில் நத்தம் என வகைப்படுத்தப்பட்ட குடியிருப்புகளுக்கு உடனடியாக பட்டா வழங்கப்படாமல் இருந்து வந்த நிலையில் ஒரு நிமிட பட்டா திட்டத்தை, தமிழக அரசு தற்போது விரிவாக்கம் செய்து உள்ளது. அதற்காக பத்திரப்பதிவுத்துறை சர்வரில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன. எனவே இனி, கிராமங்களில் உள்ள வீடுகளை பத்திரப்பதிவு செய்யும் போதே உடனடியாக பட்டா பெயர் மாற்றம் செய்யப்படும். இந்த பணி நேற்றே தொடங்கிவிட்டது. இது தொடர்பாக தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

எனவே தமிழக அரசின் உத்தரவின்படி பத்திரப்பதிவு செய்யும் போதே பட்டா மாற்றம் செய்யும் பணிகள் முழு அளவில் வருவாய் துறை சார்பில் நடந்து வருகிறது. உட்பிரிவு செய்ய தேவையில்லாத நிலங்களை பத்திரப்பதிவு செய்யும் போதே உடனடியாக பட்டா மாற்றம் செய்து தந்துவிடுகிறார்கள் அதிகாரிகள் . அதேநேரம் அரசின் வருவாய்த்துறை, கிராமப்புறங்களில் உள்ள நத்தம் குடியிருப்பு பட்டா விவரங்களை பொதுமக்கள் எளிதாக பார்க்கும் வகையில்https://eservices.tn.gov.in/eservicesnew/ home.htmlஎன்ற இணையதளத்தை அரசு மேம்படுத்தி இருக்கிறது.

தமிழகத்தில் உள்ள 317 தாலுகாக்களில் 17 தாலுகாக்கள் முற்றிலும் நகர்புறத்தில் உள்ள நிலையில், மீதமுள்ள 300 தாலுகாவில் முதல்கட்டமாக 220 தாலுகாக்களில் நத்தம் குடியிருப்பு பகுதிகளின் பட்டா விவரங்களை பார்வையிடும் வகையில் இந்த வசதி இணையதளத்தில் செய்யப்பட்டுள்ளது. இந்த இணையதளம், பத்திரப்பதிவு துறை சர்வரில் ஒருங்கிணைக்கப்பட்டிருப்பதால், மொத்தம் 220 தாலுகாவில் உள்ள நத்தம் குடியிருப்புகளை பத்திரப்பதிவு செய்யும் போதே இனி பட்டா பெயர் மாற்றம் செய்யப்படும். கடந்த சனிக்கிழமை சோதனை அடிப்படையில் கொண்டுவரப்பட்ட பணிகள், ஆகஸ்ட் 3ம் தேதி முதல் பட்டா பெயர் மாற்றம் செய்யும் பணிகள் எந்த பிரச்சனைகளுமின்றி நடக்கிறது.

எனவே பத்திரப்பதிவு செய்வோர், அப்போதே பட்டா பெயர் மாற்றத்திற்கு தயாராக வேண்டும். அதற்கு பத்திரப்பதிவு செய்யும் போதே, அதன் உரிமையாளர் பெயரில் பட்டா இருக்கிறதா என்பதனை மக்கள் கண்டிப்பாக சரிபார்க்க வேண்டும். அப்படி அவர்களது பெயரில் பட்டா இல்லாவிட்டால், முதலில் அவர்களை பட்டா மாற்றி வாருமாறு நீங்கள் கூற வேண்டும். அதன்மூலம் அவர்களது பெயரில் பட்டா இருக்க வேண்டும். அப்படி செய்தால், நீங்கள் கிரையம் செய்யும்போது உங்கள் பெயருக்கு பட்டா எளிதாக மாறி விடும். எனவே நீங்கள் நிலம் வாங்குவோரின் பெயரில் பட்டா இல்லாவிட்டால், அதனை கண்டிப்பாக கவனித்து மாற்றுங்கள்.
Previous Post Next Post