இன்று சென்னையில் ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டம்

சென்னை அசோக்நகர் அரசு மேல்நிலைப் பள்ளி பிரச்சனை இப்போது தான் கொஞ்சம் கொஞ்சமாக சர்ச்சை செய்திகளில் இருந்து மறைந்து வருகிறது.

அதற்குள் பள்ளி, கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷூக்கு அடுத்த சிக்கல். இன்று சென்னையில் பகுதிநேர ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளனர்.

செய்தியாளர்களின் முன்னிலையில், ஆவேசமாக, 'என் ஏரியாவுக்கு வந்து என் ஆசிரியரை அவமானப்படுத்தியவரை சும்மா விட மாட்டேன்' என்று ஒரு ஆசிரியருக்காக பொங்கிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர், தமிழகம் முழுவதும் நாங்கள் ஆயிரக்கணக்கான பேர் இருக்கிறோம். எங்களுக்கு ஏன் பாரா முகமாக இருக்கிறார் என்று கேட்கிறார்கள் தொடர்ந்து கோரிக்கைகளை வைக்கும் பகுதி நேர ஆசிரியர்கள்.

முன்னதாக தமிழகத்தில் அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரிந்து வரும் பகுதிநேர ஆசிரியர்கள் சென்னை டிபிஐ வளாகத்தில் பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் ச.கண்ணப்பனை சந்தித்து கோரிக்கை மனுவை வழங்கினார். கடந்த 12 ஆண்டுகளாக தொகுப்பு ஊதியத்தில் பணிபுரிந்து வரும் தங்களை, பணிநிரந்தரம் செய்வதாக, திமுக கடந்த சட்டமன்ற தேர்தல் வாக்குறுதியாக அளித்திருந்ததை நிறைவேற்ற வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது. இதனை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட போவதாக தெரிவித்தனர்.


இது குறித்து பகுதிநேர ஆசிரியர் சங்கங்களின் கூட்டுக்குழு ஒருங்கிணைப்பாளர் கூறுகையில், "திமுக தேர்தல் அறிக்கையில் பகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்வதாக அறிவித்தது. ஆனால், இதுவரை தமிழக அரசு அதற்கான எந்த முயற்சிகளையும் எடுக்கவில்லை. பலமுறை கோரிக்கை வைத்தும் பலனில்லை. அதனால் தமிழக அரசுக்கு நினைவூட்டும் வகையில் எங்கள் கோரிக்கையை வலியுறுத்தி சென்னையில் செப்டம்பர் 12ம் தேதி வியாழக்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்பட உள்ளது. இதில் தமிழகம் முழுவதிலும் இருந்து 1000 பகுதிநேர ஆசிரியர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.


தங்கள் நிலையை பள்ளிக் கல்வித் துறை அமைச்சரை சந்தித்து பேசும் போதெல்லாம் கூறி விளக்கினோம். அவர் முதல்வரிடம் கலந்து பேசி நிறைவேற்றித் தருவோம் எனக் கூறியிருந்தார். ஜாக்டோ- ஜியோ கூட்டமைப்பிலும் அங்கம் வகித்தாலும் தற்போதைய கோரிக்கைக்காக தனியே போராட்டத்தை முன்னெடுத்துள்ளோம்" எனத் தெரிவித்துள்ளார்.
Previous Post Next Post