வெந்தயம் தரும் அபார ஆரோக்கிய நன்மைகள்!


அறிவியல் தொழில் நுட்பம் பெருகிவிட்ட இக்காலத்தில், கூடவே வியாதிகளும் பெருகிவிட்டன. நாற்பது வருடங்களுக்கு முன்னர் ஹார்ட்அட்டாக் என்பது எப்போதாவது கேள்விப்படும் ஒரு வார்த்தையாக இருந்தது.

அதுவும் அறுபது எழுபது வயதுக்கு மேல்தான் இந்தக் கொடிய வியாதி யாரையாவது தாக்கும். ஆனால், தற்காலத்தில் இருபது வயது இளைஞனைக் கூட இந்த வியாதி அழித்து விடுகிறது. இதற்குக் காரணம் நமது நவீன உணவுப் பழக்கமே. உடல் உழைப்பு குறைந்து போனது மற்றொரு காரணமாகும். உடல் ஆரோக்கியத்துக்கு பெரிதும் உதவும் வெந்தயம் தரும் ஆரோக்கிய நன்மைகள் குறித்து இந்தப் பதிவில் காண்போம்.

ஹார்ட்அட்டாக் பெரும்பாலும் அதிக உடல் உழைப்பு இல்லாதவர்களுக்கும் எண்ணெய் மற்றும் கொழுப்பு சத்து நிறைந்த உணவுகளை அடிக்கடி உண்ணுபவர்களையுமே குறிவைக்கிறது. வெகு சிலருக்கு பரம்பரை நோயாகவும் இது அமைந்துவிடுகிறது. நமது முன்னோர்கள் சமையல் அறையில் பலவிதமான மருந்துகளை நமக்காக அறிமுகப்படுத்தி வைத்துச் சென்றிருக்கிறார்கள். அப்படிப்பட்ட ஒரு உணவுப்பொருளே வெந்தயம்.

வெந்தயம் எகிப்து, கிரேக்க நாடுகள், ரோம், வட அமெரிக்கா, மத்திய கிழக்கு நாடுகள், இந்தியா மற்றும் சீனா போன்ற நாடுகளில் மருந்தாக உபயோகிக்கப்படுகிறது. அதிக கொழுப்பு சத்துள்ள உணவினை அடிக்கடி சாப்பிடுபவர்கள் கட்டாயம் சாப்பிட வேண்டிய ஒரு பொருள் வெந்தயம். ஆயுர்வேதத்தில் வெந்தயம் மிகச்சிறப்பான இடத்தில் வைத்து போற்றப்படுகிறது. வெந்தயத்தில் இருபத்திமூன்று சதவிகிதம் புரோட்டீன் மற்றும் பத்து சதவிகிதம் கார்போஹைட்ரேட், பத்து சதவிகிதம் எண்ணெய் சத்து போன்றவை காணப்படுகின்றன.

வெந்தயத்தைத் தொடர்ந்து சாப்பிடுவதன் மூலம் அதிலுள்ள அதிகப்படியான நார்ச்சத்துக்கள் நம் உடலில் தங்கும் அதிகப்படியான கெட்ட கொழுப்பினை கரைத்துவிடுகிறது. மேலும், இரத்தத்தில் அதிகப்படியாக காணப்படும் கொழுப்பை குறைக்கும் தன்மை கொண்டது வெந்தயம். இரத்தம் மற்றும் சிறுநீரில் காணப்படும் சர்க்கரையின் அளவினையும் இது குறைக்கிறது. சர்க்கரை நோயை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளும் சக்தி வெந்தயத்திற்கு உண்டு. வெந்தயத்தை இன்சுலினுக்கு மாற்றாக எடுத்துக் கொள்ளலாம் என்று கண்டறிந்திருக்கிறார்கள்.
 

வெந்தயம் வயிற்று உபாதைகள், இரைப்பை பிரச்னைகள், இரத்த சோகை, கல்லீரல் பிரச்னைகள் போன்றவற்றைத் தீர்க்கிறது. முடி உதிரும் பிரச்னைக்கும் வெந்தயம் மருந்தாக அமைகிறது. இரத்தத்தை உற்பத்தி செய்யும் ஆற்றல் வெந்தயத்திற்கு உண்டு.

வெந்தயத்தை சிறிதளவு எடுத்து அதை இரவில் தண்ணீரில் ஊறவைத்து காலையில் உணவு சாப்பிடும் முன்னால் குடித்துவிடவேண்டும். இல்லையென்றால் வெந்தயத்தை பொடியாக ஆக்கி தினமும் காலை மற்றும் இரவு வேளைகளில் ஒரு சிறிய டீஸ்பூன் அளவிற்கு எடுத்துக்கொள்ள வேண்டும். வெந்தயத்தை அளவிற்கு அதிகமாகப் பயன்படுத்தக் கூடாது. வெந்தயம் பாலூட்டும் தாய்மார்களுக்கு ஒரு சிறந்த மருந்தாகும். இதை தினமும் சிறிது சாப்பிட்டு வந்தால் தாய்ப்பால் நன்கு சுரக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது. வெந்தயத்தில் ஈஸ்ட்ரோஜன் அடங்கியுள்ளதால் இதை பெண்கள் கர்ப்ப காலத்தில் சாப்பிடக்கூடாது.

வெந்தயத்தை சாப்பிடப் பிடிக்காதவர்கள் அதை வெந்தயக்கீரை வடிவத்திலும் பயன்படுத்தலாம். வெந்தயத்தைப் போலவே வெந்தயக்கீரையும் உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவுகிறது. வெந்தயக்கீரை முதன்முதலாக கிழக்கு ஐரோப்பாவில் பயிரிடப்பட்டது. இதன் பின்னர் பல நாடுகளுக்கும் இடம்பெயர்ந்தது. குறிப்பாக, வடஇந்தியாவில் இந்தக் கீரை அதிக அளவில் பயிரிடப்படுகிறது. வெந்தயக்கீரை தாது உப்புக்களையும் வைட்டமின்களையும் கொண்டது.

வெந்தயக் கீரையில் புரோட்டீன், கால்சியம், பாஸ்பரஸ், மக்னீசியம், இரும்புச்சத்து, பொட்டாசியம், செலினியம், சிறிதளவு கொழுப்பு, நார்ச்சத்து, வைட்டமின் சி, சிறிதளவு பி காம்ப்ளக்ஸ் போன்ற தாதுப்பொருட்கள் நிறைந்துள்ளன. வயிறு சம்பந்தமான பிரச்னைகளுக்கு இதைச் சாப்பிடுவதன் மூலம் பலன் பெறலாம். இதய நோய் உள்ளவர்கள் இதனைத் தொடர்ந்து சாப்பிட வேண்டும். வாய்ப்பு கிடைக்கும் போது வெந்தயக் கீரையினை பயன்படுத்தப் பழகிக்கொள்ள வேண்டும். மாதத்திற்கு இரண்டு முறையாவது வெந்தயக்கீரையினை பயன்படுத்துங்கள். ஆரோக்கியமாக வாழுங்கள்.
Previous Post Next Post