வங்கி கணக்கு வைத்திருப்பவர் இறந்துவிட்டால் அவருடைய பணம் யாரைச் சேரும்? இதுதான் ரூல்ஸ்!

பொதுவாக வங்கி கணக்கு பெற விண்ணப்பிக்கும் போது வங்கிகள் நாமினியை குறிப்பிடச் சொல்லி படிவத்தை வழங்கும்.

எந்த ஒரு வங்கி கணக்கிற்கும் நாமினி இருக்க வேண்டியது உண்மையில் அவசியமா? ஆம் கண்டிப்பாக ஒரு நாமினி இருப்பது அவசியம். வங்கிக் கணக்கு வைத்திருப்பவர் எதிர்பாராத விதமாக இறந்துவிட்டால் அவருடைய தொகை அந்த நாமினிக்கு போய் சேரும். ஒரு வேலை வங்கி கணக்கு வைத்திருப்பவர் நாமினியை குறிப்பிடாமல் இருந்தால்..

அவருடைய பணம் என்னவாகும்? என்பது குறித்து இந்தப் பதிவில் பார்ப்போம். வங்கி கணக்கிற்கான நாமினேஷன்: வங்கி கணக்கு திறக்கும் போது ஒரு நாமினி நியமிக்கப்பட வேண்டும். ஏனெனில் கணக்கு வைத்திருப்பவர் செய்திருக்கும் டெபாசிட் மற்றும் முதலீடு யாருக்கு செல்ல வேண்டும் என்பதை தீர்மானிப்பதற்காகத்தான் இந்த நாமினேஷன்.

ஒரு கணக்கின் உரிமையாளர் நாமினியைக் குறிப்பிடவில்லை என்றால், உரிமையாளர் இறந்த பிறகு, கணக்கில் உள்ள பணம் அல்லது கணக்கிற்கு தொடர்புடைய சொத்துக்களைப் பெற, சட்டரீதியான வாரிசுகள் நீண்ட மற்றும் சிக்கலான செயல்முறையைச் செய்ய வேண்டியிருக்கும். யார் நாமினியாக இருக்க முடியும்?: ஒரு வங்கி கணக்கிற்கு ஒரு நாமினி இருக்கலாம் அல்லது இரண்டு மூன்று பேரை நாமினியாக நாமினேட் செய்யலாம். ஒரு நபர் தங்களுடைய குழந்தை மனைவி போன்ற குடும்ப உறுப்பினர்களை நாமினியாக தேர்ந்தெடுக்கலாம். வெவ்வேறு வங்கிக் கணக்குகளுக்கு வெவ்வேறு நாமினிகள் இருக்கலாம்.

அதேபோல ஒரு வங்கியில் பிக்சட் டெபாசிட் வைத்திருப்பவர், அதற்கு ஒரு நாமினியையும், தொடர் வைப்பு கணக்கு வைத்திருப்பவர் அதற்கு ஒரு நாமினியையும் தேர்வு செய்யலாம். நாமினிக்கு பொருந்தும் சில விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்: ஒரு நபர் ஒரு NRI-ஐயும் நாமினியாகப் பரிந்துரைக்கலாம். ஆனால் அந்தத் தொகை இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) அனுமதியுடன் மட்டுமே திருப்பி தரப்படும். வங்கிகளில் இருக்கும் சேவிங்ஸ் அக்கவுண்ட் அல்லது கரண்ட் அக்கவுண்டில் 10 வருடங்களுக்கு மேல் எந்தப் பணப்பரிமாற்றமும் இல்லாமல் இருந்தால் அல்லது FD முதிர்ச்சித் தேதி முடிந்து 10 வருடங்கள் சென்ற பிறகும் அந்தத் தொகையை அக்கவுண்ட்டில் இருந்து எடுக்காமல் இருந்தால், அந்தக் கணக்கில் இருக்கும் தொகையானது ரிசர்வ் வங்கியின் DEAF(Depositor Education and Awareness Fund) அக்கவுன்ட்டுக்கு மாற்றப்பட்டுவிடும்.

இதற்காக ரிசர்வ் வங்கி "100 Days 100 Pays" என்ற திட்டத்தை அறிமுகம் செய்தது இதன் மூலம் எந்தெந்த வங்கிகளில் கேட்கப்படாத தொகை இருக்கிறதோ அந்த நபர்களின் பட்டியலை 100 நாட்களுக்குள் பைசல் செய்து முடிக்க வேண்டும் என்ற அறிவிப்பை வெளியிட்டது. நாமினியின் விவரங்கள் எதுவுமே வங்கி கணக்கில் இல்லை என்றாலும் அவருடைய சட்டபூர்வ வாரிசுகளுக்கு பணம் செல்லும். கணக்கு வைத்திருப்பவரின் சட்டபூர்வ வாரிசுகளான மனைவி குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள் என யார் வேண்டுமானாலும் பணத்தை கோரலாம். ஆனால் அதற்கு இறப்புச் சான்றிதழ், சட்டபூர்வ வாரிசின் புகைப்படம், இறந்தவரின் கேஒய்சி போன்ற ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும். ஒருவேளை 10 வருடங்களுக்கு மேலாக எந்தவித பரிவர்த்தனையும் இல்லாமல் இருந்தால் அந்தந்த வங்கிகள் கணக்கை மூடிவிட்டு மேலே கூறியது போல் அரசின் கருவூலத்திற்கு பணம் சென்றுவிடும். மேலும் கணக்கு வைத்திருப்பவர் இறக்கும் பட்சத்தில் சட்டபூர்வ வாரிசுகள் கணக்கு வைத்திருப்பவரின் பணத்திற்கு வரி செலுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post