TNPSC Group 2; டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 தேர்வு எப்படி இருந்தது? கட் ஆஃப் எவ்வளவு இருக்கும்?



டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 முதல்நிலைத் தேர்வு நடைபெற்று முடிந்துள்ள நிலையில், தேர்வு எப்படி இருந்தது?

கட் ஆஃப் எப்படி இருக்கும் என்பதை இப்போது பார்ப்போம்.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அமைச்சு பணிகள், வாரியங்கள், வனப் பணி மற்றும் பொதுத் துறை நிறுவனங்களில் காலியாக உள்ள இரண்டாம் நிலை பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 2, 2ஏ முதல்நிலைத் தேர்வை நேற்று (செப்டம்பர் 14) நடத்தியது. இந்தத் தேர்வு மூலம் மொத்தம் 2327 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் நேர்முகத் தேர்வு அடங்கிய 507 பணியிடங்களும், நேர்முகத் தேர்வு அல்லாத 1820 பணியிடங்களும் நிரப்பப்பட உள்ளன.

குரூப் 2 முதல்நிலைத் தேர்வுக்கு 7 லட்சத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்திருந்த நிலையில், 5.81 லட்சம் தேர்வர்கள் தேர்வு எழுதியுள்ளனர். அதாவது வருகை சதவிகிதம் 73.22% ஆக உள்ளது.
இந்தக் குரூப் 2 முதல்நிலைத் தேர்வு இரண்டு பகுதிகளாக நடைபெற்றது. முதல் பகுதியில் பொது அறிவில் 75 கேள்விகளும், திறனறி பகுதியில் 25 கேள்விகளும் இடம்பெற்றன. இரண்டாம் பகுதி மொழிப் பாடப்பகுதி. இதில் தமிழ் அல்லது ஆங்கில பாடத்தில் இருந்து 100 கேள்விகள் இடம்பெற்றன.

இந்தநிலையில், குரூப் 2 தேர்வு எப்படி இருந்தது, கட் ஆஃப் எப்படி இருக்கும் என்பதை இப்போது பார்ப்போம். நடந்து முடிந்த குரூப் 2 தேர்வைப் பொறுத்தவரை கடந்த ஆண்டை விட சற்று கடினமாக இருந்ததாக தேர்வர்களும் நிபுணர்களும் தெரிவிக்கின்றனர்.

தமிழ் பாடப்பகுதியைப் பொறுத்தவரை சில கேள்விகள் பழைய பாடப் புத்தகங்களில் இருந்தும் சிறப்புத் தமிழ் புத்தகங்களில் இருந்தும் இடம்பெற்றிருந்தன. இருப்பினும் தமிழில் 90 கேள்விகள் வரை எளிதாக விடையளிக்கக் கூடியதாக இருந்தன.

கணிதப் பகுதியைப் பொறுத்தவரை 20-22 கேள்விகள் வரை சற்று எளிதாக இருந்தன. திறனறி பகுதியில் கேள்விகள் சற்று அதிகமாக இருந்தன. நன்றாக பயிற்சி செய்தவர்கள் 22 கேள்விகளுக்கு மேல் சரியாக விடையளித்திருக்கலாம்.

பொது அறிவுப் பிரிவைப் பொறுத்தவரை நடப்பு நிகழ்வுகள் மற்றும் அறிவியல் பாடங்களிலிருந்து கேள்விகள் குறைவாக இருந்தன. வரலாறு, அரசியலமைப்பு, புவியியல் பகுதிகள் கேள்விகள் அதிகமாக கேட்கப்பட்டிருந்தன. 45 கேள்விகள் வரை எளிதாக பதில் அளிக்கக் கூடிய கேள்விகளாக இருந்தன. கடந்த சில தேர்வுகளாகவே, டி.என்.பி.எஸ்.சி தேர்வுகளில் நேரடி கேள்விகளுடன், யோசித்து (அனாலைஸ் செய்து) பதில் அளிக்கக் கூடிய கேள்விகள் அதிகரித்து வருகின்றன. பாடப் புத்தகங்களைத் தவிர பொது அறிவு தொடர்பாக நிறைய படித்தவர்கள் இதுபோன்ற கேள்விகளுக்கு எளிதாக பதில் அளிக்கலாம்.

எனவே இந்த குரூப் 2 முதல்நிலைத் தேர்வில் 155 கேள்விகளுக்கு மேல் சரியாக விடையளித்தவர்கள் விரிவான விடையளிக்கும் (குரூப் 2 நேர்முகத் தேர்வு பதவிகள்) முதன்மைத் தேர்வுக்கு தகுதி பெற வாய்ப்புள்ளது. 145 கேள்விகளுக்கு மேல் எடுத்தவர்கள் கொள்குறி வகை (குரூப் 2ஏ) முதன்மைத் தேர்வுக்கு தகுதி பெற வாய்ப்புள்ளது. அதேநேரம் இடஒதுக்கீட்டுப் பிரிவு வாரியாக இந்த கட் ஆஃப் கூடவோ அல்லது குறையவோ வாய்ப்புள்ளது என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
Previous Post Next Post